பாடல் #1619

பாடல் #1619: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

உழவனு ழவுழ வானம் வழங்க
வுழவனு ழவினிற் பூத்த குவளை
யுழவனு ழத்தியர் கண்ணொக்கு மென்றிட்
டுழவன தனையுழ வொழிந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உழவனு ழவுழ வானம வழஙக
வுழவனு ழவினிற பூதத குவளை
யுழவனு ழததியர கணணொககு மெனறிட
டுழவன தனையுழ வொழிந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உழவன் உழ உழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்று இட்டு
உழவன் அதனை உழவு ஒழிந்தானே.

பதப்பொருள்:

உழவன் (இறைவன் அருளிய துறவு முறை கொள்கையை கடைபிடிக்கின்ற உழவனாகிய துறவி) உழ (தாம் கடைபிடிக்கின்ற கொள்கையில் சாதகம் செய்ய) உழ (செய்ய) வானம் (ஆகாயத்திலிருந்து இறைவனின்) வழங்க (அருளானது மழை போல் அவருக்கு கிடைத்து)
உழவன் (உழவனாகிய துறவி) உழவினில் (செய்த உழவாகிய சாதனையில்) பூத்த (இறைவனது அருளால் கிடைத்த பக்குவத்தில் மேல் நிலைக்கு செல்ல செல்ல அவரது குண்டலினி சக்தியானது சகஸ்ரதளத்திற்கு ஏறிச் சென்று) குவளை (அங்கே உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரை மலரச் செய்கின்றது)
உழவன் (அப்போது உழவனாகிய துறவி) உழத்தியர் (தமது சகஸ்ரதளத்தில் தரிசித்த) கண் (இறை சக்திக்கு) ஒக்கும் (ஒப்பாக தமது பக்குவம் இருக்கின்றது) என்று (என்று) இட்டு (அதை தமது சமாதி நிலைக்கு தொடக்கமாக கொண்டு தொடங்கி)
உழவன் (உழவனாகிய துறவி) அதனை (அந்த சக்தியைக் கொண்டே) உழவு (தான் செய்கின்ற கொள்கையை) ஒழிந்தானே (விட்டு தான் என்கின்ற உணர்வே இல்லாமல் அனைத்தையும் விட்டு விலகி சமாதி நிலையிலேயே வீற்றிருப்பார்).

விளக்கம்:

பாடல் #1618 இல் உள்ளபடி இறைவன் அருளிய துறவு முறை கொள்கையை கடைபிடிக்கின்ற உழவனாகிய துறவி தாம் கடைபிடிக்கின்ற கொள்கையில் சாதகம் செய்ய செய்ய ஆகாயத்திலிருந்து இறைவனின் அருளானது மழை போல் அவருக்கு கிடைக்கின்றது. அப்போது உழவனாகிய துறவி செய்த உழவாகிய சாதனையில் இறைவனது அருளால் கிடைத்த பக்குவத்தில் மேல் நிலைக்கு செல்ல செல்ல அவரது குண்டலினி சக்தியானது சகஸ்ரதளத்திற்கு ஏறிச் சென்று அங்கே உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரை மலரச் செய்கின்றது. அதன் பிறகு உழவனாகிய துறவி தமது சகஸ்ரதளத்தில் தரிசித்த இறை சக்திக்கு ஒப்பாக தமது பக்குவம் இருக்கின்றது என்று அதை தமது சமாதி நிலைக்கு தொடக்கமாக கொண்டு தொடங்கி அந்த சக்தியைக் கொண்டே தான் செய்கின்ற கொள்கையை விட்டு தான் என்கின்ற உணர்வே இல்லாமல் அனைத்தையும் விட்டு விலகி சமாதி நிலையிலேயே வீற்றிருப்பார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.