பாடல் #1629

பாடல் #1629: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதலவ னெம்மிறை
தன்னெய்து காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பினனெயத வைதததொ ரினபப பிறபபினை
முனனெயத வைதத முதலவ னெமமிறை
தனனெயது காலததுத தானெ வெளிபபடு
மனனெயத வைதத மனமது தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பின் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை
முன் எய்த வைத்த முதல் அவன் எம் இறை
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும்
மன் எய்த வைத்த மனம் அது தானே.

பதப்பொருள்:

பின் (தவ நிலையை அடைந்த பிறகு) எய்த (அதில் மேன்மை நிலையை அடைய) வைத்தது (வைத்தது) ஓர் (ஒரு) இன்ப (பேரின்பத்தைக் கொண்ட) பிறப்பினை (பிறவியாகும்)
முன் (இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பு இருந்தே ஒவ்வொரு பிறவியிலும்) எய்த (இந்த நிலையை அடைவதற்கான வழி முறைகளை) வைத்த (வைத்து அருளியது) முதல் (ஆதி முதல்வன்) அவன் (அவனே) எம் (எமது) இறை (இறைவனாகும்)
தன் (தாம் இறைவனாகவே இருக்கின்றோம் என்பதை எமது ஆன்மா) எய்தும் (உணருகின்ற) காலத்து (காலத்தில்) தானே (அவன் தானாகவே) வெளிப்படும் (உள்ளிருந்து வெளிப்பட்டு அருள்வான்)
மன் (அவ்வாறு இறைவன் வெளிப்படும் நிலையை) எய்த (அடைய) வைத்த (வைத்தது) மனம் (தவ நிலையில் உறுதியாக இருக்கின்ற மனம்) அது (அது) தானே (தான் ஆகும்).

விளக்கம்:

தவ நிலையை அடைந்த பிறகு அதில் மேன்மை நிலையை அடைய வைத்தது ஒரு பேரின்பத்தைக் கொண்ட பிறவியாகும். இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பு இருந்தே ஒவ்வொரு பிறவியிலும் இந்த நிலையை அடைவதற்கான வழி முறைகளை வைத்து அருளியது ஆதி முதல்வனாகிய எமது இறைவனாகும். தாம் இறைவனாகவே இருக்கின்றோம் என்பதை எமது ஆன்மா உணருகின்ற காலத்தில் அவன் தானாகவே உள்ளிருந்து வெளிப்பட்டு அருள்வான். அவ்வாறு இறைவன் வெளிப்படும் நிலையை அடைய வைத்தது தவ நிலையில் உறுதியாக இருக்கின்ற மனமாகும்.

கருத்து:

தவ நிலையில் மேன்மை அடைந்து இறைவனை உணருகின்ற நிலையானது ஒரே பிறவியில் கிடைத்து விடுவதில்லை. அதற்கு முன்பே ஒவ்வொரு பிறவிகளில் இறைவனின் அருளால் கிடைத்து செய்த பல சாதகங்களின் பலனால் சிறிது சிறிதாக இந்த நிலை கிடைக்கின்றது.

பாடல் #1628

பாடல் #1628: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

கரந்துங் கரந்திலன் கண்ணகத் தொன்றான்
பரந்த சடையன் பசும்பொன் னிறத்த
னருந்தவர்க் கல்லா லணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கரநதுங கரநதிலன கணணகத தொனறான
பரநத சடையன பசுமபொன னிறதத
னருநதவரக கலலா லணுகலு மாகான
விரைநது தொழபபடும வெணமதி யானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கரந்தும் கரந்து இலன் கண் அகத்து ஒன்றான்
பரந்த சடையன் பசும் பொன் நிறத்தன்
அரும் தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான்
விரைந்து தொழப்படும் வெண் மதியானே.

