பாடல் #1439

பாடல் #1439: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

உடலான வைந்தையு மோரொன்று மைந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவலப் பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுற்றல் சித்தாந்த மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உடலான வைநதையு மொரொனறு மைநது
மடலான மாமாயை மறறுளள நீவப
படலான கெவலப பாசந துடைததுத
திடமாயத தனையுறறல சிததாநத மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உடல் ஆன ஐந்தையும் ஓர் ஒன்று ஐந்து
மடல் ஆன மா மாயை மற்று உள்ள நீவ
படல் ஆன கேவல பாசம் துடைத்து
திடம் ஆய் தனை உற்றல் சித்தாந்த மார்கமே.

பதப்பொருள்:

உடல் (மனித உடலாக) ஆன (இருக்கின்ற) ஐந்தையும் (பஞ்ச பூதங்களையும் [நிலம் – தசைகளும் எலும்புகளும், நீர் – இரத்தமும், உமிழ் நீரும், நெருப்பு – உணவை செரிக்கும் சூடு, காற்று – மூச்சுக் காற்று, ஆகாயம் – மனம், புத்தி, அறிவு]) ஓர் (அதை ஒன்றின் மேல்) ஒன்று (ஒன்றாக மூடி இருக்கின்ற) ஐந்து (ஐந்து வகையான கோசங்களையும் [அன்ன மயம், பிராண மயம், மனோ மயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம்] கடந்து நின்று)
மடல் (அதையும் தாண்டி விரிந்து) ஆன (இருக்கின்ற) மாமாயை (சுத்த மாயையும்) மற்று (மற்றும்) உள்ள (இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும்) நீவ (தாண்டிச் சென்று)
படல் (இறைவனை அடைவதற்கு தடையாக) ஆன (இருக்கின்ற) கேவல (மாயையிலேயே மயங்கி இருக்கின்ற கேவல நிலைக்குக் காரணமாக இருக்கின்ற) பாசம் (பாசங்களையும்) துடைத்து (முழுவதுமாக நீக்கி விட்டு)
திடம் (உறுதி) ஆய் (ஆக) தனை (தனக்குள் இருக்கும் இறைவனை) உற்றல் (உற்று கவனித்த படியே இருப்பதே) சித்தாந்த (சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற) மார்கமே (கடும் சுத்த மார்க்கத்தின் வழியாகும்).

விளக்கம்:

மனித உடலாக இருக்கின்ற ஐந்து விதமான பஞ்ச பூதங்களையும் அதை ஒன்றின் மேல் ஒன்றாக மூடி இருக்கின்ற ஐந்து வகையான கோசங்களையும் கடந்து நின்று அதையும் தாண்டி விரிந்து இருக்கின்ற சுத்த மாயையும் மற்றும் இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும் தாண்டிச் சென்று இறைவனை அடைவதற்கு தடையாக மாயையிலேயே மயங்கி இருக்கின்ற கேவல நிலைக்குக் காரணமாக இருக்கின்ற பாசங்களையும் முழுவதுமாக நீக்கி விட்டு உறுதியாக தனக்குள் இருக்கும் இறைவனை மட்டுமே உற்று கவனித்த படியே இருப்பதே சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற கடும் சுத்த மார்க்கத்தின் வழியாகும்.

பஞ்ச பூதங்கள்:

  1. நிலம் – தசைகளும் எலும்புகளும்
  2. நீர் – இரத்தமும் உமிழ் நீரும்
  3. நெருப்பு – உணவை செரிக்கும் சூடு
  4. காற்று – மூச்சுக் காற்று
  5. ஆகாயம் – மனம் புத்தி அறிவு

பஞ்ச கோசங்கள்:

  1. அன்ன மய கோசம் – உணவால் ஆகிய உறை
  2. பிராண மய கோசம் – காற்றால் ஆகிய உறை
  3. மனோ மய கோசம் – மனம் / எண்ணங்களால் ஆகிய உறை
  4. விஞ்ஞான மய கோசம் – அறிவு / புத்தி ஆகிய உறை
  5. ஆனந்த மய கோசம் – பேரின்பத்தால் ஆகிய உறை

பாடல் #1440

பாடல் #1440: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

சுத்தஞ் சிவனுரை தானதுட் டோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூல
மத்தகை யான்மா வரனை யடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சுததஞ சிவனுரை தானதுட டொயாமல
முததர பதபபொருள முததிவித தாமூல
மததகை யானமா வரனை யடைநதறறாற
சுதத சிவமாவ ரெசுதத சைவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சுத்த சிவன் உரை தான் அது உட் ஓயாமல்
முத்தர் பத பொருள் முத்தி வித்து ஆம் மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்து அற்றால்
சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே.

