பாடல் #1773: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
குரைக்கின்ற வாறிற் குவலைய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செய்யு மாறறி யேனே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
குரைககினற வாறிற குவலைய நீரும
பரககினற காறறும பயிலகினற தீயும
நிரைககினற வாறிவை நீணடகன றானை
வரைதது வலஞசெயயு மாறறி யெனெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
குரைக்கின்ற ஆறில் குவலைய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற ஆறு இவை நீண்டு அகன்ற ஆனை
வரைத்து வலம் செய்யும் ஆறு அறியேனே.
பதப்பொருள்:
குரைக்கின்ற (சத்தம் இருக்கின்ற ஆகாயத்தின்) ஆறில் (வழியில்) குவலைய (உலகமும் [நிலம்]) நீரும் (உலகத்தில் இருக்கின்ற நீரும்)
பரக்கின்ற (அலைந்து திரிகின்ற) காற்றும் (காற்றும்) பயில்கின்ற (பொருளின் தன்மைக்கு ஏற்ப பழகுகின்ற) தீயும் (நெருப்பும்)
நிரைக்கின்ற (கூட்டமாக இருக்கின்ற) ஆறு (வழியில்) இவை (இந்த ஐந்து பூதங்களாகிய) நீண்டு (அனைத்திலும் நீண்டு விரிந்தும்) அகன்ற (இவை அனைத்தையும் தாண்டியும்) ஆனை (இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை)
வரைத்து (ஒரு எல்லைக்குள் வரையறுத்து) வலம் (அவனை வணங்குவதை) செய்யும் (செய்கின்ற) ஆறு (வழியை) அறியேனே (யாம் அறியாமல் இருக்கின்றோம்).
விளக்கம்:
சத்தம் இருக்கின்ற ஆகாயத்தின் வழியில் உலகமும் [நிலம்], உலகத்தில் இருக்கின்ற நீரும், அலைந்து திரிகின்ற காற்றும், பொருளின் தன்மைக்கு ஏற்ப பழகுகின்ற நெருப்பும், இப்படி ஐந்து பூதங்களின் கூட்டமாக இருக்கின்ற வழியில் அனைத்திலும் நீண்டு விரிந்தும், இவை அனைத்தையும் தாண்டியும் இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து அவனை வணங்குவதற்கான வழியை யாம் அறியாமல் இருக்கின்றோம்.