பதப்பொருள்:

கரந்தும் (மாயையினால் மறைந்து இருந்தாலும்) கரந்து (மாயையை வென்ற தவத்தோர்களுக்கு மறைந்து) இலன் (இல்லாமல் இருப்பவன்) கண் (கண்ணிற்கு) அகத்து (உள்ளே) ஒன்றான் (ஒன்றி இல்லாமல் மனதிற்குள் வீற்றிருப்பவன்)
பரந்த (பரந்து விரிந்த) சடையன் (சடையை அணிந்து இருப்பவன்) பசும் (பசுமையான) பொன் (பொன்னைப் போன்ற பிரகாசமான) நிறத்தன் (நிறத்தை உடையவன்)
அரும் (அருமையான) தவர்க்கு (தவத்தை செய்தவர்களுக்கு) அல்லால் (அல்லாமல் வேறு யாராலும்) அணுகலும் (நெருங்கி வருவதற்கு) ஆகான் (முடியாதவன்)
விரைந்து (கண்டவுடன்) தொழப்படும் (போற்றி வணங்கப்படும் பெருமைக்கு உரியவன்) வெண் (வெண்ணிற) மதியானே (நிலவை தலையில் சூடி இருக்கின்றான்).

விளக்கம்:

மாயையினால் மறைந்து இருந்தாலும் மாயையை வென்ற தவத்தோர்களுக்கு மறைந்து இல்லாமல் இருப்பவன் அவன் கண்ணிற்கு உள்ளே ஒன்றி இல்லாமல் மனதோடு ஒன்றி இருக்கின்ற இறைவன். அவன் அருமையான தவத்தை செய்தவர்களுக்கு அல்லாமல் வேறு யாராலும் நெருங்கி வருவதற்கு முடியாதவனாக இருக்கின்றான். அப்படி அருமையான தவத்தை செய்து மனதோடு ஒன்றி இருக்கின்ற இறைவனை தரிசித்தால் அவன் பரந்து விரிந்த சடையை அணிந்து இருப்பவனாகவும் பசுமையான பொன்னைப் போன்ற பிரகாசமான நிறத்தை உடையவனாகவும் கண்டவுடன் போற்றி வணங்கப்படும் பெருமைக்கு உரியவனாகவும் வெண்ணிற நிலவை தலையில் சூடி இருக்கின்றவனாகவும் இருக்கின்றான்.

பாடல் #1627

பாடல் #1627: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

இருந்து வருந்தி யெழிற்றவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
யிருந்திந் திரனே யெவரே வரினுந்
திருந்துந் தன்சிந்தை சிவனவன் பாலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருநது வருநதி யெழிறறவஞ செயயும
பெருநதனமை யாளரைப பெதிகக வெனறெ
யிருநதிந திரனெ யெவரெ வரினுந
திருநதுந தனசிநதை சிவனவன பாலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருந்து வருந்தி எழில் தவம் செய்யும்
பெரும் தன்மை ஆளரை பேதிக்க என்றே
இருந்து இந்திரனே எவரே வரினும்
திருந்தும் தன் சிந்தை சிவன் அவன் பாலே.

பதப்பொருள்:

இருந்து (தியானத்தில் வீற்றிருந்து) வருந்தி (தமது உடலை வருத்திக் கொண்டு) எழில் (அருமையான) தவம் (தவத்தை) செய்யும் (செய்கின்ற தவசிகள்)
பெரும் (பெருமை மிக்க) தன்மை (தன்மையை) ஆளரை (கொண்டவர்கள் ஆவார்கள்) பேதிக்க (அவர்களின் தவ நிலையை கலைக்க வேண்டும்) என்றே (என்று)
இருந்து (அவர்கள் இருக்கின்ற இடத்திற்கு வந்து இருந்து) இந்திரனே (தேவர்களின் தலைவனாகிய இந்திரனே ஆனாலும்) எவரே (அல்லது அவரை விட வலிமை பெற்ற யார்) வரினும் (வந்து முயற்சி செய்தாலும்)
திருந்தும் (எதனாலும் மாறாத பண்பட்ட மேன்மையான) தன் (அவர்களின்) சிந்தை (சிந்தையானது) சிவன் (சிவப் பரம்பொருளாகிய) அவன் (இறைவனின்) பாலே (மேல் மட்டுமே இருக்கும்).

