பாடல் #1627

பாடல் #1627: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

இருந்து வருந்தி யெழிற்றவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
யிருந்திந் திரனே யெவரே வரினுந்
திருந்துந் தன்சிந்தை சிவனவன் பாலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருநது வருநதி யெழிறறவஞ செயயும
பெருநதனமை யாளரைப பெதிகக வெனறெ
யிருநதிந திரனெ யெவரெ வரினுந
திருநதுந தனசிநதை சிவனவன பாலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருந்து வருந்தி எழில் தவம் செய்யும்
பெரும் தன்மை ஆளரை பேதிக்க என்றே
இருந்து இந்திரனே எவரே வரினும்
திருந்தும் தன் சிந்தை சிவன் அவன் பாலே.

பதப்பொருள்:

இருந்து (தியானத்தில் வீற்றிருந்து) வருந்தி (தமது உடலை வருத்திக் கொண்டு) எழில் (அருமையான) தவம் (தவத்தை) செய்யும் (செய்கின்ற தவசிகள்)
பெரும் (பெருமை மிக்க) தன்மை (தன்மையை) ஆளரை (கொண்டவர்கள் ஆவார்கள்) பேதிக்க (அவர்களின் தவ நிலையை கலைக்க வேண்டும்) என்றே (என்று)
இருந்து (அவர்கள் இருக்கின்ற இடத்திற்கு வந்து இருந்து) இந்திரனே (தேவர்களின் தலைவனாகிய இந்திரனே ஆனாலும்) எவரே (அல்லது அவரை விட வலிமை பெற்ற யார்) வரினும் (வந்து முயற்சி செய்தாலும்)
திருந்தும் (எதனாலும் மாறாத பண்பட்ட மேன்மையான) தன் (அவர்களின்) சிந்தை (சிந்தையானது) சிவன் (சிவப் பரம்பொருளாகிய) அவன் (இறைவனின்) பாலே (மேல் மட்டுமே இருக்கும்).

விளக்கம்:

தியானத்தில் வீற்றிருந்து தமது உடலை வருத்திக் கொண்டு அருமையான தவத்தை செய்கின்ற தவசிகள் பெருமை மிக்க தன்மையை கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களின் தவ நிலையை கலைக்க வேண்டும் என்று அவர்கள் இருக்கின்ற இடத்திற்கு தேவர்களின் தலைவனாகிய இந்திரனே ஆனாலும் அல்லது அவரை விட வலிமை பெற்ற யார் வந்து முயற்சி செய்தாலும் எதனாலும் மாறாத பண்பட்ட மேன்மையான அவர்களின் சிந்தையானது சிவப் பரம்பொருளாகிய இறைவனின் மேல் மட்டுமே இருக்கும்.

பாடல் #1628

பாடல் #1628: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

கரந்துங் கரந்திலன் கண்ணகத் தொன்றான்
பரந்த சடையன் பசும்பொன் னிறத்த
னருந்தவர்க் கல்லா லணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கரநதுங கரநதிலன கணணகத தொனறான
பரநத சடையன பசுமபொன னிறதத
னருநதவரக கலலா லணுகலு மாகான
விரைநது தொழபபடும வெணமதி யானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கரந்தும் கரந்து இலன் கண் அகத்து ஒன்றான்
பரந்த சடையன் பசும் பொன் நிறத்தன்
அரும் தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான்
விரைந்து தொழப்படும் வெண் மதியானே.

