பாடல் #1684

பாடல் #1684: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

பஞ்சத் துரோகத் ததிபாதகர் தம்மைப்
பஞ்ச சமையத்தோர் வேந்த னருந்தெண்டம்
விஞ்சத்த வப்புவி வேறே விடாவிடிற்
பஞ்சத் துள்ளாகிப் புவியெங்கும் பாட்குமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பஞசத துரொகத ததிபாதகர தமமைப
பஞச சமையததொர வெநத னருநதெணடம
விஞசதத வபபுவி வெறெ விடாவிடிற
பஞசத துளளாகிப புவியெஙகும பாடகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பஞ்ச துரோகத்து அதி பாதகர் தம்மை
பஞ்ச சமையத்தோர் வேந்தன் அரும் தெண்டம்
விஞ்சு அத் தவப் புவி வேறே விடா விடில்
பஞ்சத்து உள் ஆகி புவி எங்கும் பாழ்குமே.

பதப்பொருள்:

பஞ்ச (கொலை களவு கள் காமம் பொய் கூறல் ஆகிய ஐந்து வகையான மகா பாவங்களையும்) துரோகத்து (ஒரு உண்மையான ஞானியைப் போல பொய்யான வேடம் அணிந்தவர்கள் தம்மை நம்புகிறவர்களை ஏமாற்றி துரோகம் செய்வது) அதி (அந்த மகா பாவங்களுக்கும் மேலான) பாதகர் (பாதகர்களாக அவர்களை ஆக்குகின்றது) தம்மை (அப்படிப் பட்டவர்களை)
பஞ்ச (அந்த ஐந்து வகையான மகா பாவங்களுக்கும் மேலான பாவங்களை) சமையத்தோர் (செய்பவர்களை பார்த்து அவர்களைப் போலவே மற்றவர்களும் அந்த பாவங்களை கடை பிடித்து விடாத படி) வேந்தன் (அந்த நாட்டை ஆளுகின்ற அரசன் அந்த பஞ்ச மகா துரோகிகளுக்கு) அரும் (மிகவும் கொடுமையான) தெண்டம் (தண்டனையைக் கொடுத்து)
விஞ்சு (விலக்கி) அத் (அவர்களின்) தவப் (புண்ணியமான) புவி (நாட்டை விட்டு) வேறே (வேறு இடத்திற்கு போகும் படி) விடா (கொண்டு சென்று விடாமல்) விடில் (இருந்தால்)
பஞ்சத்து (பஞ்சத்திற்கு) உள் (உள்ளே) ஆகி (அகப்பட்டுக் கொண்டு) புவி (அவர்களின் புண்ணிய நாடு) எங்கும் (முழுவதும்) பாழ்குமே (பாழாக போய் விடும்).

விளக்கம்:

கொலை களவு கள் (மது) காமம் பொய் கூறல் ஆகிய ஐந்து வகையான மகா பாவங்களையும் ஒரு உண்மையான ஞானியைப் போல பொய்யான வேடம் அணிந்தவர்கள் தம்மை நம்புகிறவர்களை ஏமாற்றி துரோகம் செய்வது அந்த மகா பாவங்களுக்கும் மேலான பாதகர்களாக அவர்களை ஆக்குகின்றது. அப்படி ஐந்து வகையான மகா பாவங்களுக்கும் மேலான பாவங்களை செய்பவர்களை பார்த்து அவர்களைப் போலவே மற்றவர்களும் அந்த பாவங்களை கடை பிடித்து விடாத படி அந்த நாட்டை ஆளுகின்ற அரசன் அந்த பஞ்ச மகா துரோகிகளுக்கு மிகவும் கொடுமையான தண்டனையைக் கொடுத்து தங்களின் புண்ணியமான நாட்டை விட்டு அவர்களை விலக்கி வைத்து வேறு இடத்திற்கு போகும் படி கொண்டு சென்று விடாமல் இருந்தால் அவர்களின் புண்ணிய நாடு பஞ்சத்தில் அகப்பட்டுக் கொண்டு முழுவதும் பாழாக போய் விடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.