பாடல் #1063: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
உணர்ந்துட னேநிற்கு முள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே.
விளக்கம்:
பாடல் #1062 இல் உள்ளபடி திரிபுரையாக இருக்கும் மனோன்மணி சக்தியை தமது சிந்தனைக்குள் எப்போதும் வைத்திருக்கும் வழியை ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்கள் அவ்வழியிலேயே சாதகம் செய்யும் போது இறைவன் அவர்களுக்கு உள்ளிருந்து ஒளியாக வெளிப்படுவான். அந்த இறைவனோடு நறுமணம் கமழும் மலர்களை தன் கூந்தலில் அணிந்து இருக்கும் இறைவியும் ஒன்றாகக் கலந்திருந்து வெளிப்படுவாள். அப்படி வெளிப்பட்ட திரிபுரை சக்தி காட்டும் வழியில் அன்போடு செல்பவர்களுக்கு அவள் நற்கதியை அருளுவாள்.