பாடல் #144: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை
பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.
விளக்கம்:
தென்னங்கீற்றுகளால் பின்னப்பட்ட கூரையும் அதைத் தாங்கியிருக்கும் கழியும் நீண்ட காலம் உபயோகிக்கப்பட்டபின் ஒரு நாள் விழுந்துவிடும். அதுபோலவே நல்ல வினை தீய வினை ஆகிய இரண்டுவித வினைகளால் பின்னப்பட்ட இந்த உடலென்னும் கூரையும் அதைத் தாங்கியிருக்கும் மூச்செனும் கழியும் அந்த இருவினைகளின் பயன்களை முழுவதும் அனுபவித்தபின் முதுமை பெற்று ஒரு நாள் மூச்சு வெளியேறி இறந்துவிடும். கூரை இருந்த வரையில் அதனடியில் வசித்து வந்த மக்கள் கூரை விழுந்தபின் அதனோடே இறந்து விழுவதில்லை. அதுபோலவே மனிதன் வாழும்வரை அவனோடு கூடவே இருந்து அவனால் பயன்பெற்ற மனைவியும் குழந்தைகளும் அவன் இறந்து போனபின் அவனோடு கூடவே இறந்து போவதில்லை. உயிர் இறந்து மேலுலகத்திற்குத் தனியாகச் செல்லுகின்ற போது அதனுடனே பாதுகாவலர்கள் போல துணைக்கு வருவது அந்த உயிர் வாழும் போது செய்த விரதங்களின் பலன்களும் இறையருளால் பெற்ற ஞானங்களும் மட்டுமே. மற்ற எதுவும் அந்த உயிரோடு வருவதில்லை. எனவே வாழும்வரை இறைவனை நினைத்து காரியங்களைச் செய்து குருவின் அருள்பெற்று ஞானத்தை வளர்ப்பதே நல்லது.