மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #52

17-12-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மனம் என்பது என்ன?

உடலைச் சுற்றியிருக்கும் கோசங்களில் (மூடியிருக்கும் உறை) ஒன்று மனோமய கோசமாகும். இது மனதின் எண்ணங்களால் செய்யப்பட்ட ஒரு கோசம். மனம் என்பது எண்ணங்கள், சிந்தனைகள், ஜென்மாந்திர வாசனைகள் (முன் ஜென்மங்களின் நினைவுகள்) ஆகியவற்றின் கோர்வையாகும். ஜென்மாந்திர வாசனைகள் நம்மைத் தொடர்ந்து வரும் இது தீவிரம் அடைந்து சிந்தனைகளாக மாறி வெறியாக மாறி மனமாக மாறுகிறது. இந்த ஜென்மத்தில் நாம் சிந்திக்கும் எண்ணங்கள் அனைத்தும் மனமாக மாறுகிறது. மனம் என்று தனி வஸ்து (பொருள்) இல்லை. அத்தகைய மனம் பரிசுத்தம் அடைய வேண்டுமென்றால் நல்ல எண்ணங்கள் இருத்தல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. பலர் நல்வழியில் முயற்சிக்கின்றனர். இருப்பினும் அவ்வப்போது ஒரு பழமொழி கூறுவது போல் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல மனமும் கெட்ட எண்ணங்களை நோக்கி ஏறும். ஏறட்டும் அதனை மீண்டும் இறக்குவீர்களாக. இவ்விதமே மனதைப் பரிசுத்தம் செய்ய முடியும். பரிசுத்த ஆவி என்று மற்ற மதங்களில் கூறுவது பரிசுத்த மனநிலை என்பதேயாகும். இதை உணராது மனது வேறு பொருளாக எண்ணுவது தவறாகும். மனதினில் வலிமை இல்லையென்றால் மனத்தின் வலிமை குறைந்துவிடும். இதுவே ஒரு மனிதனின் குணத்தையும், வெற்றி, தோல்வியையும் தீர்மானிக்கிறது. இந்நிலையில் மனதைச் சீர்படுத்துவதே ஓவ்வொருவரின் முதல் கடமையாகும். மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்கின்ற ஓர் பழமொழி உண்டு. மனதால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை. மனதில் ஒரு எண்ணத்தை நிறுத்தி அந்த எண்ணத்திற்குத் தீவிரத்தைக் கொடுத்தால் அக்காரியம் உறுதியாக நடைபெறும் என்பது விதி. அத்தகைய மனவலிமையை முதலில் வளர்த்தல் வேண்டும். மனதைத் தேட வேண்டாம் எனெனில் மனம் நம் சிந்தனைகளே நம் எண்ணங்களே நமது ஜென்மாந்திர வாசனைகளே. மனது கஷ்டப்படுகிறது மனவேதனை கொள்கிறது என்று கூறுவோர் அந்த மனம் எங்கிருக்கிறது என எண்ணுதல் வேண்டும். இதனைத் தேடினாலும் கிடைக்காது என்கின்ற நிலையில் நம் எண்ணங்களே நமக்கு வேதனை அளிக்கிறது என உணர்தல் வேண்டும். அத்தகைய எண்ணங்களை மாற்றி இறைவனின் திசையில் திருப்பிட மனமது செம்மையாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #51

19-11-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பக்திமான் என்பது யார்?