பதப்பொருள்:

சுத்த (மாசு இல்லாத பரம்பொருளாகிய) சிவன் (இறைவன்) உரை (சொல்லி அருளிய போதனைகளை) தான் (தமக்கு) அது (அந்த போதனைகளை) உட் (உள்ளே வைத்து) ஓயாமல் (ஓயாமல் அவற்றை சிந்தித்து ஆராய்ந்து)
முத்தர் (முத்தி நிலைக்கு) பத (இறைவன் அருளிய போதனைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளின்) பொருள் (பொருளும்) முத்தி (முத்தி நிலைக்கு) வித்து (விதை) ஆம் (ஆக இருக்கின்றதை உணர்ந்து அதன் மூலம்) மூலம் (முக்திக்கு மூலப் பொருளாக இருக்கின்ற இறைவனின்)
அத்தகை (தன்மையை தானும் பெற்ற) ஆன்மா (சாதகரின் ஆன்மாவானது) அரனை (இறைவனை) அடைந்து (சென்று அடைந்து) அற்றால் (அவன் அருளால்)
சுத்த (மாசு இல்லாத) சிவம் (சிவம் எனும் பரம்பொருளாக) ஆவரே (தாமும் ஆகி இருப்பவர்களே) சுத்த (கடும் சுத்த) சைவரே (சைவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

மாசு இல்லாத பரம்பொருளாகிய இறைவன் பாடல் #1438 இல் உள்ளபடி சொல்லி அருளிய போதனைகளை தமக்குள் உள்வாங்கிக் கொண்டு அவற்றையே ஓயாமல் சிந்தித்து ஆராய்ந்து இறைவன் அருளிய போதனைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளின் பொருளும் முத்தி நிலைக்கு விதையாக இருக்கின்றதை உணர்ந்து அதன் மூலம் முக்திக்கு மூலப் பொருளாக இருக்கின்ற இறைவனின் தன்மையை தானும் பெற்ற சாதகரின் ஆன்மாவானது இறைவனை சென்று அடைந்து அவன் அருளால் மாசு இல்லாத சிவம் எனும் பரம்பொருளாக தாமும் ஆகி இருப்பவர்களே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1441

பாடல் #1441: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

நானென்றுந் தானென்று நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலாற்
றானென்று நானென்றுஞ் சாற்றுகி லேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானெனறுந தானெனறு நாடிநான சாரவெ
தானெனறு நானென றிரணடிலாத தறபதந
தானெனறு நானெனற தததுவ நலகலாற
றானெனறு நானெனறுஞ சாறறுகி லெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டு இலா தற் பதம்
தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால்
தான் என்று நான் என்றும் சாற்றுகிலேனே.

பதப்பொருள்:

நான் (நானாகிய ஆன்மா) என்றும் (எங்கே இருக்கின்றது என்றும்) தான் (தனக்குள் இருக்கும் இறைவன்) என்றும் (எங்கே இருக்கின்றான் என்றும்) நாடி (தேடி அலைந்து) நான் (நான் இறைவனை) சாரவே (சார்ந்து இருக்கவே)
தான் (இறைவன்) என்று (என்றும்) நான் (ஆன்மா) என்று (என்றும்) இரண்டு (தனித்தனியாக இருக்கின்ற இரண்டுவிதமான தத்துவங்களும்) இலா (இல்லாமல்) தற் (தானே அனைத்துமாய் நிற்கின்ற) பதம் (பரம்பொருளாகிய இறைவன்)
தான் (தான்) என்று (என்றும்) நான் (நான்) என்ற (என்றும் ஆகிய அனைத்தும்) தத்துவம் (தாமாகவே இருக்கின்ற தத்துவத்தை) நல்கலால் (எனக்கு தந்து அருளியதால்)
தான் (இனி தான்) என்று (என்றும்) நான் (நான்) என்றும் (என்றும் ஆன்மாவையும் இறைவனையும் வேறு வேறு என்று பார்க்கின்ற தத்துவத்தை) சாற்றுகிலேனே (சார்ந்து நிற்காமல் அனைத்தும் இறைவன் ஒருவனே என்று இருக்கின்றேன்).

