மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #10

3-12-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: குடிக்க நீர் அல்லவா கேட்டோம் ஏன் இவ்விதம் வெள்ளப் பெருக்கு உண்டாகிறது?

குடிக்க நீர் கேட்டது உண்மை இதை யாம் மறுக்கவில்லை. இருப்பினும் மானிடர்கள் இயற்கையிடம் பெருமளவில் விளையாட்டு காட்டுகின்றனர். காரணமின்றி மரங்களை அழிப்பத. பூமியிலிருக்கும் கால்வாய்கள் நீர் செல்லும் வழிகள் அடைத்து வீடுகள் கட்டுவது. இவையாவும் பூமிக்கும் அதாவது பஞ்ச பூதங்களுக்கும் பொறுக்கவில்லை என அறிந்து கொள்ளுங்கள். இக்காலம் வரை பொறுமை கண்ட அவர்கள் திருப்பி அவர்களின் வலிமையை காட்டத் துவங்கினர். இதன்வழி உலகெங்கும் இந்நாட்டில் மட்டுமல்ல பூமியால் அக்கினியால் வெள்ளத்தால் ஏன் இனி வருங்காலங்களில் ஆகாயம் வாயு வழியாகவும் பல தீமைகள் உண்டாக உள்ளது. இயற்கையின் விதி என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

அனைவரும் பிரார்த்தனை செய்திருந்தால் இயற்கையின் வலிமையை குறைத்திருக்கலாம். இதன் முக்கியத்துவத்தை எவரும் அறியாது இதற்கென பிரார்த்தனை செய்ததாக யாம் காணவில்லை. மக்களை காக்குங்கள் என்கின்ற ஓர் அலறலோ யாம் இன்று வரை கேட்கவில்லை. இது வருந்துதலுக்குரிய ஒர் காரியமாகிறது. ஏனெனில் நாம் மிருகங்களை பார்த்துக் கொண்டாலும் பூச்சிகளை பார்த்துக் கொண்டாலும் இவை மற்றொன்றுக்கு ஆபத்து என்றால் உடனடியாக சேர்ந்து காக்க முயற்சிக்கின்றது. தீனி கிடைத்திட அனைவரையும் அழைத்து பங்கிடுகிறது. இறைவன் படைப்பில் மானிடன் மட்டும் மாறிவிட்டான். இவன் பங்கிடுவதில்லை ஏனெனில் இன்று பங்கிட்டால் மீண்டும் பங்கிற்கு வருவானோ என்கின்ற அச்சம். இதுவும் உண்மை தான் கலிகால தன்மை அவ்விதமே உதவி செய்தால் உதவி செய்கின்றவன் ஏமாளி எனக்கருதி அவனிடம் எவ்வளவிற்கு வசூல் செய்யலாம் என பார்க்கின்றனர்.

இத்தகைய நிலையில் எவரை யாம் குற்றம் சூட்டுவது என எமக்கே அறியவில்லை. எல்லாம் இறைவனின் விளையாட்டு என்றே எடுத்துக் கொண்டோம்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #9

5-11-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: நாகம் ஒன்றில் தவக்களையை வாயில் இருப்பதைக் கண்டால் தவக்களையை காப்பாற்றினால் நாகத்தின் உணவை பறித்த பாவமும் அப்படியே விட்டு விட்டால் தவக்களையின் உயிரை போக்கிய பாவமும் உண்டு இந்நிலையில் பாவ புண்ணிய நிலைகளை எவ்விதம் அறிவது?

இயற்கையின் வழியில் ஓர் ஜீவனுக்கு மற்றோர் ஜீவன் இரையாகின்றது. நாம் உண்ணும் போது செடி கொடி கீரை வகைகள் பழ வகைகள் மரக்கறி வகைகள் நமக்கு உணவாகின்றன. பெரும் மிருகங்களுக்கு சிறு மிருகங்கள் இரையாகின்றது. இது இயற்கையின் விதி என்பதால் அவ்விதம் நடக்கட்டும். இதில் நமது குறிக்கீடு தேவையற்றதாம். நாம் செய்யும் பணிகள் சீராகவும் நலம் தரும் வகையிலும் செய்வதே போதுமானது. இதுவே எமது விளக்கம் ஆகின்றது.

பாடல் #380

பாடல் #380: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாவென
ஊழிக் கதிரவன் ஒளியைவென் றானே.

