பாடல் #967

பாடல் #967: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

வீழ்ந்தெழ லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.

விளக்கம்:

வினைகளில் வீழ்ந்து கிடப்பவர்கள் யாராலும் உருவாக்கப்படாத இறைவனின் திருநாமமாகிய ‘நமசிவாய’ என்னும் மந்திரத்தை முறைப்படி மனம் சோர்வடையாமல் ஓதிக்கொண்டிருந்தால் அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் வினைகள் மற்றும் அவற்றால் உண்டாகும் துன்பங்களையும் நீக்கி அருளுவான் விரிந்த சடையணிந்த இறைவன்.

பாடல் #968

பாடல் #968: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

உண்ணு மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ
எண்ணின் றெழுத்துஅஞ்சு மாகிநின் றானே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தை முறையாக சாதகம் செய்யும் சாதகர்கள் உண்ணும் அமிர்தமாகவும் அவர்கள் வாழும் அழிவில்லாத காலமாகவும் இசைக்கின்ற இசையாகவும், அதிலிருக்கும் கேள்வியாகவும் பாடுகின்ற பாடல்களாகவும் வாணுலகத் தேவர்களும் விரும்பி தொழுகின்ற திருவடிகளாகவும் எண்ணிலடங்காத எழுத்துக்களின் மூலமாகவும் இருப்பது ஐந்து எழுத்து ‘நமசிவாய’ எனும் மந்திரமே ஆகும்.

பாடல் #969

பாடல் #969: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஐந்தின் பெருமை அகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமை யறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனு ஆமே.

விளக்கம்:

பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகம் ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் ஆற்றலினால் இயங்கிக் கொண்டிருக்கிறது. இறைவன் இருக்கும் ஆலயங்கள் அனைத்தும் ‘நமசிவாய’ மந்திரமாகவே இருக்கின்றது. இந்த ஐந்து எழுத்து மந்திரத்தின் பெருமையே அறநெறி தவறாமல் வாழுகின்றவர்கள் வாழ்க்கைப் பாதையாக இருந்து அந்த வழியில் செல்பவர்களை என்றும் இளமையுடன் வைத்திருக்கின்றது.

பாடல் #970

பாடல் #970: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாயுயி ராமெழுத்
தோரெழுத்து ஈசனும் ஒண்சுட ராமே.

விளக்கம்:

அனைத்து எழுத்துக்களுக்கும் வேர் போல இருக்கும் ‘ஓம்’ எனும் எழுத்தாகவும், ‘நமசிவாய’ எனும் மந்திர எழுத்துக்களில் ‘சி’ எழுத்து குறிக்கும் ஆகாயமாகவும் அதைத் தாண்டி இருக்கும் அண்ட சராசரங்களாகவும், ‘வா’ எழுத்து குறிக்கும் நீராகவும், ‘ய’ எழுத்து குறிக்கும் நிலத்தை தாங்கி அங்கு இருப்பவனாகவும், ‘ந’ எழுத்து குறிக்கும் நெருப்பாகவும், ‘ம’ எழுத்து குறிக்கும் உயிர் காற்றாகவும் பஞ்ச பூதங்களில் ஐந்தெழுத்து மந்திரமாக இருக்கின்ற இறைவனே ‘ஓம்’ எனும் ஓரெழுத்தின் வடிவத்தில் பேரொளிப் பிழம்பாகவும் இருக்கின்றான்.

பாடல் #971

பாடல் #971: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்துஅது நன்னெறி தானே.

விளக்கம்:

‘நமசிவாய’ எனும் மந்திரத்தில் நான்காவது எழுத்தாகிய ‘வா’ எழுத்தின் ஒலி வடிவமாகவே இந்த உலகம் இருக்கின்றது. ‘வா’ எழுத்திற்குள் உலகம் அனைத்தும் அடங்கியிருக்கின்றது. இந்த ‘வா’ எழுத்தின் முழுப்பொருளை அறிந்து உணரக் கூடியவர்களுக்கு அதுவே ஆதாரமாய் நின்று மேன்மையான நல்நெறியினை கொடுக்கும்.

பாடல் #972

பாடல் #972: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

இயைந்தனள் ஏந்திழை என்னுள மேவி
நயந்தன ளங்கே நமசிவ என்னும்
பயந்தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்றறுத் தேனே.

