மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #42

23-1-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நாம் காணும் துக்கங்களுக்கு மூல காரணம் என்ன?

இந்தக் கேள்விக்கு ஒரே வரியில் எதிர்பார்ப்புகள் என்று பதில் கூறினோம். எவ்விதம் என்றால் எவ்விதமான ஆசைகள், பாசங்கள், விகாரங்கள் ஆகியவை மனதில் தோன்றினாலும் அதற்கு மூல காரணம் தேடிப் பார்த்தால் நமது எதிர்பார்ப்புகள் என்று உணரலாம். எதிர்பார்ப்பின்றி துக்கம் இல்லை. எதிர்பார்ப்பின்றி தோல்வி இல்லை. எதிர்பார்ப்பின்றி மோசம் போவதில்லை. எதிர்பார்ப்பின்றி தீயது எதுவும் நடைபெறுவதில்லை என்பதை எளிதாக உணர முடியும். நாம் உறுதியாக எதிர்பார்ப்பின்றி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்பார்ப்பின்றி என்ன வருகிறதோ என்ன நடக்கின்றதோ அனைத்தும் அவன் செயல் அவன் அருள் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதன் இறைவனின் திருவடிகளை எளிதாக அடைந்திட முடியும். இது பெரும் சாதனை அல்ல கடினமான சாதனை என்று கூறுகிறோம். எதிர்பார்ப்பின்றி வாழ்கின்றவன் எவன் என்று தேடினால் எளிதாகக் காண்பதில்லை. இத்தகைய மனிதர்கள் எதிர்பார்ப்புகள் வேண்டாம் என எண்ணிக் காடுகளிலும் குகைகளிலும் மறைந்து விடுகின்றனர். மக்கள் மத்தியில் வாழ்கின்றவனுக்கு எதிர்பார்ப்புகள் உறுதியாக இருக்கும். இதில் நல்ல எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு தீய எதிர்பார்ப்புகளை நீக்கி விட்டால் தெய்வ நிலை தெய்வ காட்சிகள் காணக்கூடும்.

பாடல் #731

பாடல் #731: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெற வேநினைந் தோதுஞ் சகாரம்
மறிப்பது மந்திர மன்னிய நாதம்
அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.

விளக்கம்:

ஒரு மாசுமில்லாத தூய்மையான ஒளியுருவான சிவத்தின் அம்சமாக விளங்கும் அ எனும் எழுத்தையும் மாமாயையின் ஒலியுருவான சக்தியின் அம்சமாக விளங்கும் ச எனும் எழுத்தையும் மனதுக்குள் உச்சரிக்கும்பொழுது தோன்றும் அசபை மந்திரத்தை சத்தமாகச் சொல்லாமல் மனதுக்குள்ளேயே ஓதி மனனம் செய்வது அகயோகத்தைக் கடைபிடிக்கும் யோகியர்களுக்கான தர்ம வழியாகும்.

கருத்து: அகயோகம் செய்யும் யோகியர்கள் அம்ச எனும் அசபை மந்திரத்தை மனதிற்குள்ளேயே ஓதுவது அவர்களுக்கான தர்மவழியாகும். இதை முறைப்படி குருவிடம் பெற்று பயன்படுத்துதல் வேண்டும்.

பாடல் #732

பாடல் #732: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்திய பானனைச்
சிந்தித் தெழுப்பவே சிவனவ னாமே.

விளக்கம்:

நாசியின் மூலம் தொப்புள் இருக்கும் வயிறு வரை உள்ளிழுத்த மூச்சுக்காற்றை பாடல் #731 இல் கூறிய மந்திரத்தை இறைவனை நினைத்து தியானித்துக் கொண்டே மேலே எடுத்துச் சென்று இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நிறுத்தி வைத்துவிட்டு மூலாதாரத்திலுள்ள மூலாக்கினியை இறைவனை சிந்தித்துக் கொண்டே சுழுமுனை நாடியின் வழியாக மேலே எடுத்துச் சென்று இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நிறுத்தி வைத்த காற்றோடு சேர்த்து சகஸ்ரதளத்திலுள்ள ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரோடு கலக்கும் சாதகன் சிவனாவான்.

கருத்து: மூச்சுக்காற்றையும் மூலாக்கினியையும் சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைவனோடு கலந்து அகயோகம் செய்யும் சாதகன் சிவனாவான்.

பாடல் #733

பாடல் #733: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே.

விளக்கம்:

எப்போதும் மாறாத மலத்தைக் கொண்டிருக்கும் மலத்துவாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலேயும் சொல்லாமல் உணரும் பாலுணர்ச்சியின் குறிக்கு இரண்டு விரற்கடை கீழேயும் உள்ள இடமே மூலாதாரம் இருக்கும் இடமாகும். அந்த இடத்தின் மேல் எண்ணத்தை வைத்து பாடல் #731 இல் கொடுத்துள்ள மந்திரத்தை மனதிற்குள் தியானித்தால் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களிலும் உள்ள இறை சக்தியே அங்கேயும் அக்கினியாக இருக்கிறது என்பதை கண்டு உணரலாம்.