பதப்பொருள்:

கரந்தும் (மாயையினால் மறைந்து இருந்தாலும்) கரந்து (மாயையை வென்ற தவத்தோர்களுக்கு மறைந்து) இலன் (இல்லாமல் இருப்பவன்) கண் (கண்ணிற்கு) அகத்து (உள்ளே) ஒன்றான் (ஒன்றி இல்லாமல் மனதிற்குள் வீற்றிருப்பவன்)
பரந்த (பரந்து விரிந்த) சடையன் (சடையை அணிந்து இருப்பவன்) பசும் (பசுமையான) பொன் (பொன்னைப் போன்ற பிரகாசமான) நிறத்தன் (நிறத்தை உடையவன்)
அரும் (அருமையான) தவர்க்கு (தவத்தை செய்தவர்களுக்கு) அல்லால் (அல்லாமல் வேறு யாராலும்) அணுகலும் (நெருங்கி வருவதற்கு) ஆகான் (முடியாதவன்)
விரைந்து (கண்டவுடன்) தொழப்படும் (போற்றி வணங்கப்படும் பெருமைக்கு உரியவன்) வெண் (வெண்ணிற) மதியானே (நிலவை தலையில் சூடி இருக்கின்றான்).

விளக்கம்:

மாயையினால் மறைந்து இருந்தாலும் மாயையை வென்ற தவத்தோர்களுக்கு மறைந்து இல்லாமல் இருப்பவன் அவன் கண்ணிற்கு உள்ளே ஒன்றி இல்லாமல் மனதோடு ஒன்றி இருக்கின்ற இறைவன். அவன் அருமையான தவத்தை செய்தவர்களுக்கு அல்லாமல் வேறு யாராலும் நெருங்கி வருவதற்கு முடியாதவனாக இருக்கின்றான். அப்படி அருமையான தவத்தை செய்து மனதோடு ஒன்றி இருக்கின்ற இறைவனை தரிசித்தால் அவன் பரந்து விரிந்த சடையை அணிந்து இருப்பவனாகவும் பசுமையான பொன்னைப் போன்ற பிரகாசமான நிறத்தை உடையவனாகவும் கண்டவுடன் போற்றி வணங்கப்படும் பெருமைக்கு உரியவனாகவும் வெண்ணிற நிலவை தலையில் சூடி இருக்கின்றவனாகவும் இருக்கின்றான்.

பாடல் #1629

பாடல் #1629: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதலவ னெம்மிறை
தன்னெய்து காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பினனெயத வைதததொ ரினபப பிறபபினை
முனனெயத வைதத முதலவ னெமமிறை
தனனெயது காலததுத தானெ வெளிபபடு
மனனெயத வைதத மனமது தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பின் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை
முன் எய்த வைத்த முதல் அவன் எம் இறை
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும்
மன் எய்த வைத்த மனம் அது தானே.

பதப்பொருள்:

பின் (தவ நிலையை அடைந்த பிறகு) எய்த (அதில் மேன்மை நிலையை அடைய) வைத்தது (வைத்தது) ஓர் (ஒரு) இன்ப (பேரின்பத்தைக் கொண்ட) பிறப்பினை (பிறவியாகும்)
முன் (இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பு இருந்தே ஒவ்வொரு பிறவியிலும்) எய்த (இந்த நிலையை அடைவதற்கான வழி முறைகளை) வைத்த (வைத்து அருளியது) முதல் (ஆதி முதல்வன்) அவன் (அவனே) எம் (எமது) இறை (இறைவனாகும்)
தன் (தாம் இறைவனாகவே இருக்கின்றோம் என்பதை எமது ஆன்மா) எய்தும் (உணருகின்ற) காலத்து (காலத்தில்) தானே (அவன் தானாகவே) வெளிப்படும் (உள்ளிருந்து வெளிப்பட்டு அருள்வான்)
மன் (அவ்வாறு இறைவன் வெளிப்படும் நிலையை) எய்த (அடைய) வைத்த (வைத்தது) மனம் (தவ நிலையில் உறுதியாக இருக்கின்ற மனம்) அது (அது) தானே (தான் ஆகும்).