விளக்கம்:

தியானத்தில் வீற்றிருந்து தமது உடலை வருத்திக் கொண்டு அருமையான தவத்தை செய்கின்ற தவசிகள் பெருமை மிக்க தன்மையை கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களின் தவ நிலையை கலைக்க வேண்டும் என்று அவர்கள் இருக்கின்ற இடத்திற்கு தேவர்களின் தலைவனாகிய இந்திரனே ஆனாலும் அல்லது அவரை விட வலிமை பெற்ற யார் வந்து முயற்சி செய்தாலும் எதனாலும் மாறாத பண்பட்ட மேன்மையான அவர்களின் சிந்தையானது சிவப் பரம்பொருளாகிய இறைவனின் மேல் மட்டுமே இருக்கும்.

பாடல் #1626

பாடல் #1626: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்போடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவத் தோர்கள்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிறபபறி யாரபல பிசசைசெய மாநதர
சிறபபொடு வெணடிய செலவம பெறுவர
மறபபில ராகிய மாதவத தொரகள
பிறபபினை நீககும பெருமைபெற றாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர்
சிறப்போடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பு இலர் ஆகிய மா தவத்தோர்கள்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே.

பதப்பொருள்:

பிறப்பு (பிறவி எதற்காக எடுத்து வந்தோம் என்பதை) அறியார் (அறியாமல்) பல (இந்த உலகத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான பலவற்றை) பிச்சை (பிச்சையாகவே) செய் (பெற்று வாழ்கின்ற) மாந்தர் (மனிதர்கள்)
சிறப்போடு (மாயையில் இருப்பதால் தங்களின் உலக வாழ்க்கைக்கு சிறப்பானது) வேண்டிய (என்று ஆசைப்பட்டு வேண்டிய) செல்வம் (செல்வத்தையே இறைவனிடம் கேட்டு) பெறுவர் (பெறுகின்றார்கள்)
மறப்பு (ஆனால் இறைவனின் திருவருளால் மாயை) இலர் (இல்லாதவர்) ஆகிய (ஆகிய) மா (மாபெரும்) தவத்தோர்கள் (தவத்தை செய்தவர்கள்)
பிறப்பினை (இனி பிறவி எடுக்கின்ற நிலையையே) நீக்கும் (நீக்கி விடுகின்ற) பெருமை (பெருமையை) பெற்றாரே (பெற்றவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

பிறவி எதற்காக எடுத்து வந்தோம் என்பதை அறியாமல் இந்த உலகத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான பலவற்றை பிச்சையாகவே பெற்று வாழ்கின்ற மனிதர்கள் மாயையில் இருப்பதால் தங்களின் உலக வாழ்க்கைக்கு சிறப்பானது என்று ஆசைப்பட்டு வேண்டிய செல்வத்தையே இறைவனிடம் கேட்டு பெறுகின்றார்கள். ஆனால் இறைவனின் திருவருளால் மாயை இல்லாதவராகிய மாபெரும் தவத்தை செய்தவர்கள் இனி பிறவி எடுக்கின்ற நிலையையே நீக்கி விடுகின்ற பெருமையை பெற்றவர்கள் ஆவார்கள்.

பாடல் #1625

பாடல் #1625: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

எம்மா ருயிரு மிருநிலத் தோற்றமுஞ்
செம்மா தவத்தின் செயலின் பெருமையு
மம்மாய வனருள் பெற்றதவற் கல்லா
திம்மா தவத்தி னியல்பறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எமமா ருயிரு மிருநிலத தொறறமுஞ
செமமா தவததின செயலின பெருமையு
மமமாய வனருள பெறறதவற கலலா
திமமா தவததி னியலபறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எம் ஆருயிரும் இரு நில தோற்றமும்
செம் மா தவத்தின் செயலின் பெருமையும்
அம் மாயவன் அருள் பெற்ற தவற்கு அல்லாது
இம் மா தவத்தின் இயல்பு அறியாரே.

பதப்பொருள்:

எம் (எமது) ஆருயிரும் (உடல் உயிரோடு சேர்ந்து இருக்கின்ற ஆன்மா) இரு (மற்றும் யாம் இருக்கின்ற உலகம் ஆகிய இரண்டு) நில (இடத்தின்) தோற்றமும் (மூலத்தையும்)
செம் (செம்மையாகிய) மா (மாபெரும்) தவத்தின் (தவத்தினை) செயலின் (செய்கின்ற செயலின்) பெருமையும் (பெருமையையும்)
அம் (அந்த) மாயவன் (மாயவனாக இருக்கின்ற இறைவனின்) அருள் (திருவருளை) பெற்ற (பெற்று) தவற்கு (தவ நிலையில் இருப்பவர்களைத்) அல்லாது (தவிர)
இம் (இந்த) மா (மாபெரும்) தவத்தின் (தவத்தின்) இயல்பு (இயல்பை) அறியாரே (வேறு எவரும் அறிய மாட்டார்கள்).

