பாடல் #979

பாடல் #979: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமு மாகுந்
தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே
அருள்தங்கி யச்சிவ மாவது வீடே.

விளக்கம்:

பாடல் #978 இல் உள்ளபடி மாறிய ‘சிவாயநம’ எனும் மந்திரமே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களாகவும் கிடைப்பதற்கு அரிய யோகமாகவும் ஞானமாகவும் இருக்கின்றது. இறையருளால் இந்த மந்திரத்தை சாதகம் செய்து கைவரப்பெற்ற சாதகர்கள் தமக்கு கிடைத்த அருள் காட்டிய வழிபடியே அந்த அருளை நிலைபெறச் செய்து தாமே சிவமாவது முக்தியாகும்.

பாடல் #980

பாடல் #980: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்
நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்
வஞ்சக மில்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்ச மிதுவென்று சாற்றுகின் றேனே.

விளக்கம்:

பாடல் #979 இல் உள்ளபடி மாறிய ‘சிவாயநம’ மந்திரத்தின் உண்மையை உணர்ந்த சாதகர்களின் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐந்து மலங்களும் நீங்கி அவர்களின் நெஞ்சத்திற்குள் முழுவதும் சிவசக்தியே நிரம்பியிருக்கும். அவர்களுக்கு எதிர்ப்பானது எதுவும் இல்லை உடலுக்கும் எப்போதும் அழிவு இல்லை. இதுவே இறைவனை சரணடையும் வழியென்று எடுத்துரைக்கின்றோம்.

பாடல் #981

பாடல் #981: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகுஞ்
சிவாயவொ டவ்வுந் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.

விளக்கம்:

பாடல் #980 இல் உள்ளபடி ‘சிவாயநம’ எனும் மந்திரத்தில் உள்ள ‘சிவாய’ உடன் ‘அவ்’ சேர்த்து ‘சிவாயஅவ்’ என்று அதன் பொருளை தெளிவாக அறிந்து வாயால் உச்சரிக்காமல் உள்ளத்திற்குள் செபித்தால் அந்த மந்திரமே சாதாகரின் உள்ளத்தில் இறைவனின் திரு உருவமாக இருக்கும். அப்படி உள்ளத்திற்குள் மந்திர வடிவாக இறைவன் வீற்றிருந்தபின் மலமாசுகள் அகன்று இறைவனை உணர்ந்த சாதாகர்கள் தாமே மந்திர வடிவான இறைவனாக இருக்கிறார்கள்.

குறிப்பு: ‘சிவாய அவ்’ என்று பாடலில் இருந்தாலும் இந்த மந்திரத்திற்கான பீஜ மந்திரம் பாடல் #957 இல் உள்ளபடி ‘சிவாய ஔ’ ஆகும்.

பாடல் #982

பாடல் #982: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஒகார முடனே ஒருகா லுரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே.

விளக்கம்:

‘சிவாய’ எனும் மந்திரத்தோடு ‘நம’ சேர்த்து ‘சிவாயநம’ எனும் மந்திரத்தை மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும் போதும் வெளிவிடும் போதும் மூச்சுக்காற்றோடு சேர்த்து அதற்கு முன்பு ‘ஓம்’ சேர்த்துக் கொண்டு மனதிற்குள் செபித்து வந்தால் மாயையின் தலைவனாகிய இறைவன் சாதகரின் உடலையே தனக்கு தகுதியான வீடாக்கி வீற்றிருப்பான்.

பாடல் #983

பாடல் #983: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முத லுள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முத லாகுஞ் சதாசிவந் தானே.

விளக்கம்:

‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை பாடல் #962 இல் உள்ளபடி ஓரெழுத்து மந்திரமாக உணர்ந்து செபித்துக் கொண்டிருந்தால் நினைத்த செயல் கைகூடும். ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை செபித்து வர கொடிய வல்வினைகளும் பிறவித்துயரும் போகும். ‘சிவாயநம’ மந்திரத்தை உள்ளத்துக்குள்ளே உணர்ந்து அறிந்தவர்களுக்கு சதாசிவ பரம்பொருளே வெளிப்பட்டு அருள் புரிவார்.

பாடல் #984

பாடல் #984: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நவமுஞ் சிவமும் உயிர்பர மாகும்
தவமொன் றிலாதன தத்துவ மாகுஞ்
சிவமொன்றி யாய்பவ ராதர வால்அச்
சிவமென்ப தானெனுந் தெளி வுற்றதே.

