பாடல் #434

பாடல் #434: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

காண்கின்ற கண்ணொளி காதல்செய் யீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியைப்
பூண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கையின் செயல்அணை யாரே.

விளக்கம்:

உயிர்களின் மேலுள்ள மாபெரும் அன்பினால் உயிர்களுடனே இருந்து அவர்களின் கண்ணில் காணும் ஒளியாகவும் காட்சிகளைக் காட்டும் ஒளியாகவும் இருக்கின்றான் இறைவன். ஆதியாக இருக்கும் இறைவனே அனைத்து உயிர்களின் உருவத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருக்கின்றான். உண்ணும் உணவை நாக்கினால் சுவைத்து அதன் இன்பத்தை நெஞ்சத்தில் உணர்வதைப்போலவே தமது தலையின் உச்சியில் இறைவனாக இருக்கும் அமிர்தத்தை நெஞ்சத்தில் உணராத உயிர்கள் பேரின்பத்தைக் கொடுக்கும் அமிர்தத்தின் செயலை உணராமல் இருக்கின்றார்கள்.

உட்கருத்து: உண்ணும் உணவை நாக்கினால் சுவைத்து அதன் இன்பத்தை நெஞ்சத்தில் உணர்வதைப்போலவே கண்ணில் காணும் ஒளியாகவும் காட்சிகளைக் காட்டும் ஒளியாகவும் இருப்பவன் இறைவன் என்பதையும் நெஞ்சத்தில் உணர்ந்து விட்டால் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருப்பவன் இறைவன் என்பதையும் தலை உச்சியில் பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவனாக இருக்கும் அமிர்தத்தையும் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் உயிர்கள் உணவு உண்ணும் ருசிக்கு ஆசைப்பட்டு அதனால் கிடைக்கும் வினையின் காரணமாக மறைக்கப்பட்டு உணராமல் இருக்கின்றார்கள்.

பாடல் #433

பாடல் #433: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே.

விளக்கம்:

இறைவன் உயிர்களை படைக்கும் தொழிலுக்கு காரியம் புரியும் தெய்வங்களாகிய உருத்திரன் மாபெரும் தவம் புரிபவனாகிய திருமால் வேதங்கள் ஓதி உயிர்களையும் அவை உலகத்தில் அடையும் இன்பத்தையும் படைத்த பிரம்மன் ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து இறைவனின் கட்டளைக்கு ஏற்ப செய்த வலிமை மிக்க இரும்பாலான இயந்திரம் போன்ற உடலுக்குள் மாயையால் மறைத்து இறைவன் வைத்த ஒரு மாபெரும் பரிசு இருக்கின்றது. அதை உயிர்கள் அறியவில்லை.

உட்கருத்து: உலகத்தில் உயிர்களை படைத்த இறைவன் அதன் வினைகளை அனுபவித்துக் கழிக்கும் வரை அந்த உயிர்களைப் பாதுகாக்க இறைவனே மாபெரும் பரிசாக உயிர்களின் உள்ளத்திற்குள் இருக்கின்றதை மாயையால் மறைத்து அருளுகின்றான்.

பாடல் #432

பாடல் #432: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

இன்பப் பிறவி படைத்த இறைவனும்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாக்குமே.

விளக்கம்:

இறைவனோடு இருந்த ஆன்மாக்கள் ஆசைப்பட்டுவிடும் போது அந்த ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டி உலகத்தில் பிறவி எடுக்கும்படி உயிர்களாகப் படைக்கின்றான் இறைவன். அந்த உயிர்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளும் போது சில வினைகளும் சேர்த்து விடுகிறது. இந்த வினைகளை அனுபவிக்க வேண்டி உலகப்பற்று குடும்பம் பாசம் என்னும் துயரத்துக்குள் உயிர்களை மாயையால் பூட்டி அடைத்துவிடுகின்றான். எலும்பை முழுவதும் தோல் தசைகளால் மூடி அந்த எலும்போடு ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் இந்த உலக உடம்பானது உயிர்களின் பிறவிக்கு காரணமாகிய வினைகள் முடியும் வரை ஒன்றாகச் சேர்ந்து இருக்கும். இந்தப் பிறவியின் வினைகள் முடிந்ததும் உயிரை முடிப்பதாக இருக்கின்றது.