விளக்கம்:

ஊழிக்காலம் முடிந்ததும் இறைவனை சரணடைந்து ஒளி உடலோடு வாழும் அடியவர்களில் ஒருவரை நான்கு முகங்கள் கொண்டு படைத்தல் தொழில் புரியும் பிரம்மனின் தொழிலை செய்ய இறைவன் தேர்ந்தெடுக்கின்றான். புதியதாக பிரம்மனின் தொழில் பெற்ற அடியவரும் இறைவனை நாடி வந்து என்ன வேலை செய்ய வேண்டும் என்று அதைத் தந்தருளுங்கள் என்று வேண்டிக்கொள்ள ஊழிக்காலத்தில் அனைத்தையும் சுட்டெரிக்கும் சூரியனையும் மிஞ்சி நிற்கும் மாபெரும் ஒளியாகிய இறைவனும் அவருக்கு படைக்கும் தொழிலைக் கொடுத்து அருளினான்.

குறிப்பு: பிரம்மன் திருமால் மற்றும் உலக தொழில்கள் செய்யும் தேவர்கள் அனைவருமே பல காலமாக இறைவனின் அடியவர்களாக இருந்து தவம் புரிந்தவர்கள்தான். தற்போது இருக்கும் பிரம்மன் திருமால் மற்றும் உலக தொழில்கள் செய்யும் தேவர்களின் பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த அடியவர்களுக்கு அந்த தொழிலை செய்யும் தகுதி இறைவனது திருவருளால் கிடைத்ததும் அவர்களுக்கு ஏற்ற தொழிலை இறைவன் கொடுத்து அருளுகின்றார்.

பாடல் #371

பாடல் #371: இரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (இறைவன் அணிந்திருக்கும் எலும்பும் கபாலமும் தத்துவம்)

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.

விளக்கம்:

ஊழிக்காலத்தில் மனித உடலின் எலும்புகளையும் மண்டையோடுகளையும் மாலையாகத் தரித்து எழுந்தருளும் இறைவன் வீரர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த வீரனும் மணிமுடி சூடிய விண்ணுலகத் தேவர்களுக்கெல்லாம் முதன்மையானவனும் ஆவான். ஊழிக்காலத்தில் இறைவன் மானிட உடலின் எலும்புகளையும் மண்டையோடுகளையும் ஏந்தி நிற்கவில்லை என்றால் அனைத்து உயிர்களின் எலும்புகளும் மண்டையோடுகளும் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் அழிந்துவிடும்.

உட்கருத்து: ஊழிக்காலத்தில் (பிரளயம்) உயிர்கள் மொத்தமாக சுவடின்றி மண்ணோடு மண்ணாக அழிந்து போய்விடாமல் காக்கும் மாபெரும் கருணையினால் இறைவனே மனித உடலின் எலும்புகளையும் மண்டையோடுகளையும் தாங்கி நிற்கின்றான். அப்படி அவன் நிற்கவில்லையெனில் உயிர்களின் சுவடுகூட மிஞ்சாது மொத்த உலகமும் அழிந்துபோய்விடும்.

Related image

பாடல் #367

பாடல் #367: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப்பேறு

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதம் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்ப்போக மேழும் படைத்துடை யானே.

விளக்கம்:

திருக்கயிலாய வெள்ளி மலையின் மீது அமர்ந்திருக்கும் பிறப்பு இறப்பு இல்லாத இறைவன். ஏழு உலகங்களை படைத்து அந்த உலக தொழில்கள் சீராக நடைபெற திருமாலுக்கு கை பெருவிரலினை ஒட்டி அந்தரத்தில் பறப்பது போல் சக்கரம் தந்து அருளினான். இவ்வுலக தொழில்கள் சீராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அகங்காரத்தினால் ஏதேனும் தடை ஏற்பட்டால் திருமால் தனது சக்கராயுதத்தால் அகங்காரத்தை அழித்து இவ்வுலகைக் காப்பான்.

Related image

பாடல் #368

பாடல் #368: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (சக்கரத்தின் தத்துவம்)

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கஒண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சக்தியைத் தான்கூறு செய்ததே.

விளக்கம்:

பாடல் #367ல் உள்ளபடி இறைவனிடம் பெற்ற உலகைக்காக்கும் வலிமை மிக்க சக்கரத்தை தனது கரத்தில் தாங்கும் சக்தி இல்லாததால் திருமால் அனைத்திலும் மேலான வலிமையுடைய இறைவனை அன்புடன் அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ள அவனது வேண்டுதலுக்கு மனமிறங்கிய இறைவனும் தனது சக்தியிலிருந்து ஒரு பகுதியை திருமாலுக்குக் கொடுத்து சக்கரத்தைத் தாங்கும் வல்லமை பெறச்செய்து அருளினான்.

