பாடல் #488: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
குயிற்குஞ்சு முட்டை காக்கைதன் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.
விளக்கம்:
குயில் தனது முட்டையை காக்கையின் கூட்டில் கொண்டு போய் போட்டுவிட்டு வந்துவிடும். காக்கைக்கு குயிலின் முட்டைக்கும் தன்னுடைய முட்டைக்கும் வித்தியாசம் தெரியாததால் அதைத் தனது குஞ்சு என்றே நினைத்துக் கொண்டு எந்தவித சந்தேகமும் இல்லாமல் அடை காத்துப் பொரித்து பிறந்து அது கூவும் வரை குயிலின் குஞ்சு என்பதை அறியாமல் வளர்க்கும். அதுபோலவே இறைவன் தாயின் கருவில் இட்ட உயிரை தாய் தனது குழந்தை என்றே எண்ணிக் கொண்டு எந்தவித சந்தேகமும் இல்லாமல் உடல் அதிர்ந்து வேலை செய்யாமல் கருவை அழிந்துவிடாமல் பாதுகாத்து அது ஏன் வந்தது எதற்கு வந்தது என்கிற எண்ணம் இல்லாமல் இறைவனின் உயிரை தனது சொந்த உயிர் என்று எண்ணி பந்தம் பாசம் என்கிற மாயையினால் நினைத்துக் கொண்டு தாய் வளர்க்கிறாள்.
உட்கருத்து: உலகத்தில் பிறக்கும் அனைத்து உயிர்களும் இறைவனின் அம்சமான ஆன்மாவாக இறைவனின் பிள்ளைகளாகவே பிறக்கின்றன. இதை மாயையால் அறியாத உயிர்கள் தான் பெற்ற குழந்தை என்று நினைத்துக் கொண்டு பந்த பாசத்தில் கிடந்து தவிக்கின்றார்கள்.