பாடல் #1481: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)
தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று
மோனம தாமொழிப் பான்முத்த ராவது
மீனமில் ஞானா னுபூதியி லின்பமுந்
தானவ னாயறற லானசன் மார்கமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தானவ னாகித தானைநதா மலஞசெறறு
மொனம தாமொழிப பானமுதத ராவது
மீனமில ஞானா னுபூதியி லினபமுந
தானவ னாயறற லானசன மாரகமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று
மோனம் அதாம் ஒழிப்பான் முத்தர் ஆவதும்
ஈனம் இல் ஞான அனுபூதி இல் இன்பமும்
தான் அவன் ஆய் அற்றல் ஆன சன் மார்க்கமே.
பதப்பொருள்:
தான் (குருவருளால் தெளிவு பெற்றவர்கள் தாம்) அவன் (சிவமாகவே) ஆகி (ஆகுவதும்) தான் (தம்மிடம் இருக்கின்ற) ஐந்தாம் (ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி ஆகிய ஐந்து விதமான) மலம் (மலங்களையும்) செற்று (அழிப்பதும்)
மோனம் (மௌனம்) அதாம் (என்று சொல்லப்படுகின்ற உச்ச நிலையில்) ஒழிப்பான் (எண்ணங்கள் அனைத்தையும் அழித்து) முத்தர் (முக்தி நிலை பெற்றவராக) ஆவதும் (ஆகுவதும்)
ஈனம் (ஒரு குறையும்) இல் (இல்லாத) ஞான (பேரறிவு ஞானத்தை) அனுபூதி (தமது அனுபவித்தில் உணர்ந்து) இல் (அதில்) இன்பமும் (பேரின்பம் பெறுவதும்)
தான் (தாமே) அவன் (சிவமாக) ஆய் (ஆகி) அற்றல் (தான் எனும் எண்ணமே இல்லாமல் இருப்பதும்) ஆன (ஆகிய இவை அனைத்துமே) சன் (உண்மையான) மார்க்கமே (வழிகளாகும்).
விளக்கம்:
குருவருளால் தெளிவு பெற்றவர்கள் தாம் சிவமாகவே ஆகுவதும் தம்மிடம் இருக்கின்ற ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி ஆகிய ஐந்து விதமான மலங்களையும் அழிப்பதும் மௌனம் என்று சொல்லப்படுகின்ற உச்ச நிலையில் எண்ணங்கள் அனைத்தையும் அழித்து முக்தி நிலை பெற்றவராக ஆகுவதும் ஒரு குறையும் இல்லாத பேரறிவு ஞானத்தை தமது அனுபவித்தில் உணர்ந்து அதில் பேரின்பம் பெறுவதும் தாமே சிவமாக ஆகி தான் எனும் எண்ணமே இல்லாமல் இருப்பதும் ஆகிய இவை அனைத்துமே உண்மையான வழிகளாகும்.
ஐந்து விதமான மலங்கள்
- ஆணவம் – செருக்கு, மமதை
- கன்மம் – வினைப் பயன்
- மாயை – பொய்யான தோற்றம்
- மாயேயம் – அசுத்த மாயை
- திரோதாயி – உண்மையை மறைத்தல்