23-5-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: நான் என்றால் என்ன?
நான் என்பது என்ன? இதனைத் தேடி நாடிப் பல காலங்களில் தவம் இருந்தவர்களுள் யாமும் ஒருவனே. இவ்விதம் இருக்க நான் என்பதைத் தேடுவதில் தீவிர முயற்சிகள் வேண்டும் என்று சொல்வோம். இங்கு யாம் சொல்வது என்னவென்றால் நான் என்கின்ற அகங்கார நிலை மாறுதல் வேண்டும் என்பதேயாகும். இவ்வாண்டு தொட்டு நான் செய்தேன் என்பதற்கு வழியே எங்கும் இருத்தல் ஆகாது. நான் என்கின்றது அகங்காரம் மட்டுமல்லாது உண்மையான நிலை இல்லை. நாம் என்பதே சரியானது ஆகும். ஏன் என்றால் ஒவ்வொரு செயலிலும் முயற்சியிலும் இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்பதை மறக்கக்கூடாது.
இறைவன் உடன் இருக்கும் இந்த நிலையை அடையவே ஞானிகளும் துறவிகளும் யாம் செய்கின்றோம் யாம் பார்க்கின்றோம் என இறைவனையும் சேர்த்துக் சொல்கின்றனர். ஏன் என்றால் உடன் இறைவனையும் சேர்க்கின்றனர். இவ்விதம் வெறும் வார்த்தையில் சேர்ந்தால் மட்டும் போதாது அன்பர்களே. உண்மையாகவே இறைவன் கூட நின்று ஒவ்வொரு செயல்களிலும் ஈடுபடுகின்றான் என்பதை பரிபூரணமாக நீங்கள் நம்புதல் வேண்டும். ஏன் எனில் இதுவே உண்மையான நிலை. என் செயலால் இனி ஆவது ஒன்றுமில்லை என்பதைப் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டால் அனைத்தும் நல்வழியில் நீங்கும் என்பது மட்டுமல்லாது அமைதியையும் காண இயலும் என்றும் விளக்கிட்டோமே. இக்காலத்தில் கலியுகத் தன்மையில் பிரதானமாக எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காத பொருள் அமைதியே. அந்த அமைதி வேண்டும் எனில் அனைத்தையும் இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து இனி அனைத்தும் உமது செயலே என ஒப்புக் கொள்வதுதான். இதற்கு பொருள் நாம் யாதும் செய்வது வேண்டாம் என்பதல்ல. எதிர்பார்ப்பின்றி செயல்படுவீர்களாக. அனைத்தும் தானாக கைகூடும்.