எவனொருவன் ஒரு தெய்வத்தின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அத்தெய்வத்தின் பூஜைகளில் அதிக நேரம் செயல்படுகிறானோ அவனே பக்திமான் என்று அறியப்படுவான். அதாவது வெறுமனே நானும் பக்தன் என்று கூறிக்கொண்டவர்களெல்லாம் பக்திமான்கள் ஆகிவிடுவதில்லை. எவன் ஒருவன் ஒரு குறிப்பிட்ட மூர்த்தியின் (இஷ்ட தெய்வத்தின்) மீது மனதை வைத்துக் கொள்கின்றானோ அவனை பக்தன் என்று உரைக்கலாம். அந்த பக்தியின் விளைவாக எப்போதும் கிரியைகளிலும் சதா பக்திமயமான எண்ணத்தோடும் இருக்கின்றவன் பக்திமான் ஆகின்றான். இதைத் தமிழில் பக்தன் என்றால் எமக்கு பக்தி உள்ளது என்று கூறுகின்றவன் (பக்தி உள்ளவன்) பக்தன் என எளிதாக கூறலாம். இப்பக்தியின் விளைவாக கிரியைகளிலும் தியானம் ஜபம் என ஆழ்ந்து இருப்பவன் பக்திமான் ஆகின்றான். தமிழில் இதற்கு ஒரு சிறப்பான வார்த்தை உண்டு. அடிகள் என்று கூறுவார்கள். எந்த நேரமும் இறைவனின் சேவையில் முழுமையாக ஈடுபடுகின்றவன் ஓர் அடிகள் ஆகின்றான். பக்தன் பக்தி உண்டு என்பது ஓர் நிலை அப்பக்தியின் விளைவாக இறைச்சேவையில் முழுமையாக ஈடுபடுவது அடிகள் என்னும் நிலை. இச்சிறு வேறுபாடே இதற்குப் பொருளாகின்றது. பக்தன் அடிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. தன் எண்ணத்தாலும், உடலாலும் ஆன்மாவாலும் எப்போதும் இறைவனை வழிபடுபவரே அடிகள் ஆகலாம். இவ்வாறு கிரியைகள் செய்து ஒரு பக்தன் அடிகளாக மாறுவதே சிறப்பான பக்திமார்க்கம். இப்போது உங்களுக்குப் புரியும்படி விளக்கியுள்ளோம் என்று நம்புகின்றோம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #50

23-10-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மகான்கள் பிறந்த நாளை ஆனந்தத்துடன் ஜெயந்தி என்று சிறப்பாக கொண்டாடுகின்றோம் ஆனால் அவர்கள் முக்தி அடைந்த நாளையும் அவ்வாறு சிறப்பாக கொண்டாடுவது ஏன்? அதனால் யாருக்கு நன்மை?

பொதுவாக ஜனன காலம் (குழந்தை பிறக்கும் நேரம்) அதன் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆனந்தம் கொடுக்கின்றது. ஆனால் குழந்தைக்கு அது பிறந்த நாள் முதல் வேதனைகள் துவங்குகின்றது. மாறாக முக்தி, இறப்பு என்பது அந்தக் குழந்தைக்கு அதன் வேதனைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் நேரமாகும். ஆதலால் அதுவும் கொண்டாடப்பட வேண்டியது என்று ஞான வழியில் கூறுவோம். அடுத்ததாக பலருக்கும் பலவழிகளில் ஞானிகள் உதவுகின்றனர். இது தெரிந்தும் தெரியாமலும் பல வழிகளில் நடைபெறுகின்றது. எனவே அவர்கள் விடுதலை பெற்ற நன்நாளில் அவர்களைப் போற்றி நன்றி செலுத்துவது ஓர் மகத்தான காரியமாகின்றது. அதுமட்டுமின்றி முக்தி பெற்றபின் சூட்சும வடிவில் அந்த மகான்கள் சஞ்சரிக்கும் காலங்களில் சில மலங்கள் அவர்களின் சூட்சும வடிவோடு ஒட்டிக்கொள்கின்றன. அவர்கள் முக்தி பெற்ற காலங்களில் பல பூஜைகள், மந்திரங்கள், செய்து ஆரத்தி காண்பிப்பதன் மூலம் அந்த மலங்கள் அவர்களின் சூட்சும வடிவை விட்டு நீங்குவதற்கு நாம் உதவுகின்றோம். இது அந்த மகான்களுக்கு நாம் செய்யும் மிகவும் புனிதமான காரியமாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #49

26-9-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மகான்களை வணங்கி வருவதின் மூலம் தங்களுக்கு உடல் பாதிப்புகள், கடினங்கள் ஏதும் வராது என்று சிலர் நம்புகின்றனர், இது சரியா?