விளக்கம்:

தவ நிலையை அடைந்த பிறகு அதில் மேன்மை நிலையை அடைய வைத்தது ஒரு பேரின்பத்தைக் கொண்ட பிறவியாகும். இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பு இருந்தே ஒவ்வொரு பிறவியிலும் இந்த நிலையை அடைவதற்கான வழி முறைகளை வைத்து அருளியது ஆதி முதல்வனாகிய எமது இறைவனாகும். தாம் இறைவனாகவே இருக்கின்றோம் என்பதை எமது ஆன்மா உணருகின்ற காலத்தில் அவன் தானாகவே உள்ளிருந்து வெளிப்பட்டு அருள்வான். அவ்வாறு இறைவன் வெளிப்படும் நிலையை அடைய வைத்தது தவ நிலையில் உறுதியாக இருக்கின்ற மனமாகும்.

கருத்து:

தவ நிலையில் மேன்மை அடைந்து இறைவனை உணருகின்ற நிலையானது ஒரே பிறவியில் கிடைத்து விடுவதில்லை. அதற்கு முன்பே ஒவ்வொரு பிறவிகளில் இறைவனின் அருளால் கிடைத்து செய்த பல சாதகங்களின் பலனால் சிறிது சிறிதாக இந்த நிலை கிடைக்கின்றது.

பாடல் #1630

பாடல் #1630: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

அமைச்சரு மானைக் குழாமு மரசும்
பகைத்தெழு பூசலுட் பட்டன் னடுவே
யமைத்ததோர் ஞானமு மாக்கமு நோக்கி
யிமைத்தழி யாதிருப் பாரவர் தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அமைசசரு மானைக குழாமு மரசும
பகைததெழு பூசலுட படடன னடுவெ
யமைதததொர ஞானமு மாககமு நொககி
யிமைததழி யாதிருப பாரவர தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அமைச்சரும் ஆனை குழாமும் அரசும்
பகைத்து எழு பூசல் உள் பட்டு அந் நடுவே
அமைத்தது ஓர் ஞானமும் ஆக்கமும் நோக்கி
இமைத்து அழியாது இருப்பார் அவர் தாமே.

பதப்பொருள்:

அமைச்சரும் (நுண்ணறிவு மிக்க அமைச்சர்களைக் கொண்டு) ஆனை (வலிமை மிக்க யானைப்) குழாமும் (படைகளுடன்) அரசும் (உயர்ந்த பேரரசர்களாக)
பகைத்து (இருந்தாலும் ஒரு பகை நாட்டு அரசன் அவர்கள் மேல் கொண்ட விரோதத்தால்) எழு (எழுகின்ற) பூசல் (போருக்கு) உள் (உள்ளே) பட்டு (அகப் பட்டுக் கொண்டு அழிந்து போகின்றார்கள்) அந் (அப்படி அழிகின்றவர்களுக்கு) நடுவே (நடுவில்)
அமைத்தது (இறைவன் தமது மாபெரும் கருணையினால் வைத்து அருளிய) ஓர் (ஒரு) ஞானமும் (உண்மை ஞானத்தையும்) ஆக்கமும் (அதனால் கிடைக்கின்ற முக்தி பேறையும்) நோக்கி (குறிக்கோளாகக் கொண்டு)
இமைத்து (ஒரு கணப் பொழுதும் இறைவனை மறக்காமல் தவ நிலையில் இருந்து) அழியாது (எப்போதும் அழிந்து போகாத நிலையில்) இருப்பார் (இருப்பவர்களே) அவர் (தவசிகள்) தாமே (ஆவார்கள்).

விளக்கம்:

நுண்ணறிவு மிக்க அமைச்சர்களைக் கொண்டு வலிமை மிக்க யானைப் படைகளுடன் உயர்ந்த பேரரசர்களாக இருந்தாலும் ஒரு பகை நாட்டு அரசன் அவர்கள் மேல் கொண்ட விரோதத்தால் எழுகின்ற போருக்கு உள்ளே அகப் பட்டுக் கொண்டு அழிந்து போகின்றார்கள். அப்படி அழிகின்றவர்களுக்கு நடுவில் இறைவன் தமது மாபெரும் கருணையினால் வைத்து அருளிய ஒரு உண்மை ஞானத்தையும் அதனால் கிடைக்கின்ற முக்தி பேறையும் குறிக்கோளாகக் கொண்டு ஒரு கணப் பொழுதும் இறைவனை மறக்காமல் தவ நிலையில் இருந்து எப்போதும் அழிந்து போகாத நிலையில் இருப்பவர்களே தவசிகள் ஆவார்கள்.

