பாடல் # 918

பாடல் # 918 : நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் ( ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லாருயிரைக் காக்கவல் லாரே.

விளக்கம்:

உயிர்கள் தமக்குள் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இறைவன் சிவசக்தியாய் ஒன்றிணைந்து வீற்றிருக்கும் விதத்தை அறிவதில்லை. திருவம்பல சக்கரத்தில் பாடல் #915 இல் உள்ளபடி மறைந்திருக்கும் ஒங்கார எழுத்தையும் மறையாமல் வீற்றிருக்கும் சிவயநம எழுத்துக்களையும் ஒன்றாக சேர்த்து தூய்மையான எண்ணத்தோடு ஜெபிக்க முடிந்தவர்களின் சகஸ்ரதள தாமரை மலர் மலர்ந்து என்றும் இறவாத நிலையை அடைவார்கள்.

பாடல் # 919

பாடல் # 919: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் ( ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தவித் தூலம்போய்
ஆலய மாக வருகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்துஇருந் தானே.

விளக்கம்:

பாடல் #914 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தில் இருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தையே கோயிலாக கொண்டு இறைவன் அமர்ந்த பிறகு சாதகர்கள் சக்கரத்தில் வரிவடிவமாக இருக்கும் சிவயநம மந்திர எழுத்துக்களில் வீற்றிருக்கும் இறைவன் மேல் எண்ணத்தை வைத்து செபித்தால் பாடல் #915 இல் உள்ளபடி சக்கரத்தில் சூட்சுமமாக மறைந்திருக்கும் ஓங்கார மந்திரத்தை அறிந்து கொள்ள முடியும். அறிந்தபின் அதையும் சேர்த்து ஓம் நமசிவாய எனும் திருமந்திரமாக செபிக்கும் சாதகர்கள் பஞ்சாட்சர மந்திரம் கொண்ட திருவம்பலச் சக்கரத்தைக் கோயிலாக கொண்டு அமர்ந்ததைப் போலவே அந்த மந்திரத்தை செபிக்கும் தமது உடலையும் கோயிலாக கொண்டு இறைவன் தமக்குள்ளும் வீற்றிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

பாடல் #920

பாடல் #920: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

இருந்தஇவ் வட்டம் இருமூன்றி ரேகை
இருந்த வதனுள் இரேகை யைந்தாக
இருந்த அறைகள் இருபத்தஞ் சாக
இருந்தறை யொன்றி லெய்து மகாரமே.

விளக்கம்:

திருவம்பல சக்கரம் வடிவமைக்க இடமிருந்து வலமாக ஆறு கோடுகள் வரைந்து அதனோடு இணைந்து மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் வரைந்தால் வரும் சக்கரத்தில் இருபத்தைந்து கட்டங்கள் இருக்கும். இந்த கட்டங்களுக்கு நடுவில் இருக்கும் ம எழுத்து உயிர்களின் ஆன்மாவாக திருவம்பல சக்கரத்தோடு இணைந்து இருக்கின்றது.

பாடல் #921

பாடல் #921: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மகாரம் நடுவே வளைத்திடுஞ் சத்தி
ஒகாரம் வளைத்திட்டு மப்பிளந் தேற்றி
யகாரந் தலையா யிருகண் சிகாரமாய்
நகார வகார நற்காலு நாடுமே.

விளக்கம்:

பாடல் #920 இல் உள்ளபடி நடுவே எழுதப்பட்டுள்ள ம என்ற எழுத்தை சுற்றி வ என்ற எழுத்தை எழுதி பின்பு அந்த இரண்டையும் ஒ என்ற எழுத்தால் வளைத்து அந்த ஒ எழுத்துக்கள் உ என்ற எழுத்தை தொடங்கி அடுத்த அறைகள் இரண்டு இரண்டாகும் படி பிரித்து மேலே ஏறும்படி வரைந்து வெளிப்புற வட்டத்தில் இருபக்கமும் இருக்கும் அறைகளைத் தலைகளாகவும் கீழ்ப்புற வட்டத்தில் இருபக்கமும் இருக்கும் அறைகளைக் கால்களாகவும் கருதிக் கொண்டு தலைகளாகின்ற அறைகளில் ய என்ற எழுத்தையும் கால்களாகின்ற அறைகளில் இடதுபுறம் ந என்ற எழுத்தையும் வலதுபுறம் அ என்ற எழுத்தையும் எழுதி செபித்தால் அதனோடு இறைவன் ஒன்றி இருப்பான்.

குறிப்பு: எழுத்து முறை அமைத்து தலை, கண், கால் முதலிய உறுப்புக்களோடு அமைந்த ஓர் உருவமாக பாவித்தால் திருவம்பல சக்கர நடுவில் இறைவனை மனித உருவமாகக் காணலாம்.

பாடல் #922

பாடல் #922: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நாடும் பிரணவ நடுவிரு பக்கம்
ஆடு மவர்வாய் அமர்ந்தங்கு நின்றது
நாடு நடுவுண் முகநம சிவாய
வாடுஞ் சிவாயநம புறத் தாயதே.

விளக்கம்:

பாடல் #921 இல் உள்ளபடி எழுதி அமைத்த உருவத்தின் நடுவில் இருக்கும் ஓம் எனும் பிரணவ மந்திரத்திற்கு மேலே இருக்கும் ய எழுத்துக்கு இரண்டு பக்கமும் இருக்கும் சி எழுத்துக்கள் திருவம்பலத்தில் ஆடுகின்ற நடராஜரின் திருவாயாகவும் அதற்கு நடுவில் நிற்கின்ற நமசிவாய மந்திரம் நடராஜரின் திருமுகமாகவும் அதற்கு கீழே இருக்கின்ற சிவாயநம மந்திரம் நடராஜரைச் சுற்றியுள்ள நெருப்பு வட்டமாகவும் இருக்கின்றது.

