பாடல் #1689: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
மன்னு மலமைந்தும் மாற்றும் வகையோரான்
துன்னிய காமாதி தோயுந் தொழில்நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதா
னன்னிய னாவா னசற்சீட னாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மனனு மலமைநது மாறறும வகையொரான
துனனிய காமாதி தொயுந தொழிலநீஙகான
பினனிய பொயயன பிறபபிறப பஞசாதா
னனனிய னாவா னசறசீட னாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான்
துன்னிய காம ஆதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான்
அன்னியன் ஆவான் அசற் சீடன் ஆமே.
பதப்பொருள்:
மன்னும் (உலக பற்றுக்களிலேயே நிலை பெற்று இருக்கின்ற) மலம் (மலங்களாகிய) ஐந்தும் (ஐந்து புலன்களையும்) மாற்றும் (மாற்றுகின்ற) வகை (வழி முறையை) ஓரான் (ஆராய்ந்து அறிந்து கொள்ளாதவன்)
துன்னிய (தன்னைப் பெருந்தி இருக்கின்ற) காம (காமம்) ஆதி (முதலாகிய ஆசைகளில்) தோயும் (தோய்ந்து இருக்கின்ற) தொழில் (செயல்களை) நீங்கான் (விட்டு நீங்காமல் இருக்கின்றவன்)
பின்னிய (ஒன்றன் பின் ஒன்றாக பின்னிக் கொண்டே) பொய்யன் (இருக்கின்ற பொய்களை கூறுபவன்) பிறப்பு (மீண்டும் மீண்டும் வருகின்ற பிறவிகளுக்கோ) இறப்பு (மீண்டும் மீண்டும் வருகின்ற இறப்பிற்கோ) அஞ்சாதான் (தன் மூடத்தனத்தால் அச்சப் படமால் இருக்கின்றவன் ஆகிய தன்மைகளைக் கொண்டவன்)
அன்னியன் (குருவுக்கு நெருக்கம் இல்லாதவன்) ஆவான் (ஆகி) அசற் (உண்மையில்லாத) சீடன் (சீடனாகவே) ஆமே (இருப்பான்).
விளக்கம்:
உலக பற்றுக்களிலேயே நிலை பெற்று இருக்கின்ற மலங்களாகிய ஐந்து புலன்களையும் மாற்றுகின்ற வழி முறையை ஆராய்ந்து அறிந்து கொள்ளாதவன், தன்னைப் பெருந்தி இருக்கின்ற காமம் முதலாகிய ஆசைகளில் தோய்ந்து இருக்கின்ற செயல்களை விட்டு நீங்காமல் இருக்கின்றவன், ஒன்றன் பின் ஒன்றாக பின்னிக் கொண்டே இருக்கின்ற பொய்களை கூறுபவன், மீண்டும் மீண்டும் வருகின்ற பிறவிகளுக்கோ அல்லது மீண்டும் மீண்டும் வருகின்ற இறப்பிற்கோ தன் மூடத்தனத்தால் அச்சப் படமால் இருக்கின்றவன் ஆகிய தன்மைகளைக் கொண்டவன் குருவுக்கு நெருக்கம் இல்லாதவனாகி உண்மையில்லாத சீடனாகவே இருப்பான்.