விளக்கம்:

நானாகிய ஆன்மா எங்கே இருக்கின்றது என்றும் தனக்குள் இருக்கும் இறைவன் எங்கே இருக்கின்றான் என்றும் தேடி அலைந்து நான் இறைவனை சார்ந்து இருக்கும் போது இறைவன் என்றும் ஆன்மா என்றும் தனித்தனியாக இருக்கின்ற இரண்டுவிதமான தத்துவங்களும் இல்லாமல் தானே அனைத்துமாய் நிற்கின்ற பரம்பொருளாகிய இறைவன் தான் என்றும் நான் என்றும் ஆகிய அனைத்தும் தாமாகவே இருக்கின்ற தத்துவத்தை எனக்கு தந்து அருளியதால் இனி தான் என்றும் நான் என்றும் ஆன்மாவையும் இறைவனையும் வேறு வேறு என்று பார்க்கின்ற தத்துவத்தை சார்ந்து நிற்காமல் அனைத்தும் இறைவன் ஒருவனே என்று இருக்கின்றேன்.

பாடல் #1442

பாடல் #1442: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்த
லாற்றரி தாகிய வைந்து மடங்கிடு
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பார்ப்பர சாயுச்சிய மாகும் பதியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாறறரி தாகிய தததுவஞ சிததிதத
லாறறரி தாகிய வைநது மடஙகிடு
மெறறிகள ஞானம விளககொளி யாயநிறகும
பாரபபர சாயுசசிய மாகும பதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாற்ற அரிது ஆகிய தத்துவம் சித்தித்தல்
ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும்
மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளி ஆய் நிற்கும்
பார் பர சாயுச்சியம் ஆகும் பதியே.

பதப்பொருள்:

சாற்ற (சார்ந்து நிற்பதற்கு) அரிது (மிகவும் அரியது) ஆகிய (ஆக இருக்கின்ற) தத்துவம் (அனைத்தும் இறைவன் ஒருவனே எனும் தத்துவம்) சித்தித்தல் (இறையருளால் கிடைக்கப் பெற்றால்)
ஆற்ற (ஆசைகளை நீக்குவதற்கு) அரிது (மிகவும் அரியது) ஆகிய (ஆகிய) ஐந்தும் (ஐந்து புலன்களும்) அடங்கிடும் (அடங்கி விடும்)
மேல் (அதன் பிறகு மேலே) திகழ் (திகழ்கின்ற) ஞானம் (உண்மை ஞானமானது) விளக்கு (இருளான வீட்டில் ஏற்றி வைத்த விளக்கு) ஒளி (ஒளியை கொடுப்பது போல) ஆய் (மாயை நீங்கிய உண்மையை விளங்க வைக்கும் ஒளியாக) நிற்கும் (நிற்கும்)
பார் (அப்போது இந்த உலகத்திலேயே) பர (பரம்பொருளோடு) சாயுச்சியம் (எப்போதும் ஒன்றாக சேர்ந்தே இருக்கின்ற சாயுச்சியம் எனும்) ஆகும் (நிலை கிடைக்கப் பெறும்) பதியே (கடும் சுத்த சைவத்தை கடைபிடிக்கின்ற சைவர்கள் இருக்கின்ற இடத்திலேயே).

விளக்கம்:

சார்ந்து நிற்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற அனைத்தும் இறைவன் ஒருவனே எனும் தத்துவம் இறையருளால் கிடைக்கப் பெற்றால் ஆசைகளை நீக்குவதற்கு மிகவும் அரியதாகிய ஐந்து புலன்களும் அடங்கி விடும். அதன் பிறகு மேலே திகழ்கின்ற உண்மை ஞானமானது இருளான வீட்டில் ஏற்றி வைத்த விளக்கு ஒளியை கொடுப்பது போல மாயை நீங்கிய உண்மையை விளங்க வைக்கும் ஒளியாக நிற்கும். அப்போது இந்த உலகத்திலேயே கடும் சுத்த சைவத்தை கடைபிடிக்கின்ற சைவர்கள் தாம் இருக்கின்ற இடத்திலேயே பரம்பொருளோடு எப்போதும் ஒன்றாக சேர்ந்தே இருக்கின்ற சாயுச்சியம் எனும் நிலை கிடைக்கப் பெறுவார்கள்.

