பாடல் #1083: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தாள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.
விளக்கம்:
பாடல் #1082 இல் உள்ளபடி பலவிதமான நவரத்தினங்களை சூடிக்கொண்டு இருக்கின்ற வயிரவியின் திருமுடியானது கோடி சந்திரனைப் போல பிரகாசிக்கின்றது. அவளின் காதுகளில் மணியோசையை எழுப்பும் அழகிய குண்டலங்களை அணிந்திருக்கின்றாள். அவளின் கண்கள் அழகிய மானின் கண்களைப் போல இருக்கின்றது. சிறந்த மணிகளைப் போல பிரகாசிக்கும் சூரியனையும் சந்திரனையும் அவளின் இரு கண்களாக வைத்திருக்கின்றாள். அவளின் திருமுகம் அக்னியில் உருக்கும் தங்கம் போல் ஜொலித்துக் கொண்டு பேரானந்தத்தில் இருக்கின்றாள்.
கருத்து:
கோடி சந்திரனைப் போல பிரகாசிக்கும் திருமுடி என்பது அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பதைக் குறிக்கின்றது. மணியோசை எழுப்பும் குண்டலங்கள் என்பது உயிர்களுக்குள் இருக்கும் ஓங்கார நாதத்தை எழுப்புவதைக் குறிக்கின்றது. மானைப் போன்ற கண்கள் என்பது எப்போது தன்னை வந்து சரணடைவார்கள் என்று சாதகர்களைத் தேடுவதைக் குறிக்கின்றது. சூரிய சந்திர நயனத்தாள் என்பது தன்னை வந்து சரணடைய முயற்சி செய்யும் சாதகர்களுக்கு வழிகாட்டும் சோதியாக இருப்பதைக் குறிக்கின்றது. பொன்மணி வன்னி என்பது ஒளிவிடும் நெருப்புச் சுடர்போல எங்கும் நிறைந்து தன்னை நினைப்பவர்களின் மனதை மகிழ்ச்சியில் நிரப்புவதைக் குறிக்கின்றது.