பாடல் # 800 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.
விளக்கம் :
வண்ணான் (துணி துவைப்பவர்) துணியை கல்லில் அடித்து துவைக்கும் போது ஆடையில் இருக்கும் அழுக்கு போவது போல உயிர் முன் பக்கம் உள்ள தன் மூளையை தியானம் மூலம் வரும் சிவயோக ஒளியினால் மோத வேண்டும். இரண்டு கண்களின் பார்வைகளையும் மாறி மாறிப் பார்ப்பதால் சிரசின் உள்ளே தெரியும் இரண்டு பக்கத்துக்கும் இடையே உள்ள சஹஸ்ரதளம் என்னும் குளத்தை தியானத்தின் மூலம் வந்த ஒளியைக் கொண்டு நிரப்ப வேண்டும். அதற்குப் பிறகு நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்த்தால் அந்த உயிர் தன் குற்றங்கள் அனைத்தும் நீங்கித் தூய்மை அடைந்து விடுவான்.