விளக்கம்:

எமது உடல் உயிரோடு சேர்ந்து இருக்கின்ற ஆன்மா மற்றும் யாம் இருக்கின்ற உலகம் ஆகிய இரண்டு இடத்தின் மூலத்தையும் செம்மையாகிய மாபெரும் தவத்தினை செய்கின்ற செயலின் பெருமையையும் அந்த மாயவனாக இருக்கின்ற இறைவனின் திருவருளை பெற்று தவ நிலையில் இருப்பவர்களைத் தவிர இந்த மாபெரும் தவத்தின் இயல்பை வேறு எவரும் அறிய மாட்டார்கள்.

பாடல் #1624

பாடல் #1624: ஆறாம் தந்திரம் – 5. தவம் (துறவின் முழுமை பெற்ற நிலையே தவம் ஆகும்)

ஒடுங்கி நிலைபெற்ற வுத்தம ருள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
யிடும்பையு மில்லை யிராப்பக லில்லைக்
கடும்பசி யில்லைக் கற்றுவிட் டோர்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒடுஙகி நிலைபெறற வுததம ருளளம
நடுஙகுவ திலலை நமனுமங கிலலை
யிடுமபையு மிலலை யிராபபக லிலலைக
கடுமபசி யிலலைக கறறுவிட டொரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒடுங்கி நிலை பெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இரா பகல் இல்லை
கடும் பசி இல்லை கற்று விட்டோர்க்கே.

பதப்பொருள்:

ஒடுங்கி (ஆசைகளும் புலன்களும் ஒன்பது வாயில்களின் வழி நடக்கின்ற கர்மங்களும் ஒடுங்கி) நிலை (இறைவனை பற்றிய நினைவிலேயே இருக்கின்ற நிலையை) பெற்ற (பெற்ற) உத்தமர் (உத்தமர்களான தவசிகளின்) உள்ளம் (உள்ளமானது)
நடுங்குவது (எதற்காகவும் அச்சப் படுவதும்) இல்லை (இல்லை) நமனும் (இறப்பு என்பதும்) அங்கு (அவருக்கு) இல்லை (இல்லை)
இடும்பையும் (துன்பம் என்பதும்) இல்லை (அவருக்கு இல்லை) இரா (இரவு) பகல் (பகல் எனும் கால வேறுபாடுகளும்) இல்லை (அவருக்கு இல்லை)
கடும் (கடுமையான) பசி (பசி தாகம் ஆகிய) இல்லை (உணர்வுகளும் இல்லை) கற்று (உலக அறிவை கற்று) விட்டோர்க்கே (அதை விட்டு விட்டு உண்மை அறிவை பற்றி இருக்கின்ற தவசிகளின் நிலையாகும்).

விளக்கம்:

ஆசைகளும் புலன்களும் ஒன்பது வாயில்களின் வழி நடக்கின்ற கர்மங்களும் ஒடுங்கி இறைவனை பற்றிய நினைவிலேயே இருக்கின்ற நிலையை பெற்ற உத்தமர்களான தவசிகளின் உள்ளமானது எதற்காகவும் அச்சப் படுவது இல்லை. இறப்பு என்பது அவருக்கு இல்லை. துன்பம் என்பது அவருக்கு இல்லை. இரவு பகல் எனும் கால வேறுபாடுகள் அவருக்கு இல்லை. கடுமையான பசி தாகம் ஆகிய உணர்வுகள் அவருக்கு இல்லை. இவை எல்லாம் உலக அறிவை கற்று அதை விட்டு விட்டு உண்மை அறிவை பற்றி இருக்கின்ற தவசிகளின் நிலையாகும்.

