பாடல் #1800: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
அருளில் பிறந்திட் டருளில் வளர்ந்திட்
டருளிலிழிந் திளைப் பாற்றி மறைந்திட்
டருளான வானந்தத் தாரமு தூட்டி
யருளா லென்னந்தி யகம்புகுந் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அருளில பிறநதிட டருளில வளரநதிட
டருளிலிழிந திளைப பாறறி மறைநதிட
டருளான வானநதத தாரமு தூடடி
யருளா லெனனநதி யகமபுகுந தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அருளில் பிறந்து இட்டு அருளில் வளர்ந்து இட்டு
அருளில் இழிந்து இளைப்பு ஆற்றி மறைந்து இட்டு
அருள் ஆன ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி
அருள் ஆல் என் நந்தி அகம் புகுந்தானே.
பதப்பொருள்:
அருளில் (இறைவன் தமது திருவருளாலே) பிறந்து (உயிர்களை அவர்களின் ஆசைகளுக்கு ஏற்ற பிறவி எடுக்கும் படி) இட்டு (செய்து) அருளில் (இறையருளாலே) வளர்ந்து (அந்த ஆசைகளை அனுபவித்து உயிர்கள் வளரும் படி) இட்டு (செய்து)
அருளில் (இறையருளாலே ஆசைகள் தீர்கின்ற நிலையில்) இழிந்து (ஆசைகளை குறையும் படி செய்து) இளைப்பு (ஆசைகள் நீங்கிய சோர்வு நிலையை) ஆற்றி (நீக்கி) மறைந்து (உள்ளுக்குள் மறைந்து இருக்கின்ற இறை சக்தியை) இட்டு (வெளிப்படும் படி செய்து)
அருள் (இறையருளால்) ஆன (கிடைக்கின்ற) ஆனந்தத்து (பேரானந்தத்தை அனுபவிக்க வைத்து) ஆர் (தெகிட்டாத) அமுது (அமிழ்தத்தை) ஊட்டி (ஊட்டிக் கொடுத்து)
அருள் (இறையருள்) ஆல் (ஆகவே) என் (எமது) நந்தி (குருநாதராகிய இறைவன்) அகம் (எமக்குள்) புகுந்தானே (புகுந்தார்).
விளக்கம்:
இறைவன் தமது திருவருளாலே உயிர்களை அவர்களின் ஆசைகளுக்கு ஏற்ற பிறவி எடுக்கும் படி செய்து, இறையருளாலே அந்த ஆசைகளை அனுபவித்து உயிர்கள் வளரும் படி செய்து, இறையருளாலே ஆசைகள் தீர்கின்ற நிலையில் ஆசைகளை குறையும் படி செய்து, ஆசைகள் நீங்கிய சோர்வு நிலையை நீக்கி, உள்ளுக்குள் மறைந்து இருக்கின்ற இறை சக்தியை வெளிப்படும் படி செய்து, இறையருளால் கிடைக்கின்ற பேரானந்தத்தை அனுபவிக்க வைத்து, தெகிட்டாத அமிழ்தத்தை ஊட்டிக் கொடுத்து, இறையருள் ஆகவே எமது குருநாதராகிய இறைவன் எமக்குள் புகுந்தார்.
ஓம் நமசிவாய
வணக்கம் ஐயா
திருமந்திரம் தினம் ஒரு பாடலாக தொடர்ந்து அனுப்பி இருந்த தொடர் பாடல் 1800 உடன் நின்று விட்டது ஐயா. தொடர்ந்து இந்த சேவையை வழங்கி எங்கள் நினைவில் திருமந்திரம் இருக்க உதவ வேண்டும்.
தங்கள் மேன்மையான சேவைக்கு சிரம் தாழ்த்தி நன்றிகள்.
ஓம் நமசிவாய
சித்ரா
வணக்கம் திருமந்திர தியான மண்டபம் கட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எழுதுவதற்கான சூழ்நிலை அமையவில்லை. விரைவில் வழக்கம் போல் தினமும் எழுதி பதிவேற்ற ஆரம்பிப்போம். நன்றி
அருமை