அவ்வாறு நம்புவது சரியானது இல்லை. அவரவர் கர்ம நிலைகளால் உடல் பாதிப்புகளும் சில கடினங்களும் வந்தே தீரும். இதற்கு விதி விலக்கு இல்லை. மகான்களும் இவ்விதம் தங்களின் கர்மங்களைத் தீர்த்திடவே நோய்களைத் தாங்கிக்கொண்டனர். இது அனைவரும் அறிந்ததே இவ்விதமே அவர்களுக்கும் கடின காலங்கள் வந்து செல்லும். பின்பு மகான்களுக்கும் சாதாரன மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் அத்தகைய கடினங்கள் மகான்களை பாதித்ததில்லை. ஏனெனில் அவர்களின் மனநிலைகள் உடலை விட்டு மேல் நிலையில் இருந்தது. இவ்விதம் மாறிட முயற்சிகள் வேண்டும். மகான்களை பின்பற்றினால் கடினங்கள் வரக்கூடாது என்றும் உடல் உபாதைகள் நேரிடக்கூடாது என்றும் குடும்பத்தில் அசுபங்கள் (கெட்ட நிகழ்வுகள்) நேரிடக்கூடாது என்றும் எண்ணுவது பெரும் தவறாகும். இயற்கை எப்போதும் இயற்கையாகவே இருக்கும். அதற்கு விதி விலக்கு இல்லை என்பதை நன்கு அறிதல் வேண்டும். மகான்களை பின்பற்றுவது பின்பற்றுவோர்களது நிலையை உயர்த்தி எவ்வித பாதிப்பும் இல்லாத அளவில் மனநிலை வேண்டும் என்ற நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கே.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #48

29-8-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எடுப்பார் கைப்பிள்ளை என்கின்ற ஓர் வாக்கியத்திற்கு உண்மை அர்த்தம் என்ன?

அதன் உண்மையான அர்த்தம் யாருடைய குழந்தையையும் நாம் எடுத்துவிட்டால் நமது கைப்பிள்ளையாகின்றது என்பதல்ல அது களவாணித்தனமாகும். எடுப்பார் கைப்பிள்ளை என்றால் ஓர் குழந்தையின் அனைத்துப் பொறுப்புகளையும் நாம் ஏற்றுக் கொண்டால் அது கைப்பிள்ளையாகின்றது, நமது கைவசமுள்ள பிள்ளையாகின்றது என்பதே பொருளாகும். அது மட்டுமல்லாமல் இந்த வாக்கியத்திற்கு எடுப்பார் கசப்பில்லை என்கின்ற பொருளையும் உணர வேண்டும். தெய்வீக காரியங்களைப் பொறுப்பு ஏற்றால் அங்கு கசப்பு ஏற்படாது என்பதே பொருளாகும். பழமையான தமிழில் கைப்பில்லை (கைப்பு இல்லை) என்பது கசப்பில்லை (கசப்பு இல்லை) என்கிற பொருளாகும். அவ்விதம் பார்த்திட பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதால் எவ்வித கசப்புகளும் நேரிடாது என்பதும் பொருளாகின்றது. நாம் பொறுப்புகளை ஏற்றிட பல நஷ்டங்கள் ஏற்படுகின்றது என்ற எண்ணம் தோன்றினால் அது நமது கைப்பிள்ளை ஆகாது மாற்றார் கைப்பிள்ளையாக விடுதல் வேண்டும் என்பதே உண்மையான பொருளாகின்றது. அவ்விதமில்லாது நாம் ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டால் அது நமது கைப்பிள்ளை ஆகும் என்றால் அது பல பிரச்சினைகளில் முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #47

2-8-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தேவைக்கேற்ப பணம் வசிக்க வீடு அனைத்தும் இருந்தும் ஏன் அமைதி இல்லை?