பாடல் #1427

பாடல் #1427: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)

பொன்னாற் சிவசாதனம் பூசி சாதனம்
நன்மார்க சாதன நலஞான சாதனந்
துன்மார்க சாதனந் தோன்றாத சாதனஞ்
சன்மார்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொனனாற சிவசாதனம பூசி சாதனம
நனமாரக சாதன நலஞான சாதனந
துனமாரக சாதனந தொனறாத சாதனஞ
சனமாரக சாதன மாஞசுதத சைவரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொன்னால் சிவ சாதனம் பூசி சாதனம்
நன் மார்க்க சாதனம் நல ஞான சாதனம்
துன் மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன் மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே.

பதப்பொருள்:

பொன்னால் (தங்கத்தால் கோர்த்து) சிவ (இறைவனது அம்சமாக இருக்கின்ற) சாதனம் (மணிகள் போன்ற கருவிகளும்) பூசி (நறுமணப் பொருட்களை பூசிக் கொண்டும்) சாதனம் (இவற்றை கருவியாக கொண்டு பூஜை செய்கின்ற)
நன் (நன்மையைக் கொடுக்கும்) மார்க்க (வழிமுறைக்கான) சாதனம் (கருவியாக இருப்பதே) நல (பலவிதமான நலங்களை) ஞான (அறிந்து கொள்ளுகின்ற ஞானத்தை கொடுக்கின்ற) சாதனம் (கருவியாகவும் இருக்கின்றது)
துன் (தீமையைக் கொடுக்கும்) மார்க்க (வழிமுறைக்கான) சாதனம் (கருவி எதுவும்) தோன்றாத (நன்மையின் நெறி வழியே செல்லுகின்ற சாதகருக்கு தடையாக உருவாகாமல் இருக்க) சாதனம் (உதவுகின்ற கருவியாக)
சன் (உண்மை / சத்தியத்தின்) மார்க்க (வழிமுறையாகிய) சாதனம் (கருவியே) ஆம் (இருக்கின்றது) சுத்த (இதுவே சுத்தமான) சைவர்க்கே (சைவ நெறியை கடைபிடிக்கும் சைவர்களுக்கு இறைவனை அடைவதற்கு செல்லுகின்ற வழிமுறைகளாகவும் அதற்கான சாதகத்தை செய்ய உதவுகின்ற கருவிகளாகவும் இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனது அம்சமாக இருக்கின்ற மணிகளை (உருத்திராட்சம், துளசிமணி, ஸ்படிகம் போன்றவற்றை) தங்கத்தால் கோர்த்து செய்து அணிந்து கொண்டும் இறையருளுக்கு கருவியாக இருக்கின்ற நறுமணப் பொருள்களை (விபூதி, குங்குமம், சந்தனம், செந்தூரம், நாமம் போன்றவற்றை) பூசிக் கொண்டும் இவற்றை கருவியாக கொண்டு பூஜை எனும் சாதகத்தை செய்கின்ற வழிமுறையானது நன்மையைக் கொடுக்கும் வழிமுறையாகும். இதற்கு கருவியாக இருக்கின்ற மணிகளும் பூசிக்கொள்ளும் நறுமணப் பொருட்களும் பலவிதமான நலங்களை அறிந்து கொள்ளுகின்ற ஞானத்தை கொடுக்கின்ற கருவியாகவும் இருக்கின்றன. தீமையைக் கொடுக்கும் வழிமுறைக்கான கருவி எதுவும் நன்மையின் நெறி வழியே செல்லுகின்ற சாதகருக்கு தடையாக உருவாகாமல் இருக்கவும் இந்த கருவிகள் உதவுகின்றன. இவை அனைத்தும் சத்தியத்தின் வழிமுறையை பின்பற்றி இறைவனை அடைவதற்கு சாதகம் செய்கின்ற சுத்த சைவர்களுக்கு உதவுகின்ற கருவிகளாக இருக்கின்றன.

