பாடல் #268

பாடல் #268: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யிற் பசுவது வாமே.

விளக்கம்:

உலகில் உள்ள அனைத்தும் உருவாவதற்கும் அழிந்து போவதற்கும் காரணமான தூய்மையான புகழுடைய இறைவன் நீதிநெறி தவறி அறம் ஆகியவற்றை கடைபிடிக்காமல் வாழும் உயிர்களுக்கு இன்பத்தை நினைத்து பார்க்கக்கூட விடமாட்டான். பசி என்று வருபவர்களுக்கு உணவு அளித்து இல்லை என்று வருபவர்களுக்குத் தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவ வேண்டும் என்பதும் இன்பம் தரக்கூடியவை என்பதை உணர்ந்து அவற்றை செய்து வாழுங்கள். அப்படி இல்லாமல் பிற உயிர்களுக்குத் துன்பத்தைத் தரும்படியான காரியங்களைச் செய்து வாழ்வது மிருக வாழ்க்கையைப் போலத்தான் இருக்கும்.

பாடல் #269

பாடல் #269: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்குஎய்த விற்குறி யாமே.

விளக்கம்:

பணக்காரர் என்று சிலரும் ஏழைகள் என்று பலரும் இருக்கும் வாழ்க்கையில் பணக்காரர்களிடமிருந்து பணம் பெறுவதற்காக அவர்களைப் பேரறிவு கொண்டவர்கள் என்று போற்றிப் புகழாமல் முக்தி கொடுக்கக்கூடிய இறைவனை போற்றி வழிபடுங்கள். அவ்வாறு செய்வது வேடன் தனக்கு வேண்டியதைக் குறிபார்த்து சரியாக அம்பு எய்து குறிதவறாமல் அடிப்பது போன்றது.

கருத்து: வில்லிலிருந்து குறிபார்த்து அம்பு விட்டு வேண்டியதை எடுத்துக்கொள்வது போல உயிருக்கு தேவையானது எது என்று குறிபார்த்து அதைத் தரக்கூடியவரைப் போற்றி வழிபட்டு வாழவேண்டும்.

பாடல் #251

பாடல் #251: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சிவ தத்துவ ராவர்கள்
தாமறி வாருக்குத் தமர்பர னாமே.

விளக்கம்:

நான் என்பது எது என்பதை அறிந்தவர்கள் இறைவனின் திருவடிகளைத் தினமும் வழிபடுபவர்களாகவும் தரும வழிகளை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பவர்களாகவும் சிவ தத்துவத்தின் உருவமே தாமாக இருப்பவர்களாகவும் சிவபெருமானையே தமது உறவினராகவும் கொண்டு இருப்பார்கள்.

பாடல் #252

பாடல் #252: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

விளக்கம்:

தினந்தோறும் இறைவனை வழிபட்டு அவனுக்கு படைக்க அன்போடு எந்தவொரு பச்சை இலையையோ வைத்தல் தினந்தோறும் பசுவின் பசிபோக்க ஒரு கட்டு புல்லை கொடுத்தல் தினந்தோறும் தினமும் சாப்பிடும் போது ஒரு கைப்பிடி உணவு தானம் செய்து விட்டு சாப்பிடுதல் தினந்தோறும் தாம் சந்திப்பவர்களிடம் அன்புடன் இனிமையாக பேசுதல் போன்றவை அனைவரும் எளிதில் செய்யக்கூடிய தருமங்களாகும்.

பாடல் #253

பாடல் #253: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின்பெருமை)

அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற்
பற்றிவந்து உண்ணும் பயனறி யாரே.

விளக்கம்:

உலகப் பற்றுக்களை விட்டுவிட்டு இருக்கும் ஞானிகளின் பசியாற உணவு வழங்குதல் என்பது மிகச் சிறந்த தருமமாகும். இப்படி பல தருமங்களை கல்வி முறைகளில் ஆசிரியர் போதிக்கக் கற்றுக்கொண்டு ஆனால் தானம் ஏதுவும் செய்யாமல் தமக்கு அறிவு ஞானம் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மனிதர்கள் கிணத்தடியிலும் குளக்கரையிலும் பற்றுக்களை அறுத்த ஞானிகள் பசியோடு இருக்கின்றார்களா என்று தேடிப்பார்த்து அவர்களைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்து சாப்பிட வைப்பதால் தமக்கு கிடைக்கும் மிகப் பெரிய பயனை அறியாமல் இருக்கின்றனர்.

பாடல் #254

பாடல் #254: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து
இழிக்கஅன் றென்செய்வீர் ஏழைநெஞ் சீரே.

