பாடல் #441: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)
எட்டுத் திசையும் அடிக்கின்ற காற்றவன்
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாசம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்க்கின்ற கண்ணுதல் காணுமே.
விளக்கம்:
எட்டுத் திசைகளிலும் வீசுகின்ற காற்றும் வட்ட வடிவ உலகைச் சூழ்ந்து இருக்கும் அலை கடல் நீரும் உலகம் தனக்குள்ளிருந்தும் தன்னைச் சுற்றியிருக்கும் வளி மண்டலங்களிலிருந்தும் பெறும் நெருப்பும் உள்ளிருக்கும் நெருப்பை மூடி விரிந்து பரவி இருக்கும் இந்த மாபெரும் நிலமும் உலகத்தைச் சுற்றியிருக்கும் வளிமண்டலத்தைத் தாண்டி இருக்கும் ஆகாயமும் ஆகிய பஞ்ச பூதங்களையும் உள்ளடக்கி ஆன்மாவோடு உயிரைச் சேர்த்து அதை நிலைபெற வைக்கும் மூச்சுக்காற்றை அடைத்து வைத்த தோலால் ஆன பையைப் போன்ற உடலை அவரவர் வினைகளுக்கு ஏற்ப இறக்கும் காலம் வரும் வரை பாதுகாப்பாக கட்டி வைத்தும் காலம் வரும்போது அவிழ்த்துப் போட்டும் விளையாடுவது நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமானின் அருளே.
உட்கருத்து: வினைகள் முடியும் வரை உயிர்களை உலகத்தில் பஞ்ச பூதங்களை அடக்கிய உடலில் பிறக்க வைத்து அவற்றை காலம் வரும் வரை காப்பாற்றி வந்து முடியும் காலம் வந்தபின் அழித்து அடுத்த நிலைக்குச் செல்லும்படி செய்வது அனைத்தும் இறைவனின் திருவருளே ஆகும்.