பாடல் #1097: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்று மிரண்டு மொருங்கிய வுள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடுஞ் சாற்றியே.
விளக்கம்:
பாடல் #1096 இல் உள்ளபடி பிரகாசமாக சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருக்கும் வயிரவியானவள் நீல நிற திருமேனியுடன் அடியவர்களின் உள்ளத்தில் இருக்கும் இருளுக்குள் இருளாகவே வீற்றிருக்கின்றாள். எவரொருவரின் மனமும் வாக்கும் உடலும் ஒன்றாக இருக்கிறதோ அவரின் உள்ளத்திற்குள் இறைவனுடன் இறைவியும் சேர்ந்து புகுந்து அங்கேயே வீற்றிருந்து அருள் புரிகின்றாள். அவளுடைய நன்மை தரும் அருளை அடைய விரும்பும் உயர்ந்தோர் அவளை தேடி அடைந்து வயிரவியின் மந்திர செபத்தை சமர்ப்பணம் செய்வார்கள்.
கருத்து: மனம் வாக்கு உடல் ஒன்றாக இருப்பது என்பது மனதை ஒருநிலைப் படுத்தி சிதாகாய மந்திரத்தை செபித்து நேத்திர முத்திரையை செய்யும் போது பாடல் #1096 இல் உள்ளபடி தானாகவே விரிந்து அமைந்த சங்கு முத்திரையுடன் சமர்ப்பணம் செய்தால் இறைவனும் இறைவியும் அவர்களின் உள்ளத்திற்குள் ஒன்றாக வீற்றிருந்து மழை போல அருளை வழங்குவார்கள்.
குறிப்பு: நீல நிறத்தைக் கொண்ட திருமேனி என்பது மழை போல வரங்களை அள்ளித் தருகின்ற தன்மையைக் குறிக்கும். இருளுக்குள் இருளாகவே வீற்றிருக்கிறாள் என்பது அடியவர்களின் உள்ளத்தில் இருக்கும் இருளிலும் தன்னுடைய நீல நிறத் திருமேனியுடன் வீற்றிருந்து மழை போல அருளைத் தருகிறாள் என்பதைக் குறிக்கும். உயர்ந்தோர் என்பது இறையருளைப் பெற வேண்டும் என்று சாதகம் செய்து தம்மைப் பக்குவப் படுத்திக் கொண்டவர்கள் ஆகும்.