விளக்கம்:

மும்மலங்களாகிய அழுக்குகளை ஓட்டிவிடும் உண்மை ஞானத்தை அறிந்து அந்த அறிவால் உள்ளத்தில் இறைவனை நிரப்பமாட்டீர்கள். கல்வியும் செல்வமும் நிறைந்து இருந்த நாட்களிலேயே தருமங்கள் செய்யாமல் விட்டுவிட்டீர்கள். தினமும் எழுந்து கண் விழித்திருப்பதனால் என்ன பயன்? ஒரு நாள் கண் மூடிய பிறகு சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தீ வைத்து உடல் முழுவதும் தீயின் வெப்பம் பரந்து சுட்டெரிக்கும் நேரத்தில் என்ன செய்யப் போகின்றீர்கள்? வாழ்க்கை முழுவதும் தருமம் செய்யும் பரந்த மனது இல்லாமல் ஏழை மனதாகவே வாழ்ந்துவிட்டீர்கள்.

பாடல் #255

பாடல் #255: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

தன்னை அறியாது தான்நல்லன் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மையுடன் நல்ல தவஞ்செய்யும் நீரே.

விளக்கம்:

சர்வ வல்லமையுடன் உயிரை உயிரிலிருந்து பிரிக்கும் எமன் வரும் பொழுது தன்னை யாரும் அறியாமல் எடுக்க வந்த உயிர் நன்மை செய்ததா தீமை செய்ததா என்று எண்ணாமல் அந்த உயிர் உலகில் இல்லாவிட்டால் உயிரைச் சார்ந்தவர்கள் என்ன கதியாவார்கள் என்று பார்க்காமல் அது இளையவரா முதியவரா என்று ஆராயாமல் உயிரை எடுத்துச் சென்று விடுவார். சர்வ வல்லமையான எமன் வருவதற்கு முன்பு உயிரை உடலில் நிலைபெறச் செய்து இறைவனை அடையும் நல்ல தருமங்கள் நிறைந்த தவங்களை நீங்கள் செய்துவிடுங்கள்.

பாடல் #256

பாடல் #256: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி யாரே.

விளக்கம்:

உலகப் பற்றுக்களை விட்ட ஞானியர்கள் செல்லும் வழியில் அவர்களின் சுற்றத்தார் உறவினர் என்று யாரும் இருப்பதில்லை. அறம் அறிந்த ஞானிகளுக்கு அறத்தின் அளவுகள் தெரியாது. அறம் செய்யாமல் வாழ்ந்தவன் இறந்து செல்லும் வழியில் எந்தவொரு இன்பமும் அவனுக்கு கிடைப்பதில்லை. அறத்தை மறந்து வாழ்ந்தவன் இறந்து செல்லும் வழியில் துணையாக சிவபெருமான் வரமாட்டான்.

குறிப்பு: உலகப் பற்றுக்களை விட்டு அறத்தை அறிந்த ஞானியர்களுக்கே அறத்தின் அளவுகள் தெரியாது என்றால் அறம் என்பது எவ்வளவு பெரியது? அந்த அறத்தை அறிந்து வாழ்நாள் முழுவதும் செய்தால் இறைவனே துணையாக வருவான் என்றால் அறம் எந்த அளவு உயர்ந்தது என்பதை எண்ணி அறத்தின் வழியே வழியே நடந்து செல்லுங்கள்.

பாடல் #257

பாடல் #257: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

தான்தவம் செய்வதாம் செய்தவத் தவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்காள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வ மென்று நமனும்வரு வானே.

விளக்கம்:

முன்பிறவியில் செய்த அறத்தினாலும் தவத்தினாலும் தான் இப்பிறவியிலும் மனிதப் பிறவி கிடைத்திருக்கின்றது. இந்த உண்மையை தன் அறிவின் மூலம் அறிந்து அறிவையே தெய்வமாக எண்ணி அந்த அறிவின் சொல்படி இப்பிறவியிலும் அற வழிகளிலும் தவ வழிகளிலும் நடப்பவர்கள்தான் மனிதர்கள். உடலே தெய்வம் என்று எண்ணி ஆசைகளுக்கு அடிமையாகி தருமத்தின் வழியில் செல்லாமல் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும் நானே தெய்வம் என்று எமதருமன் உயிரை எடுக்க வந்து நிற்பானே தவிர இறைவன் வர மாட்டான்.

பாடல் #258

பாடல் #258: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே.

விளக்கம்:

வினையின் பயனால் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவியானது ஒரு பெரும் கடல் போன்றது. இந்த வினை அவ்வளவு சீக்கிரத்தில் தீர்ந்துவிடுவதில்லை. இந்த வினையாகிய பிறவிக்கடலை நீந்திச் சென்று இறைவனை அடையும் வரை சோர்வு வராமல் இருக்க இரண்டு வழிகள் உண்டு. அற வழிகளும் தவ வழிகளும்தான் அந்த இரண்டு வழிகள். அறத்தை கடைபிடிப்பவர்களுக்கும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் பிறவியில்லாத மேன்மையான முக்திக்கு வழிகாட்டி துணையாக இருப்பான் தூய்மையான புகழுடைய இறைவன்.