பாடல் #1623

பாடல் #1623: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

தூம்பு துறந்தன வொன்பது வாய்தலு
மாம்பற் குழியி லகஞ்சுழிப் பட்டது
வேம்பேறி நோக்கினென் மீகாமன் கூறையிற்
கூம்பேறிக் கோயில் பழுக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தூமபு துறநதன வொனபது வாயதலு
மாமபற குழியி லகஞசுழிப படடது
வெமபெறி நொககினென மீகாமன கூறையிற
கூமபெறிக கொயில பழுககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தூம்பு துறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பல் குழியில் அகம் சுழி பட்டது
வேம்பு ஏறி நோக்கின் என் மீகாமன் கூறையில்
கூம்பு ஏறி கோயில் பழுக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

தூம்பு (தமது துளைகளாகிய கர்மங்களை) துறந்தன (துறந்தன) ஒன்பது (உடலில் உள்ள இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசிகள், வாய், கருவாய், எருவாய் ஆகிய ஒன்பது) வாய்தலும் (கர்மங்களின் செயல்களாகிய நுழை வாயில்கள்)
ஆம்பல் (இதுவரை துன்பக்) குழியில் (குழியில்) அகம் (ஆன்மாவனது) சுழி (தனது கர்மங்களை அனுபவிக்கின்ற வாழ்க்கை சுழலிலேயே) பட்டது (அகப் பட்டுக் கொண்டு இருந்தது)
வேம்பு (கர்மங்களை துறந்த பிறகு சுழுமுனை நாடியின் வழியே) ஏறி (குண்டலினி சக்தியானது மேல் நோக்கி ஏறி) நோக்கின் (பார்க்கும் போது) என் (அங்கே எமது ஆன்மாவை) மீகாமன் (காக்கின்றவனாகிய இறைவனை) கூறையில் (எனது ஆன்மாவை மூடியிருந்த திரையை விலக்கிப் பார்த்து)
கூம்பு (சுழுமுனையின் உச்சித் துளைக்கு மேலே இருக்கின்ற சகஸ்ரதளத்தில்) ஏறி (ஏறி) கோயில் (அங்கே கோயில் கொண்டு வீற்றிருந்து) பழுக்கின்ற (முக்தியை அளிக்கின்ற பேரோளியாகிய இறைவனை) ஆறே (அடைகின்ற வழி கிடைத்தது).

விளக்கம்:

இதுவரை துன்பக் குழியில் ஆன்மாவனது தனது கர்மங்களை அனுபவிக்கின்ற வாழ்க்கை சுழலிலேயே அகப் பட்டுக் கொண்டு இருந்தது. அனைத்தையும் விட்டு விலகி துறவு எனும் தவ நிலையில் மேன்மை நிலையை அடையும் போது தமது உடலில் உள்ள இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசிகள், வாய், கருவாய், எருவாய் ஆகிய ஒன்பது துளைகளாகிய கர்மங்களின் செயல்களை துறந்து விடுகின்றது. அதன் பிறகு பிறகு சுழுமுனை நாடியின் வழியே குண்டலினி சக்தியானது மேல் நோக்கி ஏறி பார்க்கும் போது அங்கே அவரது ஆன்மாவை காக்கின்றவனாகிய இறைவனை அவரது ஆன்மாவை மூடியிருந்த திரையை விலக்கிப் பார்த்து சுழுமுனையின் உச்சித் துளைக்கு மேலே இருக்கின்ற சகஸ்ரதளத்தில் ஏறி அங்கே கோயில் கொண்டு வீற்றிருந்து முக்தியை அளிக்கின்ற பேரோளியாகிய இறைவனை அடைகின்ற வழி அவருக்கு கிடைத்தது.

பாடல் #1622

பாடல் #1622: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

அகன்றார் வழிமுத லாதிப் பிரானு
மிவன்றா னெனநின் றெளியனு மல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகு
நயன்றான் வரும்வழி நாமறி யோமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அகனறார வழிமுத லாதிப பிரானு
மிவனறா னெனநின றெளியனு மலலன
சிவனறான பலபல சீவனு மாகு
நயனறான வருமவழி நாமறி யொமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அகன்றார் வழி முதல் ஆதி பிரானும்
இவன் தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன் தான் பல பல சீவனும் ஆகும்
நயன்று தான் வரும் வழி நாம் அறியோமே.