பாடல் #1631

பாடல் #1631: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

சாத்திர மோதுஞ் சதிர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோ
லார்த்த பிறவி அகலவிட் டோடுமே

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாததிர மொதுஞ சதிரகளை விடடுநீர
மாததிரைப பொது மறிததுளளெ நொககுமின
பாரததவப பாரவை பசுமரத தாணிபொ
லாரதத பிறவி யகலவிட டொடுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாத்திரம் ஒதும் சதிர்களை விட்டு நீர்
மாத்திரை போது மறித்து உள்ளே நோக்குமின்
பார்த்த தவ பார்வை பசு மரத்து ஆணி போல்
ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே.

பதப்பொருள்:

சாத்திரம் (சாத்திரங்களை படித்து விட்டு) ஒதும் (அதை பேசித் திரிகின்ற) சதிர்களை (பெருமைகளை) விட்டு (விட்டு விடுங்கள்) நீர் (நீங்கள்)
மாத்திரை (ஒரு கண) போது (நேரமாவது) மறித்து (மூச்சுக்காற்றை தடுத்து நிறுத்தி) உள்ளே (தமக்குள்ளே) நோக்குமின் (உற்றுப் பாருங்கள்)
பார்த்த (அப்படி பார்த்த) தவ (அந்த தவ) பார்வை (பார்வையானது) பசு (பசுமையான) மரத்து (மரத்தில்) ஆணி (அடித்த ஆணி) போல் (போல உறுதியாக நினைவில் நின்று)
ஆர்த்த (போராடுகின்ற கடினமான) பிறவி (பிறவிகள் அனைத்தையும்) அகல (தம்மை விலகி) விட்டு (விட்டு) ஓடுமே (ஓடி விடும்).

விளக்கம்:

சாத்திரங்களை படித்து விட்டு அதன் பெருமைகளையே பேசித் திரிகின்றதை விட்டு விடுங்கள் நீங்கள். ஒரு கண நேரமாவது மூச்சுக்காற்றை தடுத்து நிறுத்தி தமக்குள்ளே உற்றுப் பாருங்கள். அப்படி பார்த்த அந்த தவ பார்வையானது பசுமையான மரத்தில் அடித்த ஆணி போல உறுதியாக நினைவில் நின்று போராடுகின்ற கடினமான பிறவிகள் அனைத்தையும் தம்மை விட்டு விலகி ஓடி விடும்.

பாடல் #1632

பாடல் #1632: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டிற்
றவம்வேண்டா ஞான சமாதிகை கூடிற்
றவம்வேண்டா மச்சக சன்மார்க்கத் தோர்க்குத்
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தவமவெணடு ஞானந தலைபபட வெணடிற
றவமவெணடா ஞான சமாதிகை கூடிற
றவமவெணடா மசசக சனமாரககத தொரககுத
தவமவெணடா மாறறந தனையறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தவம் வேண்டும் ஞானம் தலை பட வேண்டில்
தவம் வேண்டாம் ஞான சாமாதி கை கூடில்
தவம் வேண்டாம் அச் சக சன் மார்க்கத்தோர்க்கு
தவம் வேண்டாம் மாற்றம் தனை அறியாரே.

