பாடல் #17: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து
காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அதுமிகும் அவ்வழி
தேசம் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.
விளக்கம்:
வெங்காயம் பெருங்காயம் ஆகிய இரண்டையும் ஒன்றாக கொதிக்க வைத்தாலும் அதிலிருந்து வரும் வாசனையை விட கருமையான கத்தூரியிலிருந்து வரும் வாசம் அதிகமாகும். அதுபோலவே உலகெங்கும் எத்தனை தெய்வங்களைத் தேடி அடைந்து அவர்களே இறைவன் என்று எண்ணிக்கொண்டு அவர்களோடு கலந்து முயன்றாலும் அனைத்திற்கும் இறைவனான ஈசுவரனை (சதாசிவமூர்த்தியை) கலந்து பெறும் உறவுக்கு (பேரின்பத்திற்கு) அது கொஞ்சம் கூட ஈடாகாது.
உள் விளக்கம்:
வெங்காயம் என்பது பருமையான தேகத்தையும் (அன்னமயகோஷம்) பெருங்காயம் என்பது நுண்மையான தேகம் (மனோமய கோஷத்தையும்) குறிக்கும். இவ்விரண்டு தேகங்களும் உயிர்களின் உடலுக்குள்ளே கலந்து இருந்தாலும் அது இறைவனோடு கலந்து பெறும் சூக்கும தேகத்திற்கு ஈடாகாது. ஆகவே உலகப் பற்றுக்கள் எவ்வளவுதான் இன்பத்தைத் தருவதாக இருந்தாலும் அவை அனைத்தும் இறைவனோடு இரண்டறக் கலந்து பெறும் பேரின்பத்திற்கு ஈடாகாது.
நம சிவாய. பதிவுகள் மிக அருமை.
தினம் ஒரு திருமந்திரம் கிடைத்தால் நன்று..
தினம் ஒரு திருமந்திரம் வலைதலத்தில் பதிவேற்ற முயற்சி செய்கிறோம் மேலே பேஸ்புக் லிங்க் உள்ளது தங்களை அதில் இணைத்துக்கொண்டால் தினம் ஒரு திருமந்திரம் கிடைக்கும்