பாடல் #334

பாடல் #334: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியே
மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.

விளக்கம்:

பாடல் #331 ல் உள்ளபடி சிவானந்ததேனை அருந்தினால் உயிர்கள் உடம்பில் வாழ இறைவனால் கொடுக்கப்பட்ட 96 தத்துவங்கள் நீங்கும். அவை அனைத்தும் தன்னுடையது என்று எண்ணும் மாயைகள் நீங்கும். உலக இன்பங்களைப் பெற எண்ணி பொய்யான தவங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீங்கும். இந்த உலகைப்பற்றிய நினைப்பொழிந்து தமக்குள் சிவபோகமாகிய என்றும் அழியாத உண்மை வீட்டில் பேரானந்த மயக்கத்துள் இருக்கலாம்.

பாடல் #335

பாடல் #335: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாகும் மதத்தால் அறிவுஅழிந் தாரே.

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்று சிவ சிந்தனையில் இருக்கும் சிவயோகிகள் பிராணாயாம முறையில் மூச்சுக்காற்றை தன் வசப்படுத்தி அதனால் கிடைக்கும் குண்டலினி சக்தியின் மூலம் அமிர்தத்தை பருகி எட்டுவித சித்திகளையும் பெற்று பேரானந்தத்தில் இருப்பார்கள். அப்படி இல்லாமல் உலக இன்பங்களில் மோகம் கொண்டவர்கள் மதுவைக் குடித்து மூடர்களாகி மதம் பிடித்த யானை போல் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கோபம் கொண்டு அறிவு அழிந்து ஒரு நாள் இறந்து போகின்றனர்.

பாடல் #336

பாடல் #336: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

உண்ணீர் அமுதம் உறுமூ றலைத்திறந்
தெண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியி னாடிநீ ரானலங்
கண்ணா றொடேசென்று கால்வழி காணுமே.

விளக்கம்:

குருவின் ஈடுஇணையில்லாத தாமரை மலர் போன்ற திருவடிகளை எப்போதும் தியானத்தில் எண்ணி குண்டலினியை எழுப்பி மூச்சுக்காற்றின் மூலம் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் எடுத்துச் சென்று ஏழாவது சக்கரமான சகஸ்ரரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனோடு சேர்த்து பேரின்பத்தைத் தரும் அமிர்தம் ஊறும் இடத்தைத் திறந்து அதிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தை பருகி சமாதி நிலையை அடைந்து பேரானந்த நிலையில் இருக்கலாம்.