இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.
விளக்கம்:
இந்த உடலில் எண்ணிலடங்காத கோடிக்கணக்கான வருடங்கள் இரவு பகல் இல்லாத இடத்தில் (சூட்சும வெளி) பல்லாயிரக்கணக்கான தேவர்களாலும் முனிவர்களாலும் சித்தர்களாலும் போற்றிப் புகழப்பெறுபவனும் எம் குருநாதனுமாகிய இறைவனின் ஈடு இணையில்லாத திருவடிகளின் கீழ் அமர்ந்து இருந்தேன்.
பின்னைநின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர் என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.
விளக்கம்:
இறைவனை அடைய வேண்டும் என்ற ஆசையில் தாமாக முயன்று தவங்கள் செய்யாமல் வாழ்க்கையை வீணே கடத்துபவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். இப்படிப் பிறவியை வீணாக்காமல் இறைவனை உயிர்கள் அடையும் வழிகள் அனைத்தையும் குருநாதராக இருந்து எனக்குப் போதித்த இறைவன் அவற்றை நன்றாகத் தமிழில் வழங்குமாறே என்னை இங்கே அனுப்பி வைத்தான்.
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள் ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.
விளக்கம்:
பேரறிவு ஞானத்தின் தலைவனாகிய எம் குருவாகிய இறைவன் இருக்கும் இடத்தில் ஒரு குறையும் இல்லாமல் ஒன்பது கோடி யுகங்களாக, ஞானத்தால் உருவாகும் அமிர்தப் பால் ஊற்றி இறைவனை அர்ச்சனை செய்து இறைவனின் நல்திருவடியின் கீழ் இருந்தேன்.
நல் நெறிகளின் மூலம் இறைவனை அடையும் வழிகளை அறிந்து சிவனை மனதுள் வைத்துத் துதித்து மனதை வெல்லக்கூடிய பேரறிவு ஞானத்தை மிகவும் பெற்ற ஒரு முனிவராக நான் இருந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான தேவர்களும் அசுரர்களும் மனிதர்களும் மேலுலகம் செல்லும் நுண்ணிய (சூட்சும) வானத்தின் வழியே யானும் புகுந்து இந்தப் பூமியை நோக்கி வந்தேன்.
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில் உத்தம மாகவே ஓதிய வேதத்தின் ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.
விளக்கம்:
இறைவன் கூறிய உத்தமமான வேதங்களின் பொருளை அவனது அருளால் உள்ளுணர்ந்து ஓதுவதால் சிறப்பு பெறுகின்ற மந்திரங்களை உடலும் மனமும் ஒன்று போல் லயித்திருக்கும் பொழுது உள்ளிருந்து உற்பத்தியாகும் பேரின்ப உணர்வுகளை என்மேல் கொண்ட கருணையால் எம் குருநாதனாகிய இறைவன் எமக்கு அளித்து அருளினான்.
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.
விளக்கம்:
இறைவனை உணர்ந்து இறைவனை அடைந்து யான் பெற்ற பேரின்பம் இந்த உலகத்திலுள்ள அனைவரும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்றும் அண்டங்கள் அனைத்திலும் உறைந்து நிற்கும் வேதத்தின் உண்மைப் பொருளைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றும் உயிர்களின் உடலோடு கலந்து உயிராக நிற்கும் இறைவனே வேதத்தின் முழுப்பொருள் ஆவார். அந்த இறைவனை உள்ளுணர்வு கொண்டு அனைவரும் அறிந்து கொள்ளவே திருமந்திரத்தை வழங்கினோம். இந்தத் திருமந்திரத்தை மனம் விரும்பி நினைத்து நினைத்துத் துதித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இறைவனின் திருவருள் தானாகவே வந்தடைந்து யான் பெற்ற பேரின்பம் கிடைக்கும்.
பிறப்பு இறப்பு இல்லாதவனும் நந்தி எனப் பேர் பெற்ற குருநாதனுமாகிய இறைவனை சீரும் சிறப்போடும் வானத்திலிருக்கும் தேவர்களெல்லாம் சென்று கைகூப்பித் தொழும் இறைவனை ஒரு பொழுதும் மறக்காத நெஞ்சத்தினுள் திருமந்திர பாடல்களைப் பதிவேற்றி தடுமாற்றமில்லாத உறுதியான மனதோடு அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று ஓதி வாருங்கள்.
சூரியனின் நெருப்பு அதிகமாகி உலகங்களை அழிக்காதவாறு அளவோடு வைத்தவன். ஒவ்வொரு அண்டங்களிலும் ஏழு உலகங்களை அளவோடு வைத்தவன். இந்த உலகங்களில் உயிர்கள் பிறக்க வேண்டி உடலை அளவோடு வைத்தவன். அந்த உயிர்கள் மேல் நிலையை அடையும் பொருட்டு என்னுள் இருந்து இந்தத் திருமந்திரம் எனும் தமிழ்ச் சாத்திரத்தையும் அளவோடு சொல்ல வைத்தவன். சொல்லப்பட்ட இந்தத் திருமந்திரத்தின் பொருளை வெறும் வாயால் கூறி பயனில்லாமல் போகாதபடி அனுபவத்தின் மூலமே அறியும் பொருளாக அளவோடு வைத்தவன் இறைவனே.
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல முடிகண்டன் என்றயன் பொய்மொழிந் தானே.
விளக்கம்:
தமக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் திருமாலும் வாதிட்டுக் கொண்டிருந்தபோது சிவபெருமான் ஒரு மாபெரும் நெருப்புத் தூணாக நின்று இத்தூணின் அடியையோ அல்லது உச்சியையோ காண்பவரே பெரியவர் என்று அறிவித்தார். பிரம்மன் பறந்து உச்சியைக் கண்டுவிடலாம் என்று நினைத்து அன்னப் பறவையாக பறந்து சென்றார். திருமால் பூமியைக் குடைந்து அடியை கண்டுவிடலாம் என்று நினைத்து பன்றியாக குடைந்து சென்றார். இருவரும் தங்கள் எண்ணப்படி அடியையும் உச்சியையும் காணாமல் பூமியின் மேல் வந்து நின்ற அடியைக் காண முடியவில்லை என்று திருமால் ஒப்புக்கொண்டார். பிரம்மன் உச்சியைக் கண்டுவிட்டேன் என்று பொய் கூறினான்.
உள் விளக்கம்:
இந்தப் பாடலில் திருமூலர் ஒரு புராணக் கதையை சித்தரிப்பது போல இருந்தாலும் இறைவனின் திருவடிகளை கண்டு அவன் திருவடிகளின்கீழ் இருப்பதே பேரின்பம் என்பதை அனுபவத்தில் கண்டு அறிந்த திருமூலர் (பாடல் #82 இல் கூறியபடி) அந்தப் பேரின்பத்தை அனைவரும் அடையும் வழியாகவே திருமந்திரத்தை வழங்கினோம் என்பதையே இங்கு உணர்த்துகிறார்.
காளையும் (இடபம்) மானும் மழுவும் (ஆயுதம்) தரித்துத் தானே தோன்றிய இறைவனின் கற்பனையிலிருந்து (எண்ணத்திலிருந்து) தோன்றியதே இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும். அப்படிப்பட்ட இறைவன் என்மேல் கொண்ட கருணையினால் உண்மைப் பொருளையும் வழங்கி அடியவன் என் தலைமேல் தன்னுடைய நன்மை தரும் பொற்பாதங்களையும் வைத்து ஆகமங்கள் அனைத்தையும் எங்களின் குருநாதராக இருந்து வழங்கினான்.