பதப்பொருள்:

தவம் (தவ நிலை என்பது) வேண்டும் (வேண்டும்) ஞானம் (உண்மை ஞானம்) தலை (தலை) பட (படுகின்ற சித்தியாகின்ற நிலை) வேண்டில் (வேண்டும் என்றால்)
தவம் (தவ நிலை என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) ஞான (உண்மை ஞானமும்) சாமாதி (சமாதி நிலையும்) கை (அடைந்து) கூடில் (விட்டால்)
தவம் (தவ நிலை என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) அச் (அந்த) சக (சகம்) சன் (சன் ஆகிய) மார்க்கத்தோர்க்கு (மார்க்கங்களை கடை பிடிப்போர்களுக்கு)
தவம் (தவ நிலை என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) மாற்றம் (மாற்றம்) தனை (அதனை) அறியாரே (அறியாதவர்களுக்கு).

விளக்கம்:

உண்மை ஞானம் என்பது சித்தியாக வேண்டும் என்றால் அதற்கு தவம் செய்ய வேண்டும். உண்மை ஞானமும் சமாதி நிலையும் கை கூடப் பெற்றவர்களுக்கும் சன் மார்க்கம் சக மார்க்கம் ஆகிய மார்க்கங்களை கடை பிடிப்பவர்களுக்கும் மாற்றமே இல்லாத மேன்மையான சமாதி நிலையை அடைந்து விட்டவர்களுக்கும் எந்த விதமான தவ நிலையும் வேண்டாம்.

பாடல் #1614

பாடல் #1614: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டு மமரர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இறபபும பிறபபு மிருமையு நீஙகித
துறககுந தவஙகணட சொதிப பிரானை
மறபபில ராயநிததம வாயமொழி வாரகட
கறபபதி காடடு மமரர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி
துறக்கும் தவம் கண்ட சோதி பிரானை
மறப்பு இலர் ஆய் நித்தம் வாய் மொழிவார்களுக்கு
அற பதி காட்டும் அமரர் பிரானே.

பதப்பொருள்:

இறப்பும் (இறப்பு) பிறப்பும் (பிறப்பு) இருமையும் (ஆகிய இரண்டு விதமான தன்மைகளும்) நீங்கி (நீங்கி விட)
துறக்கும் (அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய) தவம் (தவ நிலையில்) கண்ட (சாதகர் கண்ட) சோதி (ஜோதி மயமாகிய) பிரானை (இறைவனை)
மறப்பு (மறந்து விடுவதே) இலர் (இல்லாதவர்கள்) ஆய் (ஆக) நித்தம் (எப்போதும்) வாய் (தமது வாயால்) மொழிவார்களுக்கு (சொல்லுவதெல்லாம் இறைவனின் சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு)
அற (தர்மம் இருக்கின்ற) பதி (இடமாகிய சிவலோகத்தை) காட்டும் (காட்டி அருளுவான்) அமரர் (அமரர்களின்) பிரானே (தலைவனாகிய இறைவன்).

விளக்கம்:

இறைவனின் திருவருளால் பெற்ற ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்து மும்மலங்களையும் அறுத்து இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான தன்மைகளும் நீங்கி விட அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய தவ நிலையில் சாதகர் கண்ட ஜோதி மயமாகிய இறைவனை எப்போதும் மறந்து விடாமல் தமது வாயால் சொல்லுவதெல்லாம் இறைவனின் சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு தர்மம் இருக்கின்ற இடமாகிய சிவலோகத்தை காட்டி அருளுவான் அமரர்களின் தலைவனாகிய இறைவன்.

பாடல் #1615

பாடல் #1615: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

பிறந்து மிறந்தும் பல்பேதைமை யாலே
மறந்து மலவிரு ணீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிறநது மிறநதும பலபெதைமை யாலெ
மறநது மலவிரு ணீஙக மறைநது
சிறநத சிவனருள செர பருவததுத
துறநத வுயிரககுச சுடரொளி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிறந்தும் இறந்தும் பல் பேதைமை ஆலே
மறந்து மல இருள் நீங்க மறைந்து
சிறந்த சிவன் அருள் சேர் பருவத்து
துறந்த உயிர்க்கு சுடர் ஒளி ஆமே.