பாடல் #923

பாடல் #923: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆயுஞ் சிவாய நமமசி வாயந
வாயு நமசிவா யயநம சிவா
வாயு வாய நமசியெனு மந்திர
மாயுந் சிகாரந் தொட்டந்தத் தடைவிலே.

விளக்கம்:

சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஆராய்ந்து தியானிக்க சிவாயநம, மசிவாயந, நமசிவாய, யநமசிவா, வாயநமசி, என்று ஐந்து வகையாக சி எழுத்தில் ஆரம்பித்து ந எழுத்தில் முடியும் வகையில் அமையும்.

(நுண்மையாய் சிவாயநம என்னும் மந்திரத்தினை நான்கு முறை எழுத்துக்களை மாற்றியமைத்து ஒவ்வோர் எழுத்தும் முதலெழுத்தாக வரும்படி எழுதினால் திருவம்பலச்சக்கரத்தில் உள்ள இருபத்தைந்து கட்டத்திலும் சிவாயநம ஐந்தெழுத்து அமைந்திருக்கும் உண்மை தெரியும்.)

பாடல் #924

பாடல் #924: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின்
அடையும் அறையொன்றுக் கீரெழுத் தாக்கி
அடையு மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்தைம் பத்தொன்றும் அமர்ந்தே.

விளக்கம்:

இடமிருந்து வலமாக ஆறு கோடுகளும் மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் வரைந்தால் இருபத்தைந்து கட்டங்கள் வரும். அதில் ஒரு கட்டத்திற்குள் இரண்டு எழுத்துக்களாக மொத்தம் ஐம்பது எழுத்துக்கள் வரும்படி எழுதி அமைத்து அதைச் சுற்றி ஓம் எனும் எழுத்தை பெரியதாக எழுதி அதன் இறுதியில் க்ஷ ஹ எழுத்துக்களை எழுதி முடித்தால் வரும் சக்கரத்தில் மொத்தம் ஐம்பத்தொரு எழுத்துக்கள் இருக்கும்.

குறிப்பு: திருவம்பலச் சக்கரத்தின் இன்னொரு வடிவத்தை இந்தப் பாடலில் அருளுகின்றார். இந்த திருவம்பலச் சக்கரத்தின் தொடர்ச்சி அடுத்தப் பாடலிலும் தொடரும்.

பாடல் #925

பாடல் #925: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாமா னுள்வட்டம்
அமர்ந்த அசபை யாம்அத னுள்வட்டம்
அமர்ந்த இரேகை ஆகின்ற சூலமே.

விளக்கம்:

பாடல் #924 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரம் வரைந்து அதனைச் சுற்றி வெளிப்புற வட்டத்தில் ஹர ஹர என்று தொடர்ச்சியாக எழுதி அதற்கு அடுத்த நடு வட்டத்தில் ஹரி ஹரி என்று தொடர்ச்சியாக எழுதி அதற்கு அடுத்த உள் வட்டத்தில் அம் சம் எனும் மந்திரத்தின் பீஜங்களான ஹம்ஸ ஸொஹம் என்ற எழுத்துக்களை தொடர்ச்சியாக எழுதி அதற்குள் வட்டமாக ஓம் எனும் எழுத்தை எழுதினால் வருவது திருவம்பலச் சக்கரத்தின் சூலமாகும்.

குறிப்பு: இந்த திருவம்பலச் சக்கரத்தின் தொடர்ச்சி அடுத்தப் பாடலிலும் தொடரும்.

பாடல் #926

பாடல் #926: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

சூலத் தலையினில் தோற்றிடுஞ் சத்தியுஞ்
சூலத் தலையினிற் சூழூம்ஓங் காரத்தால்
சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்
தாலப் பதிக்கும் அடைவு அதுதானே.

விளக்கம்:

பாடல் #925 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தின் நடுவில் அமைந்த சூலத்தின் நான்கு புறங்களின் தலைப்பகுதியிலும் சக்தி மந்திரத்தின் பீஜமான ஹ்ரீம் என்ற எழுத்தை எழுதி அதைச் சுற்றி இருக்கும் ஓம் என்ற எழுத்துக்குள்ளிருக்கும் சூலங்களுக்கு நடுவில் இருக்கின்ற கட்டத்தின் மேல் ஐந்து பூதங்களைக் குறிக்கும் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துக்களை எழுதி அமைக்கப்படும் திருவம்பலச் சக்கரமே அனைத்திற்கும் தலைவனாகிய இறைவன் வீற்றிருக்கும் இடமாகும்.

குறிப்பு: இந்த திருவம்பலச் சக்கரத்தின் தொடர்ச்சி அடுத்தப் பாடலிலும் தொடரும்…

பாடல் #927

பாடல் #927: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஒகார மதஞ்சாம்
அதுவாகுஞ் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்கநம் பேரே.

விளக்கம்:

பாடல் #926 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்திற்குள் இருக்கும் சூலங்களுக்கு இடைப்பட்ட கட்டத்தின் மேல் எழுதப்படுகின்ற அ, இ, உ, எ, ஒ என்கிற ஐந்து எழுத்துக்களும் இறைவனுடைய பெயராக விளங்குகின்றது.

குறிப்பு: இந்த திருவம்பலச் சக்கரத்தின் தொடர்ச்சி அடுத்தப் பாடலிலும் தொடரும்…