பாடல் #1428

பாடல் #1428: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)

கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாதத்தி
னூடுறு ஞானோதைய னுண்மை முத்தியோன்
பாடுறு சுத்த சைவப்பத்த நித்தனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கெடறு ஞானி கிளரஞான பூபதி
பாடறு வெதாநத சிததாநத பாதததி
னூடுறு ஞானொதைய னுணமை முததியொன
பாடுறு சுதத சைவபபதத நிததனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி
பாடு அறு வேத அந்தம் சித்த அந்தம் பாதத்தின்
ஊடு உறு ஞான உதய நுண்மை முத்தியோன்
பாடு உறு சுத்த சைவ பத்த நித்தனே.

பதப்பொருள்:

கேடு (தீயவற்றை) அறு (அறுக்கின்ற) ஞானி (ஞானியாகிய சாதகர்) கிளர் (கிளர்ந்து எழுகின்ற) ஞான (ஞானத்திற்கு) பூபதி (அதிபதியாகவும்)
பாடு (பாசமாகிய துன்பங்களை) அறு (அறுக்கின்ற) வேத (வேதங்களுக்கு) அந்தம் (எல்லையாகவும்) சித்த (சித்தங்களுக்கு) அந்தம் (எல்லையாகவும்) பாதத்தின் (இருக்கின்ற இறைவனின் திருவடிகளை)
ஊடு (தம்மை நாடி வரும் அடியவர்களின் மனதிற்குள்) உறு (புகுத்தி) ஞான (ஞானத்தை) உதய (உருவாக்குகின்ற) நுண்மை (நுட்பமான) முத்தியோன் (முக்தி நிலையில் இருப்பவராகவும்)
பாடு (பாசமாகிய துன்பத்தை) உறு (அனுபவித்தாலும் அதனால் சிறிதும் பாதிக்கப் படாமல்) சுத்த (சுத்தமான) சைவ (சைவ நெறிமுறையைக் கடைபிடித்து) பத்த (பக்தியிலேயே) நித்தனே (எப்போதும் நிற்பவராகவும் இருப்பார்).

விளக்கம்:

பாடல் #1427 இல் உள்ளபடி கருவிகளின் மூலம் சாதகம் செய்து தீயவற்றை அறுக்கின்ற ஞானியாகிய சாதகர் கிளர்ந்து எழுகின்ற ஞானத்திற்கு அதிபதியாகவும், பாசமாகிய துன்பங்களை அறுக்கின்ற வேதங்களுக்கு எல்லையாகவும் சித்தங்களுக்கு எல்லையாகவும் இருக்கின்ற இறைவனின் திருவடிகளை தம்மை நாடி வரும் அடியவர்களின் மனதிற்குள் புகுத்தி ஞானத்தை உருவாக்குகின்ற நுட்பமான முக்தி நிலையில் இருப்பவராகவும், பாசமாகிய துன்பத்தை அனுபவித்தாலும் அதனால் சிறிதும் பாதிக்கப் படாமல் சுத்தமான சைவ நெறிமுறையைக் கடைபிடித்து எப்போதும் பக்தியிலேயே நிலைத்து நிற்பவராகவும் இருப்பார்.

பாடல் #1429

பாடல் #1429: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)

ஆகமொன் பானதி லாதன நாலேழு
மோகமி னாலேழு முப்பேத முற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மையொன்
றாகமுடிந் ததருஞ் சுத்த சைவமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆக மொனபா னதிலாதன நாலெழு
மொகமி னாலெழு முபபெத முறறுடன
வெகமில வெதாநத சிததாநத மெயமையொன
றாகமுடிந ததருஞ சுதத சைவமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகமம் ஒன்பான் அதில் ஆதன நால் ஏழு
மோகம் இல் நால் ஏழு முப் பேதம் உற்று உடன்
வேகம் இல் வேத அந்த சித்த அந்த மெய்மை ஒன்றாக
முடிந்தது அரும் சுத்த சைவமே.