அமைதி என்கிற வார்த்தையைத் தனியாக அ மை தீ என்று மூன்றாகப் பிரித்தால் தீயை அனைத்த பின்பே அமைதி கிட்டும் என்பதே விளக்கமாகின்றது. அனைவருக்கும் உள்ளே தீ எரிகின்றது. பலவற்றை சாதிக்க வேண்டும் என்கின்ற தீ. அவ்விதம் சாதிக்க முடியவில்லை என்றால் அமைதியில் குறை காண்கின்றனர். இதன் பொருள் என்னவென்றால் இருப்பதை வைத்து அமைதி காணுதல் வேண்டும் என்பதேயாகும். இல்லாதோர் பலர் இருக்க நமக்கு இந்த அளவிற்கு இறைவன் அளித்துள்ளானே என்கின்ற ஓர் அமைதியை அறிதல் வேண்டும். இவ்விதம் இல்லாமல் மேலும் மேலும் வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அந்த இடத்தில் அமைதி ஓர் துளி அளவிற்கும் இருக்காது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் நமது உடல் ஆரோக்கியத்தை நாம் சிந்தித்தல் வேண்டும். கைகள், கால்கள், கண்கள், உடம்பு ஆகிய அனைத்தும் நமக்கு நன்றாக உள்ளதே இது இல்லாதோர் எத்தனை பேர் உள்ளனர்? வசிக்க ஒரு வீடு நமக்கு உள்ளது. அப்படி வசிக்க ஒரு வீடு இல்லாமல் மழையிலும் வெயிலிலும் மரத்தடியிலும் வாழ்வோர் எத்தனை எத்தனை பேர் என சிந்தித்தல் வேண்டும். ஒரு வேளை உணவு உண்ண வழி இல்லாதோர் இருக்கின்றனர் என்பதை அறிதல் வேண்டும். இவ்விதம் பார்த்தால் நாம் பெரும் பாக்கியசாலியாக இருக்கின்றோம் என்பதை உறுதியாக உணரலாம். இந்த எண்ணத்தை மனதில் நன்கு வைத்தால் பின்பு அமைதியைக் காண்போம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #46

6-7-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தியானம் வரவில்லையே ஏன்?

தியானம் செய்ய முயற்சிக்கவில்லை என்பதே காரணம். தியானம் செய்யத் தெரியவில்லை என்று கூறினால் பிறவி முதல் இறப்பு வரை ஓர் தியான நிலைதான் என்பதை இங்கு உணர வேண்டும். ஏனெனில் எதேதோ சிந்தித்து வாழ்கின்றீர்கள் அதற்கு முழு சிரத்தையைக் கொடுக்கின்றீர்கள் அச்சிரத்தையில் சிறு பங்கை இறைவனுக்குச் செலுத்த வேண்டும். எளிதான வழி என்னவென்றால் சுவாசத்தை உள்ளே இழுக்கும்போது ஓம் என்றும் சுவாசத்தை வெளியே விடும்போது மானசீகமாக இஷ்ட தெய்வத்தின் பெயரையும் கூறி தியானம் செய்தால் விரைவில் தியான நிலைகள் கைவரக்கூடும். இதனை மட்டும் செய்தாலே சிறப்புகள் அடைவீர்கள். இக்காலத்தில் உள்ள மகா யோகியரும் இதனையே கூறுகின்றனர். சகஜ பிராணய நிலைகள் தியான நிலை அளிப்பது மட்டுமின்றி சர்வரோக நிவாரணி என்றும் கூறுகின்றனர். இத்தகைய நல்ல விசயத்தைச் செய்ய ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள் என்று புரியவில்லை. அனைவரும் இந்த வழியைக் கடைபிடித்தால், எளிதில் ஆன்மீகப் பாதையில் நல்ல நிலை அடைய முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #45

12-5-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கலிகாலத் தன்மையில் வாழ்க்கை கடினமாக இருக்கும் போது இடைவிடாமல் எப்படி தியானம் செய்வது? இறைவன் மீது எவ்விதம் சிந்தனை வைப்பது?