பதப்பொருள்:

அகன்றார் (அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவிகள்) வழி (தாம் செல்லுகின்ற வழியில் மேன்மை நிலையை அடைந்த) முதல் (அந்த கணம் முதலே) ஆதி (ஆதியிலிருந்தே) பிரானும் (அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன்)
இவன் (இந்த துறவியே) தான் (தாம் தான்) என (என்று) நின்று (துறவியாகவே நின்றாலும்) எளியனும் (ஜீவாத்மா போன்ற எளியவன்) அல்லன் (இல்லை. பரமாத்மாவாகவே இருக்கின்றான்)
சிவன் (அந்த பரமாத்மாவாகிய சிவனே) தான் (தான்) பல (பல) பல (பல விதமான) சீவனும் (ஜீவாத்மாக்களாகவும்) ஆகும் (இருக்கின்றான்)
நயன்று (ஆனாலும் அவன் துறவிகளிடத்தில் விரும்பி) தான் (தாமே) வரும் (வருகின்ற) வழி (வழி முறையை) நாம் (நாம்) அறியோமே (அறிவது இல்லை).

விளக்கம்:

அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவிகள் தாம் செல்லுகின்ற வழியில் மேன்மை நிலையை அடைந்த அந்த கணம் முதலே ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன் இந்த துறவியே தாம் தான் என்று துறவியாகவே நின்றாலும் ஜீவாத்மா போன்ற எளியவன் இல்லை. பரமாத்மாவாகவே இருக்கின்றான். அந்த பரமாத்மாவாகிய சிவனே தான் பல பல விதமான ஜீவாத்மாக்களாகவும் இருக்கின்றான். ஆனாலும் அவன் துறவிகளிடத்தில் விரும்பி தாமே வருகின்ற வழி முறையை நாம் அறிவது இல்லை.

கருத்து:

அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்றாலும் அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற உயிர்களுக்குள் இறைவன் தமது பரமாத்ம நிலையிலியே விருப்பத்தோடு வந்து வீற்றிருக்கின்றான்.

பாடல் #1621

பாடல் #1621: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

நாகமு மொன்று படமைந்தி னாலது
போகமாழ் புற்றிற் பொருந்தி நிறைந்தது
வாக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேக படஞ்செய் துடம்பிட லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாகமு மொனறு படமைநதி னாலது
பொகமாழ புறறிற பொருநதி நிறைநதது
வாக மிரணடும படமவிரித தாடடொழிந
தெக படஞசெய துடமபிட லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாகமும் ஒன்று படம் ஐந்தின் ஆல் அது
போகம் ஆழ் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து
ஏக படம் செய்து உடம்பு இடல் ஆமே.

பதப்பொருள்:

நாகமும் (உயிர்களின் உடல்) ஒன்று (ஒன்று) படம் (அதன் உணர்வுகள்) ஐந்தின் (பார்த்தல் கேட்டல் சுவைத்தல் மணத்தல் உணர்தல் ஆகிய ஐந்து விதமான புலன்கள்) ஆல் (ஆல்) அது (கட்டி இழுக்கப் பட்டு)
போகம் (அதன் மூலம் உடல் அனுபவிக்கின்ற இன்பத்திலேயே) ஆழ் (ஆழ்ந்து) புற்றில் (ஆசைகளாகிய புற்றில்) பொருந்தி (பொருந்தி) நிறைந்தது (அதிலேயே வாழ்க்கை முழுவதும் நிறைந்து இருந்து)
ஆகம் (தூல உடல் சூட்சும மனம் ஆகிய) இரண்டும் (இரண்டும்) படம் (தமது ஆசைகளின் வழியே படம்) விரித்து (விரித்து) ஆட்டு (ஆடுகின்ற பாம்பைப் போல ஆடி) ஒழிந்து (வாழ்க்கை ஒழிந்து போகின்றது)
ஏக (இதை மாற்ற ஐந்து புலன்களையும் ஒரே) படம் (உடலாகிய மனம் அடக்கி ஆளும் படி) செய்து (செய்து) உடம்பு (அதை தமது உடலின்) இடல் (கட்டுப் பாட்டில் வைத்து தியானத்தில்) ஆமே (வீற்றிருக்கலாம்).

