பாடல் #1118: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
கன்னியுங் கன்னி யழிந்திலன் காதலி
துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவனு மங்குள
என்னேயிம் மாயை யிருளது தானே.
விளக்கம்:
பாடல் #1117 இல் உள்ளபடி ஒளியாகிய இறைவனை இறைவியின் இருள் தன்மை மறைத்து வைத்திருக்கின்றது. என்றும் கன்னியாகவே இருக்கும் இறைவியானவள் என்றும் அழியாத இறைவனுடன் கொண்ட அன்பினால் அவனது ஆசைப்படியே தனது எண்ணத்தாலேயே ஐந்து தெய்வங்களான பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோரை உருவாக்கி அருளினாள். இறைவன் சொல்லியபடியே எழுதப்பட்ட தூய்மையான வேதங்கள் கூறுகின்ற ஒளி வடிவமான இறைவனும் இருள் தன்மை கொண்ட இறைவியோடு சேர்ந்து உயிர்களுக்குள் வீற்றிருக்கின்றான். ஆனாலும் அவனையே மறைக்கின்ற அளவிற்கு இறைவியின் இருள் தன்மை இருக்கின்றது. இந்த மாயையின் சக்திதான் எவ்வளவு பெரியது?
கருத்து: சுத்த மாயையின் ஒளி அம்சமான இறைவனும் மாயையின் இருள் அம்சமான இறைவியும் உயிர்களுடன் பிறவியிலேயே சேர்ந்து வந்துவிடுகின்றனர். ஆனாலும் இறைவியானவள் தனது இருள் தன்மையான மாயையால் உயிர்கள் தங்களின் கர்மங்களைத் தீர்த்துக் கொள்ளும் வரை இறைவனை மறைத்து அருளுகின்றாள். மேஜை மேல் வைக்கப்பட்ட விளக்கின் அடியிலேயே இருள் இருப்பதைப் போல உயிர்களின் தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் ஒளியாக இருக்கும் இறைவனை மறைக்கின்ற இருளாக இறைவி இருக்கின்றாள்.
குறிப்பு: ஐந்து தெய்வங்களையும் தனது எண்ணத்தாலே உருவாக்கியதால் வேறு எந்த மாற்றமும் அடையாமல் இறைவி என்றும் கன்னியாகவே இருக்கின்றாள்.