பாடல் #313

பாடல் #313: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கில்லேன் வினைத்துயர் ஆக்கு மயலானேன்
கல்லேன் அரன்நெறி அறியா தகையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.

விளக்கம்:

சிவநெறியைக் கல்லாமல் இறைவுணர்வை அறிய ஆற்றல் இல்லாத உயிர்கள் மாயையில் மயங்கி வினைப் பயனால் கிடக்கும் துன்பங்களை மேலும் மேலும் உருவாக்கி அனுபவித்துக் கொண்டே இருக்கின்றார்கள். உலகத்தில் இருக்கும் அனைத்து பொருள்களையும் கொடுத்து அப்பொருளாகவே இருக்கும் இறைவன் தனக்குள்ளும் இருக்கின்றான் என்று தெரியாமல் நாட்களை வீணாகக் கழித்துக்கொண்டு உலக இன்பங்களிலேயே இருந்து ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.

பாடல் #312

பாடல் #312: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே யாயினும்
கல்லாதவர் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.

விளக்கம்:

எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில்லாத வாழ்க்கையையும் எதிலும் நிலையாக இருக்காத மனமும் நிரந்தரமாக நிலைத்து இருக்காத உடம்பையும் எப்போதும் நிலையாக இருப்பவை என்று நினைத்துக்கொண்டு இருக்கும் உயிர்களே ஈசன் எல்லா உயிர்களுக்கும் இறைவன் தான் ஆனால் உண்மை ஞானத்தை கற்றுக்கொள்ளாத உயிர்களின் நெஞ்சத்தில் அவன் எப்போதுமே காட்சியாக காணக் கிடைக்க மாட்டான்.

பாடல் #311

பாடல் #311: முதல் தந்திரம் – 22. கல்லாமை (கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலவென்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்புஅறி யாரே.

விளக்கம்:

உண்மையான ஞானத்தை அடைந்து இறைவனை உள்ளத்துள் உணரக்கூடிய உயிர்கள் எப்போதும் அவனை வணங்கிப் பின்பற்றி நல்வழியிலேயே வாழ்கின்றனர். உண்மை ஞானம் பெறாதவர்கள் உலக ஞானம் நிறைய இருப்பதாகச் சொல்லிகொண்டு இருப்பார்கள். எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் எம்பெருமான் சதாசிவமூர்த்தி. அவனைப் பற்றிய உண்மை ஞானத்தை கற்று அறியாதவர்கள் தமக்குள்ளும் அவன் இரண்டறக் கலந்திருப்பதை அறிய மாட்டார்கள்.

பாடல் #310

பாடல் #310: முதல் தந்திரம் – 22. கல்லாமை (உலக கல்வி கற்று உண்மை ஞானம் இல்லாமை)

கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லா ரெனிலருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதவரும் இன்பம் காணுகி லாரே.

விளக்கம்:

உலக கல்வி கற்காமல் தனது கருத்தில் உள்ளத்துக்குள்ளே இறைவனை ஒருவர் இருக்கிறார் என்று உணர்ந்து அவரை அடையும் தகுதி பெற்றவர்களுக்கு இறைவனது அருளே கண்ணாக இருந்து அவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும். இவர்கள் எப்போதும் உலகைப்பற்றி இருக்காமல் இறைவனைப்பற்றி இருந்து பேரின்பத்தை காண்பார்கள். உலகக் கல்வியை மட்டுமே கற்றறிந்து உண்மை ஞானத்தை கற்றுக்கொள்ளாத உயிர்கள் இறைவனின் பேரின்பத்தை எப்போதும் காண மாட்டார்கள்.

பாடல் #309

பாடல் #309: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

வைத்துஉணர்ந் தான்மனத் தோடும் வாய்பேசி
ஒத்துஉணர்ந் தானுரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுஉணர்ந் தார்க்கே நணுகலு மாமே.

விளக்கம் :

இறைவனை உள்ளத்தில் வைத்து மனதோடு ஒன்றி தான் வேறு இல்லை இறைவன் வேறு இல்லை என்று உணர்ந்தவர்களும் தன் வாயிலிருந்து பேசும் வார்த்தைகள் அனைத்தும் இறைவனின் வார்த்தையாக உணர்ந்தவர்களுக்கும் அசையும் பொருள் அசையாபொருள் என உருவங்கள் பலவாக இருந்தாலும் அனைத்து உருவங்களிலும் இருப்பவன் இறைவன் ஒருவனே என்று உணர்ந்தவர்களும் உடம்பு என்னும் அச்சிலிருந்து உயிர் என்னும் ஆணி கழன்று விழும் போது ஆதியான சிவபெருமானை விரும்பி உணர்ந்தவர்களுக்கே அவனை அணுகி அடைய முடியும்.