Related image

பாடல் #369

பாடல் #369: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (சக்கரத்தின் தத்துவம்)

கூறது வாகக் குறித்துநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சக்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

விளக்கம்:

உலகைக்காத்து உலகத்தொழில்கள் சீராக நடைபெற இறைவன் தனது ஆற்றலின் ஒரு பகுதியில் சக்கரத்தை படைத்தார். தனது ஆற்றலின் ஒரு பகுதியான சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தாருளினார். திருமால் அந்த சக்கரத்தை தாங்கும் வலிமை பெறுவதற்காக தமது சக்தியிலிருந்து ஒரு பகுதியையே கொடுத்து அருளினார். தனது ஆற்றலின் ஒரு பகுதியாக இருந்த சக்கரமும் அதன் சக்தியையும் திருமாலுக்கு கொடுத்தாலும் சக்கரமும் அதன் சக்தியாகவும் இருப்பவர் இறைவனே.

Related image

பாடல் #370

பாடல் #370: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (சக்கரத்தின் தத்துவம்)

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.

விளக்கம்:

அறியாமையால் இறைவனை அழிக்க தக்கன் செய்த பெரிய வேள்வியை இறைவனின் அவதாரமான வீரபத்திரர் அழித்துத் தகர்த்தார். அப்போது வந்திருந்த திருமால் பிறை சந்திரனைச் சூடியிருக்கும் வீரபத்திரர் இறைவனின் அவதாரம் என்பதை உணராமல் வேள்வியை முறையின்றி அழித்துவிட்டதாக எண்ணி சக்கராயுதத்தை வீரபத்திரரின் பிறை சூடிய தலையை நோக்கி ஏவினான். அதைப் பார்த்த வீரபத்திரர் தமது கண்களில் நெருப்பு உமிழ அந்தச் சக்கரத்தைப் பார்த்து வாயிலிந்து ஒரு உக்கிர மிரட்டல் விட சக்கரம் வலுவிழந்து கீழே விழுந்தது.

குறிப்பு: பாடல் #369ல் உள்ளபடி தனது ஆற்றலின் ஒரு பகுதியாக இருந்த சக்கரமும் அதன் சக்தியையும் திருமாலுக்கு கொடுத்தாலும் சக்கரமும் அதன் சக்தியாகவும் இருப்பவர் இறைவனே ஆகையால் இறைவனின் அவதாரமாய் இருந்த வீரபத்திரரின் கட்டளைக்கிணங்க சக்கரம் வலுவிழந்து கீழே விழுந்தது.

Related image

பாடல் #362

பாடல் #362: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே.

விளக்கம்:

பிரளய வெள்ளத்தில் பெரிய மலைகளும் நீரில் மூழ்கின. உலகெங்கும் படைத்தல் தொழில் நின்றது. அந்நேரத்தில் பிரமனும் திருமாலும் தங்கள் கடமையை செய்யாமல் யாமே தலைவர் என்று ஒருவருக்கொருவர் மாறுபட்டு கூறிக்கொண்டனர். சதாசிவமூர்த்தியான இறைவன் பேரொளி மிகுந்த நெருப்பு மலையாக நின்று வெள்ள நீரெல்லாம் வற்றச் செய்தான். சதாசிவமூர்த்தியின் ஆற்றலைக் கண்ட பிரமனும் திருமாலும் தலைவன் யார் என்பதை உணர்ந்தார்கள். தம் தவற்றை உணர்ந்த அவர்களுக்கு சதாசிவமூர்த்தி நெருப்பு மலையாக நின்று அருள் செய்தார்.

Related image

பாடல் #363

பாடல் #363: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்
டுலகார் அழலைக்கண் டுள்வீழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

விளக்கம்

பாடல் #362ல் உள்ளபடி பேரோளி மிகுந்த நெருப்பு மலையாக இருந்த சதாசிவமூர்த்தி கடலை உடுறுவி கீழையும் வானத்தை ஊடுறுவி மேலேயும் இருந்து வானவர்கள் அனைவருக்கும் தலைவன் என்னும் பெயர் பெற்று உலகம் முழுவதும் நிறைந்த ஊழித்தீயில் உலக மக்கள் நெருப்புப் பிழம்பைப் பார்த்துப் பயந்து வெள்ள நீரில் விழுந்து விடாதபடிக்கு யாரும் அஞ்சாதீர்கள் என்று கூறி அருள் செய்தான்.

Related image