பதப்பொருள்:

ஆகமம் (இறைவனை அடைவதற்கு வழிவகுக்கும் ஆகமங்கள்) ஒன்பான் (ஒன்பது வகையாகவும்) அதில் (அவற்றின்) ஆதன (முழுமையான சொத்தாக) நால் (நான்கும்) ஏழு (ஏழும் பெருக்கி வரும் மொத்தம் 28 ஆகமங்கள் இருக்கின்றன)
மோகம் (எந்தவிதமான ஆசைகளும்) இல் (இல்லாமல்) நால் (நான்கும்) ஏழு (ஏழும் பெருக்கி வரும் மொத்தம் 28 ஆகமங்களையும் கற்று உணர்ந்து அவற்றின் பயனால்) முப் (இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற மூன்று விதமான பற்றுக்களை) பேதம் (விட்டு விலகுவது எப்படி என்பதை) உற்று (ஆராய்ந்து அறிந்து கொண்டு) உடன் (அதனுடன் சேர்ந்து)
வேகம் (எந்தவிதமான எண்ணங்களும்) இல் (இல்லாமல்) வேத (வேதங்களுக்கு) அந்த (எல்லையாகவும்) சித்த (ஞானத்திற்கு) அந்த (எல்லையாகவும்) மெய்மை (இருக்கின்ற உண்மைப் பொருளாகிய இறைவனுடன்) ஒன்றாக (ஒன்றாக கலந்து)
முடிந்தது (தான் எனும் நிலை முடிந்து இறைவனும் தானும் வேறு வேறு இல்லை எனும் நிலையை அடைவதே) அரும் (கிடைப்பதற்கு மிகவும் அரிதான பெரும் பேறாகிய) சுத்த (சுத்த) சைவமே (சைவம் ஆகும்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்கு வழிவகுக்கும் ஆகமங்கள் பாடல் #62 இல் உள்ளபடி ஒன்பது வகையாகவும் அவற்றின் முழுமையான சொத்தாக பாடல் #57 இல் உள்ளபடி 28 ஆகமங்களாகவும் இருக்கின்றன. எந்தவிதமான ஆசைகளும் இல்லாமல் இந்த 28 ஆகமங்களையும் கற்று உணர்ந்து அவற்றின் பயனால் இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற மூன்று விதமான பற்றுக்களை விட்டு விலகுவது எப்படி என்பதை ஆராய்ந்து அறிந்து கொண்டு அதனுடன் சேர்ந்து எந்தவிதமான எண்ணங்களும் இல்லாமல் வேதங்களுக்கு எல்லையாகவும் ஞானத்திற்கு எல்லையாகவும் இருக்கின்ற உண்மைப் பொருளாகிய இறைவனுடன் ஒன்றாக கலந்து தான் எனும் நிலை முடிந்து இறைவனும் தானும் வேறு வேறு இல்லை எனும் நிலையை அடைவதே கிடைப்பதற்கு மிகவும் அரிதான பெரும் பேறாகிய சுத்த சைவம் ஆகும்.

பாடல் #1430

பாடல் #1430: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)

சுத்த மசுத்தந் துரியங்க ளோரேழுஞ்
சத்த மசத்துந் தணந்த பராபரை
யுய்த்த பராபரை யுள்ளாம் பராபரை
யத்த னருட்சத்தி யாயெங்கு மாயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சுதத மசுததந துரியஙக ளொரெழுஞ
சதத மசததுந தணநத பராபரை
யுயதத பராபரை யுளளாம பராபரை
யதத னருடசததி யாயெஙகு மாயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள் ஆம் பராபரை
அத்தன் அருள் சத்தி ஆய் எங்கும் ஆயே.

பதப்பொருள்:

சுத்தம் (சுத்த மாயையில் இருக்கும் நனவு, கனவு ஆகிய நிலைகளும்) அசுத்தம் (அசுத்த மாயையில் இருக்கும் நனவு, கனவு, உறக்கம் ஆகிய நிலைகளும்) துரியங்கள் (துரியம் துரியாதீதம் ஆகிய நிலைகளும் சேர்ந்து) ஓர் (இருக்கின்ற ஒரு) ஏழும் (ஏழு நிலைகளையும் அனுபவிக்கும்)
சத்தும் (நிலையாக இருக்கின்ற ஆன்மாவும்) அசத்தும் (நிலையற்றதாக இருக்கின்ற உடலும்) தணந்த (கடந்து இருக்கின்ற) பராபரை (இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற பரம்பொருளே)
உய்த்த (அனைத்தையும் இயக்கி மேல் நிலைக்கு கொண்டு செல்கின்ற) பராபரை (பரம்பொருளாகவும்) உள் (அனைத்திற்கு உள்ளே) ஆம் (இருக்கின்றதும் ஆகிய) பராபரை (பரம்பொருளாகும்)
அத்தன் (அதுவே அப்பனாகவும்) அருள் (அருள் மயமாகிய) சத்தி (சக்தியாகவும்) ஆய் (ஆகி) எங்கும் (அனைத்துமாகவும்) ஆயே (ஆகி இருக்கின்றது).