பாடல் #308

பாடல் #308: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.

விளக்கம்:

இறைவனை கேள்வி ஞானத்தின் மூலம் உணர்ந்து போற்றிப் புகழ்ந்து இருக்கின்ற அடியவர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார் ஆதிகாலத்திலிருந்து இருக்கும் ஈசன். இறைவனை இகழ்ந்து பேசி இருக்கின்ற மற்றவர்களுக்கு மறக்கருணையினால் துன்பத்தைக் கொடுத்து வினை தீர்ப்பான். அப்படிப்பட்ட ஆதியான இறைவனின் பெருமைகளை உள்ளம் மகிழ்ந்து ஓதி உணராமல் இருப்பவர்களுக்கு இறைவன் கல்லால் ஆன பசு போன்றவன். கல்லாலான பசு எப்படி பாலைத் தராதோ அதுபோல அவர்களுக்கு இறைவனது அருளும் எப்போதும் கிடைக்காது.

Image result for lingam


பாடல் #307

பாடல் #307: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
உறுதுணை யாவ துலகுறு கேள்வி
செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கில் பிறப்பில்லை தானே.

விளக்கம்:

உலக வாழ்கை வாழ்ந்து இறைவனை அடைய உற்ற துணையாக இருப்பது உயிரும் உடலும் ஆகும். அந்த உயிர் சிவசிந்தனை பெறுவதற்கு உற்ற துணையாக இருப்பது கல்வியும் கேள்வியும் ஆகும். அந்த கேள்வி ஞானத்தால் சிவனது திருவடியை சிந்தையில் வைத்திருப்பது இறைவனை அடைய தக்க துணையாகும். அத்தகைய மிகப்பெரிய துணையை கேட்டுப் பெற்றால் பிறவியில்லை.

பாடல் #306

பாடல் #306: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானத்தின் மூலம் இறைவனை அடைதல்)

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவரவர் அன்றே.

விளக்கம்:

சிறு பிள்ளைகள் மணலில் வீடு கட்டி களிமண் சோறு சமைத்து அதை உண்மையான சோறுபோல பாவித்து சாப்பிட்டு இன்பப்படுவது போல உண்மையில்லாத உலக ஆசைகளை அனுபவித்து இன்பம் அடைந்துவிட்டு இறையருள் கிடைத்துவிடும் என்று நினைப்பது பொய்யானதாகவே இருக்கும். இறைவன் இப்படிப்பட்டவர் அவரை இப்படி அணுகலாம் என்று குறிப்பால் உணர்த்திவிட முடியாத இறைவன் ஒருவர் இருக்கிறார் அவரை அறிந்து கொள்ளவேண்டும் என்ற கேள்விஞானம் கூட இல்லாமல் வாழ்க்கையை உலக இன்பங்களின் வழி நடப்பவர்கள் எப்போதுமே இறைவனையும் அறியமாட்டார்கள் தம்மையும் அறியமாட்டார்கள்.

பாடல் #305

பாடல் #305: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்
தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.

விளக்கம்:

சிவபெருமானின் சிறப்பைப் படித்தும் கேட்டும் அறிந்து கொள்வோம். அதனால் கிடைக்கும் ஞானத்தினால் ஒழுக்கம் பெறுவோம். ஒழுக்கத்தினால் நம்மிடம் உண்டாகும் மாற்றத்தை சிந்தையில் உணர்வோம். உணர்ந்து ஒழுக்கத்தில் இருந்து வழுக்கி விடாமல் தொடர்ந்து நிலையாக இருந்தோமானால் வானத்திலிருக்கும் தேவர்களுக்கெல்லாம் அரசனான இறைவனும் அவர்களுக்கு ஒரு குறையும் இல்லாது எண்ணிலடங்காத காலம் அவர்களுடனே இருந்து பேரின்பத்தை அருளுவான்.

பாடல் #304

பாடல் #304: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமும் ஆகும் நிகழொளி யாய்நின்று
வாசமலர்க் கந்தமாய் மன்னிநின் றானே.

விளக்கம்:

இறைவன் அருளால் வரும் இறப்பும் பிறப்பும் எப்படி வருகிறது என்று தனக்குள் பேசி கேள்வி கேட்டு பிதற்றி அந்த கேள்வி ஞானத்தால் பதில் கிடைக்கும் பேரின்பத்தில் திளைத்து இருந்தால் வாசனை மிக்க மலர்களில் கலந்திருக்கும் நறுமணம் போல பேரொளியாய் திகழும் இறைவனும் நம்மோடு கலந்து நிற்பான்.