பாடல் #460: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியம் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.
விளக்கம்:
கரு உருவாகும் போது முதலில் கரு தனித்து கேவல நிலையில் இருக்கும். அதன் பிறகு மாயை அதன் தத்துவங்களை கருவோடு சேர்த்து விடும்போது அதுவரை துரிய நிலையில் உறக்கத்தில் இருந்த கரு அந்த நிலையிலிருந்து மாறி விழித்துக் கொண்டு நினைவு தோன்ற ஆரம்பிக்கும். நினைவு தோன்றிய பின் அந்தக் கருவின் முற்பிறவிகளிலிருந்து தொடர்ந்து வரும் வினைப் பயன்களால் வரும் கன்மத்துடன் (மும்மலங்களில் ஒன்று) மாயேயம் என்கிற அசுத்த மாயையின் ஏழுவித காரியங்களும் (காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை) சேர்ந்து மொத்தம் எட்டுவித மாயைகளை அந்தக் கரு பெற்றுவிடும். இதுவே கருவுடன் மாயைகள் சேரும் முறைமை என்று தூய்மையான வேதங்கள் சொல்லும்.