பதப்பொருள்:

பிறந்தும் (பிறவி எடுத்தும்) இறந்தும் (இறந்தும்) பல் (பல முறை எடுக்கும் பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பெறுகின்ற) பேதைமை (அறிவு) ஆலே (இல்லாததால்)
மறந்து (தனக்குள் இறைவன் இருப்பதையே மறந்து இருக்கின்ற) மல (மாயையாகிய மலத்தின்) இருள் (இருளானது) நீங்க (தம்மை விட்டு நீங்கி) மறைந்து (மறைந்து போகும் படி)
சிறந்த (சிறப்பான) சிவன் (இறைவனின்) அருள் (பேரருளை) சேர் (அடைகின்ற) பருவத்து (காலத்தில்)
துறந்த (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவாகிய தவ நிலையில் இருக்கின்ற) உயிர்க்கு (உயிர்களுக்கு) சுடர் (இறைவனுடைய பேரருளானது பிரகாசமாக திகழ்கின்ற சுடர்) ஒளி (ஒளி) ஆமே (ஆக விளங்கும்).

விளக்கம்:

பல முறைகள் பிறவி எடுத்து எடுத்து இறக்கின்ற பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பெறுகின்ற அறிவு இல்லாததால் தனக்குள் இறைவன் இருப்பதையே மறந்து மாயையாகிய மலத்தின் இருளில் இருக்கின்றார்கள். அப்போது அவர்களை விட்டு அந்த இருளானது நீங்கி மறைந்து போகும் படி சிறப்பான இறைவனின் பேரருளை அவர்கள் அடைகின்ற காலத்தில் அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவாகிய தவ நிலையில் இருக்கின்ற உயிர்களுக்கு இறைவனுடைய பேரருளானது பிரகாசமாக திகழ்கின்ற சுடர் ஒளியாக விளங்கும்.

பாடல் #1616

பாடல் #1616: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

அறவன் பிறப்பிலி யாரு மில்லாதா
னுறைவது காட்டக முண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறவன பிறபபிலி யாரு மிலலாதா
னுறைவது காடடக முணபது பிசசை
துறவனுங கணடீர துறநதவர தமமைப
பிறவி யறுததிடும பிததனகண டீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறவன் பிறப்பு இலி யாரும் இல்லாதான்
உறைவது காட்ட அகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மை
பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே.

பதப்பொருள்:

அறவன் (அனைத்தையும் விட்டு விலகி இருப்பவனும்) பிறப்பு (பிறப்பு என்பதே) இலி (இல்லாதவனும்) யாரும் (தனக்கு சொந்தமானவர்கள் என்று எவரும்) இல்லாதான் (இல்லாதவனும்)
உறைவது (ஆகிய இறைவன் தமக்குள்ளே வீற்றிருக்கின்ற இடத்தை) காட்ட (உணர்வதற்கு) அகம் (உள்ளுக்குள்ளே இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவானது) உண்பது (தமக்குள் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து கொள்ளுகின்ற) பிச்சை (ஞானத்தினால்)
துறவனும் (தமக்குள் அனைத்தையும் துறந்து வீற்றிருக்கின்ற மாபெரும் துறவியாகிய இறைவனையும்) கண்டீர் (பார்த்தீர்கள்) துறந்தவர் (அப்படி பார்த்த அவனைப் போலவே அனைத்தையும் துறந்து இருக்கின்ற) தம்மை (அடியவர்கள் தம்முடைய)
பிறவி (பிறவிகளை) அறுத்திடும் (அறுத்து நீக்கிவிடும்) பித்தன் (இறைவனும் அவனே) கண்டீரே (என்பதையும் துறவிகள் காண்பார்கள்).