உட்கருத்து: ஆன்மாக்கள் ஆசையினால் இன்பம் பெறுவதற்காகப் பிறவி எடுப்பதால் அந்த இன்பத்தை அனுபவித்து தீர்க்கும்வரை பேரின்பத்தை மறைத்து அருளும் இறைவன் அந்த ஆன்மாக்கள் எடுத்த பிறவியில் இன்பத்தை அனுபவிப்பதினால் கிடைக்கும் வினைகளையும் அதன் விளைவுகளால் ஏற்படும் துன்பத்தையும் அந்தத் துன்பத்திற்குக் காரணமாக இருக்கும் உலகப் பற்றுக்களையும் சேர்த்து பிறவிக்குள் அடைத்துவிடுகின்றான். இதில் எலும்பும் தோலும் போர்த்திய உடலே சிறையாகவும் உலகப் பற்று எனும் மாயை பூட்டாகவும் வினைகள் சாவியாகவும் இருக்கின்றது. எப்போது உயிர்கள் தமது வினைகளை அனுபவித்துக் கழித்து முடிக்கின்றதோ அப்போது இந்தப் பூட்டு திறந்து உலகத்தில் அதுவரை ஆன்மா அனைத்தையும் அனுபவிக்க உதவிய உடலையும் உயிரையும் அழித்து ஆன்மா விடுதலை பெறுகின்றது.

பாடல் #431

பாடல் #431: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனது உருவறி யாதே.

விளக்கம்:

ஒவ்வொரு உயிரின் உள்ளத்திற்குள்ளும் கண்டு உணரக் கூடிய ஜோதி உருவமாக இறைவன் வீற்றிருக்கின்றான். அவன் உயிர்களின் உள்ளத்தை விட்டு ஒரு அடி கூட விலகி நிற்பதில்லை. எப்போதும் உயிர்களின் உள்ளத்துடனே சேர்ந்து இறைவன் இருந்தாலும் மாயையினால் மறைக்கப்பட்ட உயிர்களின் உள்ளம் அவனது உருவத்தை அறியாது.

பாடல் #430

பாடல் #430: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயம்வைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாயுணர்வு ஆரவைத் தானே.

விளக்கம்:

இறைவனிடமிருந்து தோன்றிய ஆன்மா தனது ஆசைகளை அனுபவித்துத் தீர்த்துக் கொள்ள செய்யும் செயலினால் சேரும் வினைகளைத் தீர்க்க மாயையை வைத்து அந்த வினைகள் தீர உடலையும் ஆன்மாவிற்கு கொடுத்துப் பிறவி எடுக்க வைக்கின்றான். பிறவி எடுத்த ஆன்மா வினைச் சுழலில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது என்கிற கருணையினால் உலகத்திலுள்ள அனைத்திலும் கலந்து இருக்கும் இறைவன் தன்னை அடையும் வழிகள் அறிந்த கலந்து குருவாய் இருக்கும் அடியார்களோடு சேர வைத்து தன்னை எப்போதும் நினைக்கக் கூடிய எண்ணத்தை வைக்கின்றான். இறைவனின் சிந்தனையிலேயே இருப்பதால் மாயை அழிந்து நான் என்கின்ற அகங்காரம் அழிந்து ஆன்மா மீண்டும் தம்மை வந்து அடையும் மெய்யுணர்வு வரச் செய்கிறான் இறைவன்.

பாடல் #429

பாடல் #429: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

பாழே முதலா எழும்பயிர் அவ்விடம்
பாழே அடங்கினும் பண்டைப்பாழ் ஆகாவாம்
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.

