பாடல் #1478: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)
சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
யுய்ய வகுத்த குருநெறி யொன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்கஞ் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சைவப பெருமைத தனிநா யகனநநதி
யுயய வகுதத குருநெறி யொனறுணடு
தெயவச சிவநெறி சனமாரகஞ செரநதுயய
வையததுள ளாரககு வகுததுவைத தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சைவ பெருமை தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்த குரு நெறி ஒன்று உண்டு
தெய்வ சிவ நெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே.
பதப்பொருள்:
சைவ (சைவம் எனும் வழிமுறைக்கு) பெருமை (பெருமையளிக்கும்) தனி (தனிப் பெரும்) நாயகன் (தலைவனாகவும்) நந்தி (குருநாதராகவும் நிற்கின்ற இறைவன்)
உய்ய (ஆன்மாக்கள் மேல் நிலையை அடைவதற்கு) வகுத்த (அவரவரது பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து அருளிய) குரு (குரு) நெறி (வழி முறை) ஒன்று (ஒன்று) உண்டு (இருக்கின்றது)
தெய்வ (அதுவே தெய்வ அம்சமாகிய) சிவ (சிவத்தை) நெறி (அடைகின்ற வழி முறை ஆகும்) சன்மார்க்கம் (அதனுடன் உண்மை வழியாகிய தாமும் பார்க்கின்ற பொருளும் அந்த இறைவனாகவே இருக்கின்ற தத்துவமும்) சேர்ந்து (சேர்ந்து) உய்ய (மேல் நிலையை அடைவதற்காக)
வையத்து (உலகத்தில்) உள்ளார்க்கு (உள்ள அனைத்து உயிர்களுக்கும்) வகுத்து (அதனதன் பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து) வைத்தானே (வைத்து அருளுகின்றான் குரு நாதனாக நிற்கின்ற இறைவன்).
விளக்கம்:
சைவம் எனும் வழிமுறைக்கு பெருமையளிக்கும் தனிப் பெரும் தலைவனாகவும் குருநாதராகவும் நிற்கின்ற இறைவன் ஆன்மாக்கள் மேல் நிலையை அடைவதற்கு அவரவரது பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து அருளிய குரு வழி முறை ஒன்று இருக்கின்றது. அதுவே தெய்வ அம்சமாகிய சிவத்தை அடைகின்ற வழி முறை ஆகும். அதனுடன் உண்மை வழியாகிய தாமும் பார்க்கின்ற பொருளும் அந்த இறைவனாகவே இருக்கின்ற தத்துவமும் சேர்ந்து மேல் நிலையை அடைவதற்காக உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து வைத்து அருளுகின்றான் குரு நாதனாக நிற்கின்ற இறைவன்.