பாடல் #1682

பாடல் #1682: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

ஏயெனி லேயென மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளொ
ருவூனிலை செய்யு முருவிலி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எயெனி லெயென மாடடார பிரசைகள
வாயமுலை பெயய மதுரநின றூறிடுந
தாயமுலை யாவ தறியார தமருளொ
ருவூனிலை செயயு முருவிலி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏய் எனில் ஏய் என மாட்டார் பிரசைகள்
வாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும் (மாதர் நின்று ஊட்டிடும்)
தாய் முலை ஆவது அறியார் தமர் உள் (தமர் உள்ளோர்)
ஒரு ஊன் நிலை செய்யும் உரு இலி தானே.

பதப்பொருள்:

ஏய் (ஏய்) எனில் (என்று அழைத்தால்) ஏய் (மறுபடியும் ஏய்) என (என்று) மாட்டார் (சொல்லாமல் தன்னை அழைக்கிறார்கள் என்ன என்று கேட்போம் என்கிற அடிப்படை அறிவு இருக்கின்ற) பிரசைகள் (சாதாரண மனிதர்கள் கூட)
வாய் (தாம் குழந்தையாக இருந்த பருவத்தில் வாய்க்குள் வைத்த) முலை (தாயின் மார்பில் இருந்து) பெய்ய (வருகின்ற) மதுர (இனிமையான பாலாக) நின்று (இருந்து) ஊறிடும் (ஊறுகின்ற)
தாய் (தமது தாயின்) முலை (மார்பகம்) ஆவது (ஆக இருப்பது எது என்பதை) அறியார் (அறியாமல் இருக்கின்றார்கள்) தமர் (தமக்கு) உள் (உள்ளே இருக்கின்ற)
ஒரு (ஒரு சக்தியாக இருந்து) ஊன் (தமது உடலை) நிலை (நிலையாக) செய்யும் (பிடித்து வைத்து இருக்கின்றது) உரு (உருவம்) இலி (இல்லாத) தானே (இறைவனே என்பதை அவர்கள் அறிவது இல்லை).

விளக்கம்:

ஏய் என்று அழைத்தால் மறுபடியும் ஏய் என்று சொல்லாமல் தன்னை அழைக்கிறார்கள் என்ன என்று கேட்போம் என்கிற அடிப்படை அறிவு இருக்கின்ற சாதாரண மனிதர்கள் கூட தாம் குழந்தையாக இருந்த பருவத்தில் வாய்க்குள் வைத்த தாயின் மார்பில் இருந்து வருகின்ற இனிமையான பால் ஊறுகின்ற தமது தாயின் மார்பகமாக இருப்பது எது என்பதை அறியாமல் இருக்கின்றார்கள். தமக்கு உள்ளே இருக்கின்ற ஒரு சக்தியாக இருந்து தமது உடலை நிலையாக பிடித்து வைத்து இருக்கின்றது உருவம் இல்லாத இறைவனே என்பதை அவர்கள் அறிவது இல்லை.

கருத்து:

இயல்பான அறிவு இருக்கின்ற சாதாரண மனிதர்கள் கூட தாங்கள் குழந்தையாக இருக்கின்ற போது கிடைத்த முதல் உணவான பாலில் இருந்து தமக்குள் இயங்குகின்ற அனைத்தும் தமக்குள் இருக்கின்ற இறைவனே செய்கின்றான் என்பதை உணராமல் இருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.