விளக்கம்:

சேற்றுச் சகதியில் விதைத்த விதை அந்தச் சகதியையே ஆதாரமாகக் கொண்டு அதனிடமிருந்து வெளிப்பட்டு பயிராக மேலெழும்பி வருவதைப் போல அனைத்திற்கும் பழைமையான இறைவனிடமிருந்து அவனையே முதலாகக் கொண்டு அவனிடமிருந்து வெளிப்பட்டு உலகத்தில் கருவாக வந்து பிறக்கின்றது ஆன்மா. விளைந்த பயிர் பயன்படுத்தப்பட்ட பிறகு அழிந்து திரும்பவும் மண்ணோடு மண்ணாகவே ஆகிவிட்டாலும் அது எப்படி முன்பு விதைத்த விதைக்குள் மீண்டும் போய் சேர முடியாதோ அதுபோலவே உலகத்தில் கருவாக வந்து பிறந்த ஆன்மா உலகத்தில் வாழ்ந்து இறந்த பிறகும் திரும்பவும் இறைவனிடமே சென்று சேர்ந்துவிட முடியாது. இதனாலேயே ஆன்மாவுக்குத் தனித்த வாழ்வு என்பது இல்லாத சங்காரச் சுழற்சியில் தள்ளப்பட்டு மீண்டும் பிரம்மனால் கருவாக பிறந்து திருமாலால் காக்கப்பட்டு வளர்ந்து மறுபடியும் சங்காரத்தில் இறந்து கொண்டே இருக்கும். எப்போது மண்ணில் பிறந்த பயிர் மண்ணிலே கலந்து அந்த மண்ணும் ஒரு நாள் மறைந்து போகின்றபோது அந்தப் பயிரின் தடயமே அழிந்து போய்விடுவது போல உலகத்தில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இறக்கும் ஆன்மா எப்போது வினைகளை முடித்துத் தான் என்கிற தடயத்தை (ஆணவ மலம்) முற்றிலும் துறந்து மாயைகளை நீக்கி உண்மையை உணருகின்றதோ அப்போது அது தோன்றிய இறைவனிடமே சென்று அடங்கிவிடும்.

உட்கருத்து: ஆன்மாவைப் பயிராகவும் இறைவனை சகதியாகவும் உருவகிக்கும் திருமூலர் இந்த உவமையின் மூலம் சங்காரத்தின் தத்துவமும் அது ஏன் நிகழ்கிறது என்கிற விளக்கத்தையும் தந்து அருளுகிறார். இறைவனிடமிருந்து முதலில் தோன்றிய ஆன்மா உலகத்தில் பிறவி எடுத்து வினையினால் பிறவிச் சுழலில் சிக்கித் தன் வினைகளையெல்லாம் முடித்துவிட்டு பிறகு இறைவனிடமே வந்து அடங்கிவிடுவதே சங்காரத்தின் தத்துவமும் அதன் பயனுமாகும்.

பாடல் #428

பாடல் #428: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றுதல்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
சுத்தசங் காரமுந் தோயாப் பரனருள்
வைத்தசங் காரமும் நாலாம் மதிக்கிலே.

விளக்கம்:

உயிர்கள் தங்களது துன்பங்களை மறந்து நீண்ட நேரத்திற்கு இளைப்பாற வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் நித்த சங்காரம் நிகழ்கிறது. ஆரம்பம் இல்லாத கனவு நிலையில் உலக மாயைகளெல்லாம் மறைந்து எண்ணங்களும் இல்லாமல் உயிர்கள் சிறிது நேரமாவது இளைப்பாற வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் வைத்த சங்காரம் நிகழ்கிறது. இறைவனது திருவருளை மட்டுமே எண்ணிக் கொண்டு மற்ற அனைத்தையும் விட்டு விலகி ஆன்மா திரும்ப வர வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் சுத்த சங்காரம் நிகழ்கிறது. அனைத்து வினைகளையும் கழித்த ஆன்மா இனி தனித்தன்மை இல்லாமல் உண்மைப் பொருளான இறைவனுடனே கலந்துவிட வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் உய்த்த சங்காரம் நிகழ்கிறது. இறைவனது கருணையை மதித்துப் பார்த்தால் இந்த நான்கு சங்காரங்களும் உயிர்களின் நன்மைக்காகவே இறைவன் வைத்திருக்கின்றான்.

