பாடல் #1618

பாடல் #1618: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

கேடுங் கடமையுங் கேட்டுவந் தைவரு
நாடி வளைந்தது நான் கடைவேனல
னாடல் விடையுடை யண்ணல் திருவடி
கூடுந் தவஞ்செய்த கொள்கைதந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கெடுங கடமையுங கெடடுவந தைவரு
நாடி வளைநதது நான கடைவெனல
னாடல விடையுடை யணணல திருவடி
கூடுந தவஞசெயத கொளகைதந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கேடும் கடமையும் கேட்டு வந்த ஐவரும்
நாடி வளைந்த அது நான் கடைவேன் அலன்
ஆடல் விடை உடை அண்ணல் திரு அடி
கூடும் தவம் செய்த கொள்கை தந்தானே.

பதப்பொருள்:

கேடும் (பிறவிக்கு காரணமாக இருக்கின்ற வினைகளையும்) கடமையும் (அந்த வினைகளை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய கடமைகளையும்) கேட்டு (இறைவனிடம் பிறவி எடுப்பதற்கு முன்பே கேட்டுக் கொண்டு) வந்த (பிறவியோடு கூட வந்த) ஐவரும் (ஐந்து புலன்களும்)
நாடி (அதனதன் கடமையை செய்வதற்கு ஏற்றபடி ஆசைகளின் வழியே) வளைந்த (வளைந்து என்னை நடக்க) அது (வைக்கின்றதை) நான் (யான்) கடைவேன் (கடைபிடிப்பது) அலன் (இல்லை)
ஆடல் (தில்லையில் ஆடுகின்ற) விடை (விடை வாகனமாகிய நந்தியை) உடை (உடையவனாகிய) அண்ணல் (இறைவனின்) திரு (மதிப்பிற்குரிய) அடி (திருவடிகளை)
கூடும் (சென்று அடைகின்ற) தவம் (தவமுறையான) செய்த (இந்த செயலை) கொள்கை (செய்கின்ற கொள்கையை) தந்தானே (இறைவன் எமக்குத் தந்து அருளினான்).

விளக்கம்:

பிறவிக்கு காரணமாக இருக்கின்ற வினைகளையும் அந்த வினைகளை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் இறைவனிடம் பிறவி எடுப்பதற்கு முன்பே கேட்டுக் கொண்டு பிறவியோடு கூட வந்த ஐந்து புலன்களும் அதனதன் கடமையை செய்வதற்கு ஏற்றபடி ஆசைகளின் வழியே வளைந்து என்னை நடக்க வைக்கின்றதை யான் கடைபிடிப்பது இல்லை. தில்லையில் ஆடுகின்ற விடை வாகனமாகிய நந்தியை உடையவனாகிய இறைவனின் மதிப்பிற்குரிய திருவடிகளை சென்று அடைகின்ற தவமுறையான இந்த செயலை செய்கின்ற கொள்கையை இறைவன் எமக்குத் தந்து அருளினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.