விளக்கம்:

சுத்த மாயையில் இருக்கும் நனவு, கனவு ஆகிய இரண்டு நிலைகளும் அசுத்த மாயையில் இருக்கும் நனவு, கனவு, உறக்கம் ஆகிய மூன்று நிலைகளும் துரியம் துரியாதீதம் ஆகிய இரண்டு நிலைகளும் கூட்டி மொத்தம் ஏழு விதமான நிலைகளையும் அனுபவிக்கும் நிலையாக இருக்கின்ற ஆன்மாவையும் நிலையற்றதாக இருக்கின்ற உடலையும் கடந்து இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற பரம்பொருளே அனைத்திற்கும் உள்ளே இருந்து இயக்கி அவற்றை மேல் நிலைக்கு கொண்டு செல்கின்ற பரம்பொருளாகும். அதுவே அப்பனாகவும் அருள் மயமாகிய சக்தியாகவும் ஆகி அனைத்துமாகவும் ஆகி இருக்கின்றது.

ஏழுவிதமான நிலைகள்:

  1. சுத்த மாயை – நனவு – இறைவன் இருக்கின்றான் என்கிற நினைவுடன் இறைவனோடு இருக்கின்ற நிலை.
  2. சுத்த மாயை – கனவு – இறைவனுடன் தாமும் சேர்ந்து இருக்கின்றோம் என்ற எண்ணத்தில் இருக்கின்ற நிலை.
  3. அசுத்த மாயை – நனவு – உலகத்தில் பார்க்கின்ற அனைத்தையும் உண்மை என்று நினைத்து இருக்கின்ற நிலை.
  4. அசுத்த மாயை – கனவு – உலகத்தில் பார்க்காத விஷயங்களையும் உண்மை என்று நினைத்து இருக்கின்ற நிலை.
  5. அசுத்த மாயை – உறக்கம் – உலகத்தில் சுய நினைவின்றி மாயையில் மயங்கி இருக்கின்ற நிலை.
  6. துரியம் – பேருறக்கம் – இறைவனை மட்டுமே எண்ணிக்கொண்டு உயிர்ப்புடன் செயல் அற்று இருக்கின்ற சமாதி நிலை.
  7. துரியாதீதம் – உயிர்ப்படங்கல் – எந்த எண்ணங்களும் செயல்களும் இன்றி உயிரும் அடங்கி இருக்கின்ற சமாதி நிலை.

பாடல் #1431

பாடல் #1431: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)

சத்த மசத்துந் தணந்தவன் றானாகிச்
சித்த மசித்துந் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ளானந்தச் சத்தியுள் மூழ்கினார்
சித்தியு மங்கே சிறந்தது தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சதத மசததுந தணநதவன றானாகிச
சிதத மசிததுந தெரியாச சிவொகமாய
முததியுள ளானநதச சததியுள மூழகினார
சிததியு மஙகெ சிறநதது தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தும் அசத்தும் தணந்து அவன் தான் ஆகி
சித்தும் அசித்தும் தெரியா சிவ யோகம் ஆய்
முத்தி உள் ஆனந்த சத்தி உள் மூழ்கினார்
சித்தியும் அங்கே சிறந்தது தானே.

பதப்பொருள்:

சத்தும் (நிலையான ஆன்மாவும்) அசத்தும் (நிலையில்லாத உடலையும்) தணந்து (கடந்து இருக்கின்ற) அவன் (சாதகரே) தான் (தானே இறைவனாக) ஆகி (ஆகி)
சித்தும் (உலக அறிவாலும்) அசித்தும் (அறியாமையாலும்) தெரியா (தெரிந்து கொள்ள முடியாத) சிவ (சிவ) யோகம் (யோகத்தின்) ஆய் (வடிவமாய்)
முத்தி (முக்தி நிலைக்கு) உள் (உள்ளே இருக்கின்ற) ஆனந்த (பேரின்பத்தின்) சத்தி (சக்திக்கு) உள் (உள்ளே) மூழ்கினார் (மூழ்கி இருந்து)
சித்தியும் (பேரறிவு ஞானத்தைப் பெற்று) அங்கே (அந்த முக்தி நிலைக்குள்) சிறந்தது (மேன்மையுடன் சிறந்து) தானே (விளங்குகின்றார்).