ஒவ்வொரு காரியங்களையும் செய்யும் முன்னதாக அதை இறைவனுக்கு அர்ப்பணித்தல் வேண்டும். இறைவன் என்பது அவரவர்களின் இஷ்ட தெய்வம் ஆகும். பின்பு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனது நாமங்களைக் கூறிக்கொண்டிருக்க ஒரு வினாடியும் அவன் எண்ணம் இல்லாமல் இருக்காது என்பது எமது கணக்கு இக்கணக்கு தவறாகாது. ஏனெனில் இது அனுபவத்தின் வழியாக அடைந்த ஒரு உண்மை. எப்பொழுதும் எக்காலத்திலும் இறை சிந்தனையோடு செயல்படுங்கள். இவ்விதம் செய்திட இடைவிடாமல் இறை தியானம் கைகூடும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #44

15-4-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மனமே அனைத்தும் மனதினால் அனைத்தையும் வென்று விடலாம் என்றால் இப்பூஜைகள் எதற்கு?

மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்றும் ஒரு வார்த்தை உள்ளதே? மனமது செம்மையாகும் வரை இப்பூஜைகள் உறுதியாக வேண்டும். ஏனெனில் பூஜைகளில் விதிமுறைகள் உண்டு விதிமுறைகளைக் கடைபிடிக்கும்போது நம்முடைய சிரத்தையும் கவனமும் மேலோங்குகிறது. படிப்படியாக இச் சிறுசிறு சாதனைகளால் மனம் சக்தி பெறுகிறது மனம் படிப்படியாக செம்மையாகிறது. அந்நிலை அடைந்து விட்டால் பூஜைகள் தேவையில்லை. வெளியில் செய்யும் பூஜைகளை விட மானசீகமாய் பூஜைகள் செய்திடுவது பிரம்மாண்டமாய் பலனை அளிக்கும். மானசீக பூஜைகள் செய்பவர்கள் ஒரு சிலரே இருக்கின்றார்கள். இதற்கென நேரம் ஒதுக்கிவிட முடியவில்லை என்பது பொது அபிப்பிராயமாகும். இதற்கு 24 மணிநேரத்தில் வேண்டியது 20 நிமிடங்களே. இறைவனுக்கு ஒதுக்கிவிடும் நேரம் நீண்டநேரம் என எண்ணி அதனை ஒதுக்கிவிடுகிறீர்கள். இதனைத் தவிர்த்து, காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் இறைவனுக்கென மானசீகபூஜை செய்து மானசீகமாய்ப் பழகிக்கொள்ளுங்கள். இது பெருமளவிற்கு நன்மை தருவதாகும். பூஜைகள் அதன் விதிமுறைகள் உள்ளிருக்கும் கிரியைகள் கர்மங்கள் என்பதெல்லாம் மன வலிமைக்காகவே படைத்ததாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #43

19-3-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்: பகுதி #1

விசுவாசம் என்றால் என்ன?

