பாடல் #1109: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
அஞ்சொல் மொழியா ளருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கிஞ்சொல் லளிக்கு மிறைவியென் றாரே.
விளக்கம்:
பாடல் #1108 இல் உள்ளபடி எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கின்றேன் என்று எமக்கு அபயம் அருளிய இறைவியானவள் செய்வதற்கு மிகவும் அரிதான தவங்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்ற ஆரம்ப நிலையில் உணருகின்ற குழந்தை போன்ற பெண் தெய்வம் ஆவாள். அவள் சிறப்பான சொல்லை சொல்லும் மழலைப் பேச்சை உடையவள். மிகவும் அழகான உடைகளையும் ஆபரணங்களையும் அணிந்தவள். அவளைத் தஞ்சம் என்று எண்ணி அவளது மேன்மையான திருவடிகளை போற்றி வணங்குபவர்களுக்கு பேரின்பத்தை வழங்கும் இனிமையான சொல்லை அளித்து அருளுவாள் என்று அவளை அறிந்தவர்கள் சொல்வார்கள்.
கருத்து:
செய்வதற்கு மிகவும் அரிதான தவங்களைச் செய்பவர்களுக்கு அவர்களை வழிநடத்துகின்ற இறைவியின் ஆரம்ப நிலையில் மென்மையான ஒலி கேட்கும். இந்த ஒலியானது தவம் செய்த சாதகர்களை அவள் அணியும் அழகிய ஆடை அணிகலன்களாக இருந்து காக்கின்றது. இந்த இறைவின் திருவடிகளை போற்றி வணங்குபவர்களுக்கு உச்ச நிலையில் அவர்களுக்கு பேரின்பத்தை அருளும் அவளின் ஒலி கேட்கும். இதை அறிந்து உணர்ந்தவர்கள் அதை தகுதியானவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள்.