விளக்கம்:

‘நமசிவாய’ ‘சிவாயநம’ ஆகிய இரண்டு மந்திரங்களுமே உயிர்கள் சிவமாவதற்குரிய மந்திரமாகும். இந்த ஐந்தெழுத்துக்கள் நிலைபெற்ற இறைவனின் திருவடிப்பேற்றைத் தரும் மெய்யுணர்வு ஆகும். இந்த மெய்யுணர்வு பெற்று சிவத்துடன் சேர்ந்த ஐந்தெழுத்தின் உண்மையால் பேரன்பு பூண்டவர்கள் தானும் அவனும் வேறில்லை என்னும் ஞானத் தெளிவு உண்டாகி தானே சிவமாகத் திகழ்வார்கள்.

பாடல் #985

பாடல் #985: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கூடிய எட்டும் இரண்டுங் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்
தேடி அதனைத் தெளிந்துஅறி யீரே.

விளக்கம்:

சாதகர்கள் தேடுகின்ற இறைவனை தமக்குள்ளேயே அறிவு வடிவமாக உணர்ந்து அந்த அறிவைப் பெறுதற்கு அகார உகாரங்களின் கூட்டாகிய ‘ஓம்’ எனும் மந்திரத்தை தியானித்தால் இறைவனே குருவாக நின்று வழிகாட்டுவார். அவரின் வழிகாட்டுதலின் படி இதுவரை தம்மோடு மாறுபட்டுப் போராடி வந்த ஐந்து புலன்களும் தம் வயப்பட்டு துணைசெய்து நிற்கும். ஐந்து புலன்களையும் தம் வயப்படுத்த தேடிக்கொண்டிருந்த வழியை இவ்வாறு தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

பாடல் #986

பாடல் #986: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

விளக்கம்:

எட்டு என்பது அகராமாகிய சிவம். இரண்டு என்பது உகாரமாகிய சக்தி. இருமூன்றும் நான்கும் சேர்ந்த பத்து என்பது யகாரமாகிய உயிர். குறிப்பு மொழியால் உணர்த்தப்பட்ட இப்பொருள்களை அனுபவமாக உணராதவர்கள் ‘அ, உ, ய’ எனும் எழுத்துக்களை அறியத் தொடங்கும் தொடக்க அறிவுகூட இல்லாதவரேயாவர். சாதகர்கள் இந்த எழுத்துக்களின் உட்பொருளை உணர்வதன் மூலம் தன்னை அறிந்து சதாசிவத்தை அடையும் உபாயத்தை உணர்த்துவதே இந்த ஞானப் பாதையாகும்.

பாடல் #987

பாடல் #987: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எட்டு வரையின்மே லெட்டு வரைகீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டுமிட்டுச்
சிட்ட அஞ்செழுத்துஞ் செபிசக் கரமே.

விளக்கம்:

இடமிருந்து வலமாக எட்டு கோடுகளும் மேலிருந்து கீழாக எட்டு கோடுகளும் வரைந்தால் அதற்குள் நாற்பத்தொன்பது கட்டங்கள் வரும். இதில் நடுவிலுள்ள கட்டத்தில் இறைவனின் வடிவமான ‘ஓம்’ எழுத்தை எழுதி அதைச் சுற்றியுள்ள நாற்பத்தெட்டு கட்டங்களிலும் ‘சிவாயநம’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை மாற்றி மாற்றி எழுதி அமைத்தால் வரும் சக்கரம் செபிப்பதற்கு உகந்ததாகும். (இந்த சக்கரத்தின் அமைப்பு அடுத்த பாடலிலும் தொடரும்)

பாடல் #989

பாடல் #989: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

பட்டன மாதவ மாறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தை முறைப்படி ‘ஓம் சிவாயநம’ என்ற ஆறெழுத்து மந்திரத்தை செபித்து சாதகம் செய்து சதாசிவமூர்த்தியை அடைபவர்கள் தான் எனும் நினைப்பை அறுத்து இறைவனே சரணாகதி என்று இருக்கின்றார்கள். அளவில்லாத இறைவனின் பெருமைகளை எம்மால் இயன்றவரை எடுத்துரைத்து போற்றிப் புகழ்வதைத் தவிர வேறொன்றும் யாம் அறியேன்.