விளக்கம்:

அனைத்தையும் விட்டு விலகி இருப்பவனும், பிறப்பு என்பதே இல்லாதவனும், தனக்கு சொந்தமானவர்கள் என்று எவரும் இல்லாதவனும் ஆகிய இறைவன் தமக்குள்ளே வீற்றிருக்கின்ற இடத்தை உணர்வதற்கு உள்ளுக்குள்ளே இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவானது தமக்குள் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து கொள்ளுகின்ற ஞானத்தினால் தமக்குள் அனைத்தையும் துறந்து வீற்றிருக்கின்ற மாபெரும் துறவியாகிய இறைவனையும் பார்த்தீர்கள். அவனைப் போலவே அனைத்தையும் துறந்து இருக்கின்ற அடியவர்கள் தம்முடைய பிறவிகளை அறுத்து நீக்கிவிடும் இறைவனும் அவனே என்பதையும் துறவிகள் காண்பார்கள்.

கருத்து:

தமக்குள்ளே மறைந்து இருக்கின்ற இறைவனை உணர்வதற்கு ஆன்மாவானது ஞானத்தை அறிந்து உணர்ந்து தகுதி பெறுகின்றது. அப்படி தகுதி பெற்று தமக்குள் உணர்ந்த இறைவனைப் போலவே நீங்களும் அனைத்தையும் துறந்து ஞானத்தை பற்றிக் கொண்டு இருந்தால் உங்களின் பிறவிகளை இறைவன் அறுத்து விடுவதையும் காண்பீர்கள்.

பாடல் #1617

பாடல் #1617: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

நெறியைப் படைத்தா னெருஞ்சில் படைத்தா
னெறியில் வழுவில் நெருஞ்சில் முட்பாயு
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில் முட்பாயகில் லாவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெறியைப படைததா னெருஞசில படைததா
னெறியில வழுவில நெருஞசில முடபாயு
நெறியில வழுவா தியஙகவல லாரககு
நெறியில நெருஞசில முடபாயகில லாவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நெறியை படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவில் நெருஞ்சில் முள் பாயும்
நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியில் நெருஞ்சில் முள் பாய இல்லாவே.

பதப்பொருள்:

நெறியை (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவறத்தை மேற்கொள்ளுபவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளை) படைத்தான் (படைத்தான் இறைவன்) நெருஞ்சில் (அந்த வழிமுறைகளை சரியாக கடைபிடிக்காத போது அதை உணர்த்துவதற்கு கடினமான முள்ளை போன்ற துன்பங்களையும்) படைத்தான் (படைத்தான் இறைவன்)
நெறியில் (கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து) வழுவில் (சிறிது விலகி நடந்தாலும்) நெருஞ்சில் (அந்த கடினமான) முள் (முள் போன்ற துன்பங்களும்) பாயும் (பாய்ந்து சாதகருக்கு நினைவூட்டும்)
நெறியில் (சிறுதளவும் கூட தாம் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து) வழுவாது (விலகி விடாமல்) இயங்க (செயல் பட) வல்லார்க்கு (முடிந்தவர்களுக்கு)
நெறியில் (அவர்கள் கடை படிக்கின்ற வழிமுறைகளில்) நெருஞ்சில் (ஒரு பொழுதும் கடினமான) முள் (முள்கள் போன்ற துன்பங்கள்) பாய (பாய்வது) இல்லாவே (இருக்காது).

விளக்கம்:

அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவறத்தை மேற்கொள்ளுபவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளை படைத்த இறைவனே அந்த வழிமுறைகளை சரியாக கடைபிடிக்காத போது அதை உணர்த்துவதற்கு கடினமான முள்ளை போன்ற துன்பங்களையும் படைத்தான். கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து சிறிது விலகி நடந்தாலும் அந்த கடினமான முள் போன்ற துன்பங்களும் பாய்ந்து சாதகருக்கு அவர்கள் வழி தவறி செல்வதை நினைவூட்டும். சிறுதளவும் கூட தாம் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து விலகி விடாமல் செயல் பட முடிந்தவர்களுக்கு அவர்கள் கடை படிக்கின்ற வழிமுறைகளில் ஒரு பொழுதும் கடினமான முள்கள் போன்ற துன்பங்கள் பாய்வது இருக்காது.