கருத்து: உடலிலுள்ள அனைத்து சக்திமயங்களிலும் இறை சக்தியே இருக்கின்றது. மூலாதாரத்தை எண்ணி மந்திரத்தால் மனதிற்குள் தியானிக்க ஆறு ஆதாரங்களிலும் உள்ள இறை சக்தியே உணரலாம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #82

29-10-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

அனைத்தையும் இறைவன் திருவடியில் வைத்து சரணடைந்தால் எவ்வித அச்சமும் வேண்டாம் என்றும் தியானம் சிறப்பாக நிலைத்தால் கிரகங்களுக்கும் மேலான நிலைக்கும் செல்ல கிரகங்கள் நம்மை பாதிக்காது என்கின்ற அறிவுரையும் இங்கும் கூறுகின்றோம்

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #81

5-9-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எமக்குள் இருக்கும் இறைவா என்று கூறுவது சிலருக்கு கடினமாக இருக்கின்றது. இவ்விதமிருக்க அவரவர் தம் செளகரியத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக பெயருக்கு முன்பு ஆத்மா என சேர்த்து அழைக்கலாம். இல்லையேல் இஷ்ட தெய்வத்தை உள்ளிருப்பது போல் பாவனை செய்தும் அத்தெய்வத்தின் பெயருக்கு முன்பு ஆத்மா என்று சேர்த்து அழைக்கலாம். இல்லையேல் எமக்குள் இருக்கும் என்று கூறி தெய்வத்தின் பெயரை சேர்த்திடலாம். இவ்விதம் குழப்பமற்ற நிலையில் அனைத்து கடினங்களும் நீங்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #80

12-7-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

அழிவற்ற பொருள் எது? பஞ்சபூதங்களுக்கு அழிவில்லையா?

முதலில் பஞ்சபூதங்களை எடுத்துக் கொள்வோம். பஞ்சபூதங்கள் அனைத்தும் உள்ளடங்கியிருக்கும் வரை அப்பொருள் நிலைக்கிறது. பஞ்சபூதங்கள் மனித உடலில் இருக்கும் வரை உயிர் இருக்கின்றது. இவ்வைந்தும் பிரிந்திட அங்கிருக்கும் பொருள் அழிகின்றது. இருப்பினும் பஞ்சபூதங்கள் ஒன்றை மற்றொன்று அழிக்கும் தன்மையும் கொண்டுள்ளது. குறிப்பாக நீர் அக்னியை அழிக்கின்றது. நீரை அக்னி வற்ற வைக்கின்றது. காற்றால் அக்னி பாதிக்கப்படுகின்றது. வளர்க்கப்படவும் செய்கின்றது. இவ்விதம் ஐந்தும் ஒன்றாக இருக்கும் போது நல் உயிராகவும் பிரிந்தவுடன் அழிவாகிறது. பஞ்சபூதங்கள் ஒன்றை ஒன்று அழிக்கும் தகுதி பெற்றுள்ளது. அழியாப்பொருள் எது என்றால் சந்தேகமின்றி பரம்பொருள் மட்டுமே. பரம்பொருளில் இருந்து எவ்விதம் உயிர்கள் பிரிந்து ஜீவாத்மாக்களாக இருக்கும் பொழுதும் எவ்வித குறையும் இல்லை மேலும் உயிர்கள் அதில் சேரும் பொழுதும் எவ்வதிகரிப்பும் இல்லை. விருப்பு வெருப்பற்ற பரம்பொருளுக்கு எக்காலத்திலும் அழிவில்லை என்பதால் சதாசிவத்தை பரம்பொருள் என்று அழைக்கின்றோம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #79

15-6-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கர்மத்தின் விளைவுகள் அனைத்தும் என்றால் இறைவன் எதற்கு?