விளக்கம்:

நிலையான ஆன்மாவும் நிலையில்லாத உடலையும் கடந்து பாடல் #1430 இல் உள்ளபடி துரியாதீத நிலையில் இருக்கின்ற சாதகர் தானே இறைவனாகி உலக அறிவாலும் அறியாமையாலும் தெரிந்து கொள்ள முடியாத சிவ யோகத்தின் வடிவமாய் முக்தி நிலைக்கு உள்ளே இருக்கின்ற பேரின்பத்தின் சக்திக்கு உள்ளே மூழ்கி இருந்து பேரறிவு ஞானத்தைப் பெற்று அந்த முக்தி நிலைக்குள் மேன்மையுடன் சிறந்து விளங்குகின்றார்.

பாடல் #1432

பாடல் #1432: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)

தன்னைப் பரனைச் சதாசிவ னென்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல மூழ்கட்டை வீட்டீனை
யுன்னத் தகுஞ்சுத்த சைவ ருபாயமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தனனைப பரனைச சதாசிவ னெனகினற
மனனைப பதிபசு பாசததை மாசறற
முனனைப பழமல மூழகடடை விடடீனை
யுனனத தகுஞசுதத சைவ ருபாயமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தன்னை பரனை சதா சிவன் என்கின்ற
மன்னை பதி பசு பாசத்தை மாசு அற்ற
முன்னை பழ மலம் ஊழ் கட்டை வீட்டீனை
உன்ன தகும் சுத்த சைவர் உபாயமே.

பதப்பொருள்:

தன்னை (சாதகர் தன்னையும்) பரனை (பரம்பொருளாகிய இறைவனையும்) சதாசிவன் (சதாசிவமூர்த்தி) என்கின்ற (என்று உணரப்படுகின்ற)
மன்னை (அசையும் சக்தியும் அசையா சக்தியும் சேர்ந்து செயல்படுகின்ற) பதி (பதியாகிய இறையையும்) பசு (பசுவாகிய ஆன்மாவையும்) பாசத்தை (பாசமாகிய பற்றுக்களையும்) மாசு (குற்றம்) அற்ற (இல்லாத)
முன்னை (இறைவனிடமிருந்து ஆசையினால் பிரிந்து வந்த பிறகு குற்றமடைந்து) பழ (பழமையான காலத்திலிருந்தே) மலம் (தொடர்ந்து வருகின்ற மூன்று விதமான மலங்களையும்) ஊழ் (நல் வினை தீ வினை ஆகிய இரண்டு விதமான வினைகளாலும்) கட்டை (கட்டப் பட்டு இருக்கும்) வீட்டீனை (ஆன்மா வசிக்கும் வீடாகிய இந்த உடலையும் தனக்கு உள்ளேயே)
உன்ன (ஆராய்ந்து பரிபூரணமாக உணர்ந்து கொள்வதற்கு) தகும் (ஏதுவாக இருப்பது) சுத்த (சுத்தமான) சைவர் (சைவத்தை கடைபிடிக்கும் சைவர்களின்) உபாயமே (வழியாகிய மார்க்க சைவமே ஆகும்).

விளக்கம்:

சாதகர் தன்னையும் பரம்பொருளாகிய இறைவனையும் சதாசிவமூர்த்தி என்று உணரப்படுகின்ற அசையும் சக்தியும் அசையா சக்தியும் சேர்ந்து செயல்படுகின்ற பதியாகிய இறையையும் பசுவாகிய ஆன்மாவையும் பாசமாகிய பற்றுக்களையும், குற்றம் இல்லாத இறைவனிடமிருந்து ஆசையினால் பிரிந்து வந்த பிறகு குற்றமடைந்து பழமையான காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்ற மூன்று விதமான மலங்களையும், நல் வினை தீ வினை ஆகிய இரண்டு விதமான வினைகளாலும் கட்டப் பட்டு இருக்கும் ஆன்மா வசிக்கும் வீடாகிய இந்த உடலையும் தனக்கு உள்ளேயே ஆராய்ந்து பரிபூரணமாக உணர்ந்து கொள்வதற்கு ஏதுவாக இருப்பது சுத்தமான சைவத்தை கடைபிடிக்கும் சைவர்களின் வழியாகிய மார்க்க சைவமே ஆகும்.