பாடல் #637

பாடல் #637: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.

விளக்கம்:

நல் வழியாகிய தாரணை மூலம் அடங்கிய மனதை உள்ளே இருக்கும் இறைவன் மீது ஒருநிலைபெறச் செய்தவர்களுக்கு மரணத்திற்குச் செல்லும் வழியை மாற்றிவிடும். இறைவனால் கொடுக்கப்படும் ஞானமாகிய குறைவில்லாத பெரும் கொடையை அடைந்தவர்கள் இறைவனை அடையக்கூடிய அனைத்து வழிகளிலும் இந்த உலகத்திலிருந்தே செல்லக்கூடியவர்கள் ஆவார்கள்.

பாடல் #638

பாடல் #638: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்குந் திளைக்கும் அமுதமுந்
தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே.

விளக்கம்:

ஏழு உலகங்களையும் தாங்கக்கூடிய வலிமையைக் கொண்டு நிற்பவனும், இறைவனை மனதில் வைத்து தியானம் செய்பவர்களுக்குள்ளே அமுதமாய் லயித்திருப்பவனுமாகிய இறைவன் சமாதி நிலையை அடைந்தவர்களைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவர்களுக்குத் துணையாக இருக்கின்றான்.

பாடல் #639

பாடல் #639: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரண மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

விளக்கம்:

இந்த உலகத்தில் துன்பம் தரக்கூடிய காரணங்களாகிய தனு, கரணம், புவனம், போகம் ஆகிய பந்தங்களைக் கடந்து சென்று ஏழுவகையான சிவ தத்துவங்களையும் தன் அறிவாலேயே உணர்ந்து பெற்று ஜென்ம ஜென்மமாய்த் தொடர்ந்து வரும் மாயையைத் தவத்தால் வெற்றி பெற்று இறைவனின் திருவடியைச் சேருதல் சமாதியால் பெறும் பயனாகும்.

நான்கு வகை பந்தங்கள்:

தனு – தன் உடலின் மேல் இருக்கும் பற்று
கரணம் – ஆசைப்படும் மனது
புவனம் – உலகப் பற்று
போகம் – உலகப் பொருள்களை அனுபவித்தல்

ஏழுவகை சிவ தத்துவங்கள்:

இறைமை – இறைவனாக தன்னை உணர்தல்
முற்றறிவு உடைமை – அனைத்தையும் அறிந்தவனாக இருத்தல்
எங்கும் தானாதல் – எங்கும் வியாபித்து இருத்தல்
இயல்பாகவே மாயையின்மை – மாயையே இல்லாது இருத்தல்
வரம்பில்லாத ஆற்றல் – எல்லையில்லா சக்தியைக் கொண்டிருத்தல்
தன்வயத்தன் ஆதல் – எதனாலும் கட்டுப்படாமல் தன் கட்டுப்பாட்டிலேயே இருத்தல்
ஒன்றியுணர்தல் – அனைத்திலும் ஒன்றி இருப்பதாக உணர்தல்

கருத்து: சமாதி நிலையை அடைந்தால் அனைத்துவித துன்பங்கள் மற்றும் மாயையிலிருந்து விடுதலை பெற்று சிவ தத்துவங்களை உணரலாம்.

பாடல் #618

பாடல் #618: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

சமாதிய மாதியிற் றான்சொல்லக் கேட்டிற்
சமாதிய மாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதிய மாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதிய மாதி தலைப்படுந் தானே.

விளக்கம்;

அட்டாங்க யோகத்தில் கூறியுள்ள இயமம் முதலான ஏழு யோகங்களையும் (பாடல் #549 இல் உள்ளபடி) முறையாக செய்வது மட்டுமன்றி அந்த யோகங்களையும் தவறாமல் கடைபிடித்தால் எட்டாவது யோகமான சமாதியும் கைகூடும். அவ்வாறு கைகூடிவிட்டால் எட்டுவித சித்திகளும் கைவரப் பெறும்.

பாடல் #619

பாடல் #619: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்தமி லாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.

விளக்கம்;

சக்தியாகிய ஒளியையும் சிவமாகிய ஒலியையும் புருவமத்தியில் ஒருமுகப்படுத்தி ஆழ்ந்து இருந்தால் அட்டாங்க யோகத்தின் இறுதியான சமாதி கைகூடும். அவ்வாறு சமாதி நிலையை அடைந்துவிட்டால் அழிவில்லாத அறிவின் உண்மைப் பொருளான சிவம் அழகிய ஜோதியாய் தமக்குள்ளேயே தோன்றிடும்.

பாடல் #620

பாடல் #620: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.