விளக்கம்:

பாடல் – 971 ல் உள்ளபடி ‘வ’ எழுத்தை ஓதிய எம்முள்ளே சிவசக்தி அடியேனின் உள்ளத்தோடு சேர்ந்து இருந்து எமது பக்குவம் அறிந்து அதன்படி வழிகாட்டினாள். அதன்படி ‘நமசிவ’ எனும் மந்திரத்தை எப்போதும் தியானித்துக் கொண்டே இருந்து சிந்தனை மாறுபடாமல் சிவசக்தியின் திருவடியை பற்றிக் கொண்டு திருவடியைத் தவிர்த்த மற்ற அனைத்தையும் எம்மிடமிருந்து அறுத்து விட்டேன்.

குறிப்பு: ‘நமசிவ’ எனும் மந்திரத்தை முறைப்படி குருவின் மூலம் கற்றுக் கொண்டு அதை தியானம் செய்பவர்களுக்கு இறைவனைத் தவிர மற்ற பற்றுக்கள் அனைத்தும் விலகிவிடும்.

பாடல் #973

பாடல் #973: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை
ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே.

விளக்கம்:

உயிர்கள் வாழ உதவும் உணவு தானியங்களாகவும் அதை பக்குவமாக சமைத்த உணவின் சுவையாகவும் இருந்து அந்த உணவை வயிற்றில் செரிக்க வைக்கின்ற நெருப்பாகவும் இருக்கும் சிவசக்தின் பெயர் ‘நமசிவ’ ஆகும். இந்த மந்திரத்தை எப்போதும் தியானித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு தியானத்தின் பலனைத் தரும் தலைவி வெளிப்பட்டு துணையாக நிற்பாள்.

பாடல் #974

பாடல் #974: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்
இட்ட மறந்திட் டிரவு பகல்வர
நட்டம தாடு நடுவே நிலயங்கொண்
டட்டதே சப்பொரு ளாகிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #973 இல் உள்ளபடி தியானத்தின் பயனால் பரிசாகக் கிடைத்த தலைவி வழிகாட்டும் தலைவனுக்கு உரிய மந்திரம் ‘நமசிவாய’ மந்திரமாகும். இந்த மந்திரத்தை இறை நினைப்பிலிருந்து சிறிதும் விலகாமல் (கண் இமைக்கும் நேரம் கூட இறைவனை மறக்காமல் இருப்பது) இரவு பகல் எப்போழுதும் உச்சரித்தால் பாடல் #917 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தின் நடுவே இருக்கும் ‘சி’ எழுத்தில் நின்று ஆடுகின்ற சிவத்தை பாடல் #936 இல் உள்ளபடி தமக்குள் உணர்ந்து அந்த சிவப் பரம்பொருளே சக்கரத்தின் எட்டுத் திசைகளிலும் சக்தியாக நிற்பதை உணரலாம்.

பாடல் #975

பாடல் #975: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அகாரம் உயிரே உகாரம் பரமே
மகார மலமாய் வருமுப் பதத்திற்
சிகாரஞ் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென் றறையலு மாமே.

விளக்கம்:

ஓங்கார மந்திரத்தில் ‘அ’ எழுத்து உயிர்களாகவும் ‘உ’ எழுத்து இறைவனாகவும் ‘ம’ எழுத்து மாயையாகவும் இருக்கின்றது. இந்த மூன்று எழுத்துக்கள் சேர்ந்த ‘ஓம்’ எழுத்துக்குள் ‘சிவய’ மந்திரமும் அடங்கியுள்ளது. ‘சிவய’ மந்திரத்தில் ‘சி’ எழுத்து இறைவனையும் ‘வ’ எழுத்து இறைவியையும் ‘ய’ எழுத்து உயிர்களையும் குறிக்கும்.

குறிப்பு: ‘சிவய’ மந்திரத்தில் இறைவனும் இறைவியும் உயிரும் இருப்பதைப் போலவே ‘ஓம்’ மந்திரத்திலும் இறைவனும் இறைவியும் உயிரும் சேர்ந்து இருக்கின்றது.

பாடல் #976

பாடல் #976: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நகார மகார சிகாரம் நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதற்கொண் டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

விளக்கம்:

‘சி’ எழுத்தை நடுவில் கொண்டிருக்கும் ‘நமசிவாய’ மந்திரத்தை மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும் போதும் வெளிவிடும் போதும் மூச்சுக்காற்றோடு சேர்த்து அதற்கு முன்பு ‘ஓம்’ சேர்த்துக் கொண்டு மனதிற்குள் செபித்து வந்தால் இறைவன் சாதகரின் மனதிற்குள் எழுந்தருளுவான்.

குறிப்பு: மூச்சுக்காற்றை இழுக்கும் போது ‘ஓம்’ என்றும் வெளிவிடும்போது ‘நமசிவாய’ என்றும் செபிக்க வேண்டும்.