குருவின் மீது வைக்கும் விசுவாசமானது அனைத்திலும் எப்போதும் இருக்க வேண்டும். பின்பு நமக்கென ஒன்றும் இல்லை என்பதும் அறிந்து கொள்ள வேண்டும். உடல், பொருள், அனைத்தையும் குருவின் திருவடியில் வைத்து விட்டு நமக்கென ஒன்றும் இல்லை என்கிற எண்ணத்துடன் இருந்தால் சரணாகதி என்பது முழுமையாகும். இதுவே விசுவாசத்தின் எல்லை ஆகும். முதலில் குருவின் சுகசௌகர்யங்களையே முதலாகப் பார்க்க வேண்டும். இரண்டாவதே நம்முடையது என உணர்தல் வேண்டும். நம்முடையது அனைத்தும் இறைவனுடையது என்ற உண்மையான எண்ணத்துடன் இருந்தால் அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பது இறைவன் முடிவு. வீணாக குருநாதரிடம் சென்று என்ன செய்தல் வேண்டும் என கேள்விகள் கேட்பது தவறாகும். ஏனெனில் குருநாதரிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய விடையை நம்மால் கடைபிடிக்க முடியவில்லை என்றால் அது தவறாகும். மனதில் ஒரு முடிவு எடுத்து விட்டு பின்பு அந்த முடிவான பதிலைக் குருநாதர் கூற வேண்டும் என்று இரண்டாவதாக குருநாதரிடம் அபிப்பிராயம் கேட்பது தவறாகும். இதனை தவிர்த்தல் வேண்டும். குருநாதரிடம் கேள்வி கேட்டு அவர் பதில் கூறி விட்டால் அவர் கூறிய பதிலை தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு செயற்படுதல் வேண்டும். இல்லையென்றால் குருநாதருடன் உள்ள உறவு சீரில்லா உறவாகும். குருநாதர் எது செய்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் உண்டு காரணம் உண்டு சில கர்ம விதிகளை மாற்றிட சிலவற்றை செய்ய வைக்கின்றார் என்பதை மறக்காமல் செயல்பட வேண்டும்.

வீணாக எதுவும் நடப்பதில்லை என்பது உண்மை என்றால் குருநாதர் சொல்வது அனைத்தும் உண்மையே. இதனை மறக்காமல் மனதில் வைத்துச் செயல்படவேண்டும். வீணாக இதை செய்து கொடு அதை செய்து கொடு என்று கேட்பதும் தவறாகும். ஏனெனில் உமக்கு என்ன வேண்டும் என்பதை குருநாதர் நன்றாக அறிவார். சரியான நேரத்தில் அதை அவர் செய்து கொடுப்பார் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம். இந்நிலையில் இவையாவும் செய்திட முடியுமா என முழுமையாகச் சிந்தித்தபின் முடியும் என்றால் குருவை அணுகி ஏற்றுக் கொள்ளுங்கள். இது தான் உண்மையான நிலை. இவ்விதமே வாழ்வோம் என்று முடிவு எடுத்தால் அவர்களே உபதேசம் பெறத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இல்லையென்றால் வாழ்த்துக்கள் மட்டுமே பெறத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. வாழ்த்து பெறத் தகுதி பெற்றவர் என்று மட்டும் நினைத்தால் ஆனந்தமாக இருப்பீர்கள். ஏனெனில் எப்பொழுதும் வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள் இதில் எந்தவித குறையும் இருக்காது ஆசிகள் அருவி போல் கொட்டும். ஆனால் முழுமையாக சரணடைந்துவிட்டால் சமயங்களில் வாய் பேசாது கோலும் பேசும் (சொல்வதை செய்யவில்லையென்றால் தண்டனைகள் கிடைக்கும்) இதையும் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். எனெனில் முதலில் பக்தனாக இருந்தாய் வாழ்த்துக்கள் கிடைத்தது இரண்டாவது நிலையில் சிஷ்யனாகச் செல்கின்றாய் சிஷ்யன் தவறு செய்தால் சிகிச்சை (தண்டனை) உண்டு. இவை அனைத்தையும் மனதில் வைத்து நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் எவ்விதம் உங்களால் செயல்பட முடியும் என்றெல்லாம் சிந்தித்துப் பின்பு குருநாதரை அணுகுங்கள் இல்லையென்றால் மிகவும் கடினம்.