விளக்கம்:

உயிர்களின் உடல் ஒன்று அதன் உணர்வுகள் பார்த்தல் கேட்டல் சுவைத்தல் மணத்தல் உணர்தல் ஆகிய ஐந்து விதமான புலன்களால் கட்டி இழுக்கப்பட்டு அதன் மூலம் உடல் அனுபவிக்கின்ற இன்பத்திலேயே ஆழ்ந்து ஆசைகளாகிய புற்றில் பொருந்தி அதிலேயே வாழ்க்கை முழுவதும் நிறைந்து இருக்கின்றது. அதனால் தூல உடல் சூட்சும மனம் ஆகிய இரண்டும் தமது ஆசைகளின் வழியே படம் விரித்து ஆடுகின்ற பாம்பைப் போல ஆடி வாழ்க்கை ஒழிந்து போகின்றது. இதை மாற்ற ஐந்து புலன்களையும் ஒரே உடலாகிய மனம் அடக்கி ஆளும் படி செய்து அதை தமது உடலின் கட்டுப் பாட்டில் வைத்து தியானத்தில் வீற்றிருக்கலாம். இந்த நிலையே துறவு ஆகும்.

பாடல் #1620

பாடல் #1620: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூறுவன்
நாள்துறந் தார்க்கவ னண்ப னவாவலி
கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய்ய லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலதுறந தணணல விளஙகொளி கூறுவன
நாளதுறந தாரககவ னணப னவாவலி
காரதுறந தாரககவன கணணுத லாயநிறகும
பாரதுறந தாரககெ பதஞசெயய லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூறுவன்
நாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா வலி
கார் துறந்தார்க்கு அவன் கண் நுதல் ஆய் நிற்கும்
பார் துறந்தார்க்கே பதம் செய்யல் ஆமே.

பதப்பொருள்:

மேல் (துறவின் மேலான நிலையில்) துறந்து (தான் எனும் உணர்வை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு) அண்ணல் (அனைத்தையும் காத்து அருளுபவனாகிய இறைவன்) விளங்கு (உண்மையை காண்பித்து உணர வைக்கின்ற) ஒளி (ஒளியாக) கூறுவன் (உள்ளுக்குள் இருந்து சொல்லிக் கொடுத்து வழி நடத்துவான்)
நாள் (அதன் படியே கடை பிடித்து தமது வாழ்நாளை) துறந்தார்க்கு (விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு) அவன் (அந்த இறைவனே) நண்பன் (உற்ற நண்பனாக இருப்பான்) அவா (ஆசைகள்) வலி (எனும் வலிமை மிக்க)
கார் (மாய இருளை) துறந்தார்க்கு (விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு) அவன் (அந்த இறைவன்) கண் (ஞானமாகிய) நுதல் (நெற்றிக் கண்) ஆய் (ஆகவே) நிற்கும் (நின்று அருளுவான்)
பார் (அவன் காட்டிய ஞான வழியில் உலகத்தையும் உலக பற்றுக்களையும்) துறந்தார்க்கே (விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கே) பதம் (இறை நிலையை அடையும் பக்குவத்தை) செய்யல் (செய்து கொடுத்து) ஆமே (அருளுவான் இறைவன்).

விளக்கம்:

பாடல் #1619 இல் உள்ளபடி துறவின் சமாதியாகிய மேலான நிலையில் தான் எனும் உணர்வை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அனைத்தையும் காத்து அருளுபவனாகிய இறைவன் உண்மையை காண்பித்து உணர வைக்கின்ற ஒளியாக உள்ளுக்குள் இருந்து சொல்லிக் கொடுத்து வழி நடத்துவான். அதன் படியே கடை பிடித்து தமது வாழ்நாளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவனே உற்ற நண்பனாக இருப்பான். ஆசைகள் எனும் வலிமை மிக்க மாய இருளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவன் ஞானமாகிய நெற்றிக் கண்ணாகவே நின்று அருளுவான். அவன் காட்டிய ஞான வழியில் உலகத்தையும் உலக பற்றுக்களையும் விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கே இறை நிலையை அடையும் பக்குவத்தை செய்து கொடுத்து அருளுவான் இறைவன்.