பாடல் #474: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைத்த பரப்பினை
மண்முத லாகவே வகுத்துவைத் தானே.
விளக்கம்:
ஆன்மா பிறவி எடுப்பதற்காக நெற்றிக் கண்ணையுடைய சிவனின் திருநாமமாகிய ஐந்தெழுத்தும் (நமசிவாய) பிரணவமும் (ஓம்) கலந்து வினைப்படி பந்த பாச மாயையை வைத்து ஆன்மாவை சேர்த்து உடம்பாக செய்த இறைவனே அந்த ஆன்மா தனது பந்த பாச மாயையை நீக்கி இறைவனிடம் வந்து சேருவதற்கான வழிமுறைகளை வேதங்களாக கொடுத்து அருளினான். அந்த வேதங்களின் பொருளை புரிந்து உணர்ந்து கொள்ள கருவினுள் முப்பத்தாறு தத்துவங்களையும் (பாடல் #467 இல் காண்க) வகை பிரித்து வைத்து அருளினான்.
உட்கருத்து: ஆன்மாவிற்கு ஆசையை தீர்த்துக்கொள்ள பிறவி கொடுத்து அதற்கேற்ற வினையையும் மாயையையும் கொடுத்த இறைவனே அதிலிருந்து விடுபட்டு பிறவிச் சுழலில் இருந்து தப்பிக்க வழிமுறையான வேதங்களையும் கொடுத்து அதன் பொருளைப் புரிந்து கொள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் குழந்தைக்கு கொடுத்து அருளுகின்றான்.