கர்மங்களை இறைவன் செய்வதில்லை. கர்மங்கள் செய்வது மானிடரே என்பதை முதலில் உணர வேண்டும். கர்மத்தின் விளைவுகள் அனுபவிப்பதும் மானிடரே. இவ்விதமிருக்க இறைவன் எதற்கு என்று கேட்டால் முதலில் மனிதன் செய்யும் கர்மவினைகளை மனிதன் சகிக்க வேண்டும். அதன் விளைவுகளையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்ற விதியும் உண்டு. இதற்கு இறைவன் எங்கு நுழைகின்றான் என்று கேட்டால் மனிதன் செய்த பாவங்களை அனுபவிக்கும் போதும் நல்வினைகளை அனுபவிக்கும் போது அனைத்தையும் தாங்கும் சக்தியை இறைவன் தருகின்றான் என்பதே இதற்கு விளக்கம் ஆகின்றது. இதற்காகவே இறைவனை வணங்குதல் வேண்டுமே ஒழிய என் கர்மத்தை ஏற்றுக்கொள் என்று கூறுவதும் மன்னிக்க வேண்டும் என்று கூறுவதும் மானிடர் தன்மையே. இதனை மாற்றி அமைத்தல் வேண்டும். இறைவனை இறைவனாகக் கண்டு இக்கர்மங்களை தீர்த்திட வாய்ப்பு அளித்ததற்கும் நாம் நன்றி கூறுதல் வேண்டும். பாவம் இறைவன் செய்வதில்லை மானிடரே செய்கின்றனர் என்பதை நல்நிலையில் உணர்ந்து செயல்பட்டால் அனைத்து வழிகளிலும் நலம் காண்பீர்கள். மனிதன் செய்யும் தவறுகளை இறைவன் சகித்தல் வேண்டும். செய்யும் பாவங்கள் இறைவன் சகித்தல் வேண்டும் என எண்ணுவது ஒரு நலம் தரும் விஷயமா என்று சிந்திக்க வேண்டும். இரண்டாவதாக நீங்கள் உங்கள் பாவங்களை சகித்தல் வேண்டும் என்றால் உடன் இருப்பவரும் சகித்தல் வேண்டும் என்று பொருள் ஆகின்றது. இதற்கு இறைவன் காரணமாகின்றானா? உமது செயல் உடன் இருப்பவர்களை பாதிக்கின்றதல்லவா பாதிக்கப்பட்டவர்கள் உங்களை சபிக்கும் போது அந்த பாவங்களையும் நீ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையும் உண்டு. இதையும் தாங்கும் வழியையும் மேலும் சகிக்கும் தன்மையும் இறைவன் அளிக்கின்றான். தவறுகள் செய்கின்றோம் என உணரும் திறனும் அவ்விறைவனே அளிக்கின்றான். இதனை உணர்ந்து செயல் படுதல் வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #78

18-5-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகத்தின் அச்சாணியே சிரத்தை சிரத்தை சிரத்தை இதில் தவறுகள் செய்தால் சோம்பலின் விளைவாக தவறுகள் செய்தல் சரியல்ல. அவ்விதம் யாதேனும் ஓர் நிலை ஏற்ப்பட்டால் ஒதுங்கி விடுவதே மேல். யாமும் செய்கின்றோம் என செய்து தவறுகள் செய்தால் அது பெருங்குற்றமாக மாறக்கூடும். பல ஆண்டுகள் செய்த சில காரியங்கள் பாழாகி விட்டால் அதை சீர்திருத்த குறைந்த அளவில் ஓர் ஆண்டு ஆகும். இதனை மனதில் வைத்து செயல் படுவீர்களாக.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #77

21-4-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகத்தில் விடுவது பெறுவது முக்கியமானது என கூறுவோறும் உண்டு அது எவ்விதம் விடுவது பெறுவது?

ஆன்மீகத்தில் விடுதல் என கூறினால் முதன்மையில் தீயவை யாவையும் விடுதல் வேண்டும் என்கின்ற சட்டம் உண்டு. இதில் எவ்வித விதிவிலக்கும் இல்லை. இரண்டாவதாக சர்வ ஆசைகளையும் விடுதல் வேண்டும். இதற்கு விதிவிலக்கு ஒன்று இறை நாட்டம். மூன்றாவது ஐம்புலன்களினால் நேரிடக்கூடிய கோபதாபங்கள் எண்ணங்கள் என்பதெல்லாம் விடுதல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. இதற்கு விதிவிலக்கு சிறு அளவு ஆகாரமும் நீரும் ஆகும். பெறுதல் என்பது என்ன என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. முதன்மையில் அறிவு, அறிவை தொடர்வது ஞானம், ஞானத்தை தொடர்வது அருள், அருளை தொடர்வது முக்தி என்கின்ற வரிசையில் செல்லும் மனதில் முன்கூறிய விடுதல்கள் எற்பட அந்த உடலில் இடம் வெறுமையாக இருக்க அந்த வெறுமையான இடத்தில் பெறுதலுக்கூறிய நற்குணங்கள் சென்று நிரம்பிட உடலில் ஓர் விசேஷ ஆனந்தம் காணக்கூடும். இப்பேரானந்தம் அடைந்திட பொலிவு என்கின்ற அத்தேஜசை அடையலாம். மனம் ஓர் நிலைப்பட்டு என்றும் ஆனந்த நிலையில் இருக்கும் இது தான் விடுதல் பெறுதல்.