பாடல் #1681: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
மனத்தி லெழுந்ததோர் மாயக் கண்ணாடி
நினைக்கி லதனி னிழலையுங் காணார்
வினைப் பயன்போக விளக்கியுங் கொள்ளார்
புழைக்கடைக் கிச்சித்துப் போகின்ற வாறே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மனததி லெழுநததொர மாயக கணணாடி
நினைககி லதனி னிழலையுங காணார
வினைப பயனபொக விளககியுங கொளளார
புழைககடைக கிசசிததுப பொகினற வாறெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மனத்தில் எழுந்தது ஓர் மாய கண்ணாடி
நினைக்கில் அதனின் நிழலையும் காணார்
வினை பயன் போக விளக்கியும் கொள்ளார்
புழை கடைக்கு இச்சித்து போகின்ற ஆறே.
பதப்பொருள்:
மனத்தில் (உயிர்கள் தங்களின் மனதினில்) எழுந்தது (எழுகின்ற எண்ணங்களை மாயை மறைத்து இருப்பதால்) ஓர் (அது ஒரு) மாய (மாய / பொய்யான) கண்ணாடி (கண்ணாடியாக இருக்கின்றது)
நினைக்கில் (அந்த மனதில் நினைத்துப் பார்க்கின்ற கற்பனையான எண்ணங்கள்) அதனின் (அதனுடைய) நிழலையும் (நிழலைக் கூட) காணார் (காண முடியாதவர்களாக இருக்கின்றார்கள்)
வினை (தாங்கள் செய்கின்ற வினையின்) பயன் (பயன்) போக (தீர்ந்து போவதற்கான) விளக்கியும் (வழிமுறைகளை உபதேசித்தாலும்) கொள்ளார் (அதை கடை பிடித்து தங்களின் வினைகளை தீர்த்துக் கொண்டு மேல் நிலைக்குப் போகும் வழியில் செல்லாமல்)
புழை (கீழ் நிலைக்கு) கடைக்கு (செல்லும்) இச்சித்து (தங்களின் ஆசைகளினால்) போகின்ற (மேலும் மேலும் பிறவிகள் எடுக்கின்ற) ஆறே (வழியிலேயே செல்கிறார்கள்).
விளக்கம்:
உயிர்கள் தங்களின் மனதினில் எழுகின்ற எண்ணங்களை மாயை மறைத்து இருப்பதால் அது ஒரு பொய்யான கண்ணாடியாக இருக்கின்றது. அந்த மனதில் நினைத்துப் பார்க்கின்ற கற்பனையான எண்ணங்களின் நிழலைக் கூட காண முடியாதவர்களாக இருக்கின்றார்கள். தாங்கள் செய்கின்ற வினையின் பயன் தீர்ந்து போவதற்கான வழிமுறைகளை உபதேசித்தாலும் அதை கடை பிடித்து தங்களின் வினைகளை தீர்த்துக் கொண்டு மேல் நிலைக்குப் போகும் வழியில் செல்லாமல், கீழ் நிலைக்கு செல்லும் தங்களின் ஆசைகளினால் மேலும் மேலும் பிறவிகள் எடுக்கின்ற வழியிலேயே செல்கிறார்கள்.