விளக்கம்;

இறைவனையே சிந்தித்திருக்கும் மனம் எங்கிருக்கின்றதோ அங்கு பிராணவாயு நிலைத்து இருக்கும். இறைவனை சிந்திக்காத மனம் எங்கிருக்கின்றதோ அங்கு பிராணவாயு நிலைத்து இருக்காது. இறைவனையே நினைத்து பேரானந்தத்தில் இருப்பவர்களின் மனதோடு இறைவனும் கலந்து இருப்பான்.

பாடல் #621

பாடல் #621: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதியிருப் பார்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.

விளக்கம்:

குதிரையில் ஏறி பல இடங்களைச் சுற்றிப் பார்த்து புல்வெளியில் ஓடவிட்டு பின்பு குதிரையை பசுமையான மலையடிவாரத்தில் கட்டி வைப்பது போல மனமாகிய குதிரையை பிராணவாயுவாகிய கடிவாளத்தின் மூலம் மேல் நோக்கி செலுத்தி சுழுமுனை சேரும் இடத்தையும் அதைச் சுற்றியுள்ள தலை உச்சியையும் சுற்றிப் பார்த்துவிட்டு தலை உச்சிக்கு மேலுள்ள வெற்று வெளியில் செலுத்தி அங்கே வியாபித்திருக்கின்ற சிவபெருமானிடம் கட்டி வைத்து அதன் மூலம் இறைவனை கண்டு உணர்ந்து இறை நினைப்பிலேயே லயித்து இருப்பது சமாதி நிலை ஆகும்.

பாடல் #622

பாடல் #622: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பீர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.

விளக்கம்:

மூலாதாரத்திருந்து தலை உச்சிக்குச் செல்லும் பாதையின் நடுவில் இருக்கும் கண், காது, மூக்கு, நாக்கு ஆகிய நான்கு உணர்வுகளும் ஒன்று கூடி இருக்கும் புருவ மத்தியில் மனதை வைத்து தலைக்கு உச்சியிலுள்ள சகஸ்ரதளத்திற்கு மேலே அண்ட வெளியில் வியாபித்திருக்கும் சிவபெருமானைத் தரிசித்தப் பிறகு இறப்பு எனும் எண்ணம் கனவிலும் இல்லை.

பாடல் #623

பாடல் #623: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

விளக்கம்:

தியான நிலையில் பஞ்ச பூதங்களான ஐந்து மண்டலங்கள், அவைகள் இருக்கும் பன்னிரண்டு இடங்கள் ஆறு ஆதாரச் சக்கரங்களில் உள்ள அட்சரங்களை இடமாகக் கொண்ட நாற்பத்தெட்டு தேவதைகள் அனைத்தும் காணலாம். அவைகள் அனைத்திற்கும் நடுவில் ஓடும் இறைவன் மேல் மனதை ஒருமுகப்படுத்தினால் சமாதி அடையலாம்.

ஐந்து மண்டலங்கள்: 1. பிருத்வி மண்டலம் – நிலம் 2. அப்பு மண்டலம் – நீர் 3. ஆகாய மண்டலம் – வானம் 4. வாயு மண்டலம் – காற்று 5. தேயு மண்டலம் – நெருப்பு

பன்னிரண்டு இடங்கள்: 1. மூலாதாரம் 2. சுவாதிஷ்டானம் 3. மணிப்பூரகம் 4. அநாகதம் 5. விசுத்தி 6. அண்ணம் (வாயின் உட்புற மேல்பகுதி) 7. ஆக்ஞா 8. சகஸ்ரதளம் 9. சிரசுக்கு மேலிடம் 10. துவாதசாந்தம் ஆகிய சித்தாந்த சரவெளிகளும் (அறிவிற்கு உட்பட்ட இடம்), அதற்கு மேலுள்ள பரவெளியிலுள்ள இரண்டு ஆதாரங்களான தியானபிந்துவும் ஆகும்.

பாடல் #624

பாடல் #624: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.

விளக்கம்:

கட்டுப்பாடின்றி உடம்பின் மேலும் கீழும் செல்லும் பிராணவாயுவை வீட்டைப் பூட்டி வீட்டை தன் கட்டுப்பாட்டில் வைப்பது போல உடம்பினுள் பிராணவாயுவைக் கட்டுப்படுத்தி வைத்து ஆசைப்பட்டு வெளியே அலையும் மனதை ஒருமுகப்படுத்தி வெளியில் பார்க்கும் பார்வையை உள் நோக்கி செலுத்தி தியானத்தில் அமர்ந்திருந்தால் மாம்பழமும் இனிப்பும் போன்று இறைவனுடன் ஒன்றி சமாதியில் இருக்கலாம்.