பாடல் #1009: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)
அறிவரு ஞானத் தெவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.
விளக்கம்:
அறிவின் மூலம் உணர்ந்து அடையக்கூடிய ஞானத்தை யாரும் தெரிந்து கொள்வதில்லை. பூசை வழிபாடு மந்திரம் யந்திரம் என்று தங்களின் புலன்கள் காட்டும் வழியிலேயே சென்று இறைவனைத் தேடிக் கிடைக்கவில்லை என்று புலம்புகின்றார்கள். தமக்குள்ளே முறைப்படி அருச்சினை செய்து பார்த்தால் அங்கே ஒளிவீசும் மாணிக்கம் போல இருக்கும் இறைவனைக் காணலாம்.
குறிப்பு: இப்பாடலின் மூலம் மானசீக பூஜையின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.