பாடல் #326

பாடல் #326: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல முஞ்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

விளக்கம்:

காமமும் போதை தரும் மதுவும் கீழ்த்தரமான மனிதர்களுக்கே உரியது. மதுவினால் மிகப்பெரிய அழுக்காகிய ஆணவம் அதிகரிக்கும். ஆணவம் மிகுந்தால் நம்மையே உணர முடியாத அளவுக்கு அறிவு எல்லா நேரத்திலும் மயங்கி கிடக்கும். நாளடைவில் அறிவு அழிந்தே போகும். எப்போதும் பேரானந்த உணர்வைத் தரும் இறைவனின் திருவடிகள் போலவே பேரானந்தத்தைத் தரும் அமிர்தத்தைப் பெற்று அருந்துவது மேன்மையான மனிதர்கள் செய்யும் செயலாகும்.

பாடல் #325

பாடல் #325: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சுவானந்தம் விட்டு
நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்மைக் காலே.

விளக்கம்:

உயிர்கள் வெளியுலக எண்ணங்களை முழுமையாக நீக்கிவிட்டு இறைவனின் மேல் சிந்தனையை வைத்து யோகத்தில் சிவமாக இருக்கும் சமாதி நிலையில் குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரரதளத்தில் சேர்த்தால் அங்கே ஊறும் மிகவும் தூய்மையான அமிர்தத்தைப் பருகி பேரானந்தத்திலேயே இருப்பதை விட்டுவிட்டு புத்தியை மயக்கும் உலக மதுவை பருகி அந்த மயக்கத்தில் இருப்பதும் சுய நினைவின்றி மயங்கிக் கிடப்பதும் உயிர்களை இழிவு நிலைக்கு அழைத்துச் செல்லும்.

பாடல் #324

பாடல் #324: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

கழுநீர்ப் பசுப்பெறிற் பின் கயந்தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயம் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் ஆனந்தத் தேறலே.

விளக்கம்:

அரிசி கழுவிய நீரை பசுவுக்குக் கொடுத்தால் அதைக் குடித்துப் பழகிய பசு அதற்குப் பிறகு குளங்களைத் தேடிச் சென்று நல்ல நீரைப் பருகாது. தாகம் எடுத்தாலும் எளிதாக கிடைக்கும் நல்லநீரை குடிக்காமல் அரிசி கழுவிய கழுநீருக்காக காத்திருந்து அந்தப் பசுக்கள் தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். அதுபோலவே போதை தரக்கூடிய மதுவைக் குடித்துப் பழகிய மனிதர்கள் ஒழுக்கத்திலிருந்து விலகி எளிதாக கிடைக்கும் செழுமையான நீரான சிவானந்தத் தேனான அமிர்தத்தைப் பருகாமல் போதைதரும் மதுவை பருகி தங்களின் வாழ்க்கையை வீணாகக் கழிக்கின்றனர்.