பாடல் #469: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
அறியீர் உடம்பினி லாகிய ஆறும்
பிறியீர் அதனிற் பெருகுங் குணங்கள்
செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட
தறிவீர் ஐந்தினுள் ளானது பிண்டமே.
விளக்கம்:
உடம்பு அடையும் ஆறு வகையான நிலைகளை அறியாமல் இருக்கின்றீர்கள். அந்த நிலைகளில் வினைப் பயனால் உருவாகிப் பெரியதாக வளரும் பலவித குணங்களில் நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்த்து கெட்டதை விட்டுப் பிரியாமல் இருக்கின்றீர்கள். பஞ்ச பூதங்களால் ஆன இந்த பிண்டமாகிய உடம்பினுள் எட்டுவிதமான மாபெரும் சித்திகளையும் இறைவன் வைத்திருப்பதை அறிந்து அதை அடைந்து பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவதற்கும் முயற்சி செய்யாமல் இருக்கின்றீர்கள்.
உடலின் ஆறு நிலைகள்:
- பேறு – இன்பம்.
- இழவு – பற்றாக்குறை.
- துன்பம் – துயரம்.
- பிணி – நோய்கள்
- மூப்பு – முதுமை
- சாக்காடு – இழிவு நிலை.
வினைப் பயனால் பெறும் குணங்கள்: பாடல் #458 இல் காண்க.
உடலின் பஞ்ச பூதங்கள்:
- நிலம் – எலும்பு தோலால் ஆன உடல்.
- நீர் – இரத்தம் மற்றும் பித்த நீர்கள்.
- நெருப்பு – உணவைச் செரிக்கும் நெருப்பு மற்றும் உடல் சூடு.
- காற்று – மூச்சுக் காற்று மற்றும் உடலில் உள்ள பத்துவிதமான வாயுக்கள்.
- ஆகாயம் – உயிர் மற்றும் ஆன்மா.
எட்டு மாபெரும் சித்திகள்:
- அணிமா – அணுவைப் போல மிகவும் நுண்ணிய உருவம் எடுத்தல்.
- மகிமா – மலையை விடவும் மிகப் பெரிய உருவம் எடுத்தல்.
- இலகிமா – இலவம் பஞ்சை விடவும் மிகவும் லேசான எடையை எந்த உருவத்திலும் எடுத்தல்.
- கரிமா – மலையை விடவும் மிகவும் கனமான எடையை எந்த உருவத்திலும் எடுத்தல்.
- பிராந்தி – நினைத்த இடத்திற்கு கண் இமைக்கும் நேரத்திற்குள் உடனே சென்றுவிடுதல்.
- பிரகாமியம் – மனதில் நினைத்ததை உடனே கைகொள்ளுதல்.
- ஈசத்துவம் – வேண்டிய எதையும் கட்டுப் படுத்தி ஆட்டி வைத்தல்.
- வசித்துவம் – எதையும் அல்லது எவரையும் தன் வசமாக்கி ஆட்கொள்ளுதல்.