பாடல் #21: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎம்
கோனைப் புகழுமின் கூடலு மாமே.
விளக்கம்:
வானத்திலிருக்கும் பெருத்த மழை மேகம் போல மாயையால் குறைபட்டுக் கிடக்கும் உயிர்கள் அனைத்திற்கும் அவற்றின் பிறவியை அழித்து முக்தியை அருளுபவனும் மந்திரத்தால் ஏவப்பட்ட காட்டு யானையின் உடலைப் பிளந்து தனது ஆடையாக உடுத்திக்கொண்ட இறைவனின் புகழ்களைப் புகழ்ந்து பாடினால் அவன் அருள் பெற்று அவனோடு இரண்டறக் கலந்து விடலாம்.
உள் விளக்கம்:
வானத்திலிருக்கும் பெரிய மழை மேகம் எப்படி வித்தியாசம் பார்க்காமல் அனைத்தின் மேலும் சரிசமமாக மழை பொழிய வைக்கின்றதோ அதுபோலவே இறைவன் மாபெரும் கருணையால் திருமால், பிரம்மன், தேவர்கள், மனிதர்கள் என்று மாயையால் குறைபட்டுக் கிடக்கும் அனைவரின் மாயையை அழித்து அவர்கள் உய்யுமாறு அருளுகின்றான். அப்படிப்பட்ட இறைவனை வெறும் மந்திரத்தினால் கட்டுப்படுத்திவிடலாம் என்ற எண்ணி தாருகாவனத்திலிருந்த முனிவர்கள் தங்களின் ஒன்றுபட்ட சக்தியைக்கொண்டு யாகக் குண்டத்திலிருந்து மந்திரசக்தியால் தோன்றுவித்த காட்டு யானையை இறைவனை நோக்கி ஏவினார்கள். இறைவனோ அந்த காட்டு யானையைக் காடே அதிரும்படி கதற இரண்டாகப் பிளந்து அதன் தோலை தனது மேலாடையாக போர்த்தியபடி அதன் தலைமேல் கால் வைத்து கஜசம்ஹாரமூர்த்தியாக காட்சி தந்து அவர்களின் அறியாமையை அகற்றி அருளினான். இப்படி தன்னை எதிர்ப்பவர்களுக்கும் சரிசமமாக அருள் வழங்கி ஒரு தலைசிறந்த அரசனப் போல உயிர்களைப் பாதுகாக்கும் இறைவனின் புகழ்களைப் புகழ்ந்து பாடினால் அவன் அருள் பெற்று முக்தியடையலாம்.