பாடல் #427

பாடல் #427: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரங் கருஇடர் நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
வைத்தசங் காரம் கேவலம் ஆன்மாவுக்கு
உய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.

விளக்கம்:

உலகத்தில் பிறவி எடுக்க தாய் வயிற்றில் கருவாகப் பிறந்த அனைத்து உயிர்களுமே தங்களின் வினைப் பயனாகிய துன்பங்களையும் சேர்த்துக் கொண்டுதான் பிறக்கின்றன. இறைவனது கருணையினால் அந்த துன்பங்கள் சிறிது நேரமாவது நீங்கித் தம்மை மறந்து உயிர்கள் இருக்கும் தூக்க நிலை தினமும் நிகழும் நித்த சங்காரமாகும். உடலை விட்டு உயிர் பிரிந்து ஆன்மா மட்டுமே இருக்கின்ற நிலை சுத்த சங்காரமாகும் ஸ்தூல உடலும் சூட்சும உடலும் பிரிந்து இருக்கும் கனவு நிலையில் ஆன்மா மாயையிலேயே மூழ்கி கேவலப்பட்டு இருக்கின்ற நிலை வைத்த சங்காரமாகும். வினைகளையெல்லாம் தீர்த்துவிட்ட உயிர் ஸ்தூல உடலை விட்டுப் பிரிந்து சூட்சும உடலும் அழிந்து தனித்தன்மையோடு இருந்த ஆன்மா உண்மைப் பொருளான இறைவனுடனே இரண்டறக் கலந்துவிடும் போது நான் எனும் தனித்தன்மை முற்றிலும் அழிந்து சிவமாக மாறும் நிலை உய்த்த சங்காரமாகும்.

பாடல் #426

பாடல் #426: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவனருள் உண்மையே.

விளக்கம்:

நித்த சங்காரத்தில் உயிர் ஸ்தூல சூட்சும சரீரங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். வைத்த சங்காரத்தில் மாயையுடன் கனவு நிலையில் உயிர் ஸ்தூல உடலை விட்டு விலகி சூட்சும உடலுடன் தொடர்பு கொண்டிருக்கும். சுத்த சங்காரத்தில் மனம் எந்த எண்ணமும் இல்லாமல் செயல் ஒன்றும் இல்லாது இருக்கும். உய்த்த சங்காரத்தில் சிவன் அருளில் லயித்து இருக்கும். இதுவே உண்மையான சங்காரம் ஆகும்.

பாடல் #425

பாடல் #425: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரத் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.

விளக்கம்:

நித்த சங்காரம் என்பது உயிர்கள் உறங்கும் போது தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முற்றிலும் அறியாத நிலையாகும். வைத்த சங்காரம் என்பது உயிர்கள் இளைப்பாற வேண்டும் என்று உறங்கும்போது ஏற்படும் கனவு நிலையாகும். சுத்த சங்காரம் என்பது உயிர்கள் உடலை விட்டு உயிர் பிரிந்த ஆன்மா ஆணவ மலத்திலேயே இருந்து பிறக்கவும் முடியாமல் இறைவனிடமும் செல்ல முடியாமல் எந்தச் செயலும் செய்ய முடியாமல் கிடக்கும் கேவலமான நிலையாகும். உய்த்த சங்காரம் என்பது இறைவனது திருவருளால் ஆன்மா உண்மைப் பொருளான இறைவனுடனே சென்று இரண்டறக் கலந்துவிடுகின்ற நிலையாகும்.

உள்விளக்கம்: நித்த சங்காரம் – தூங்கும் போது நான் என்ற எண்ணம் அழிந்திருந்த நிலை.
வைத்த சங்காரம் – தூங்கும் போது கனவில் எல்லாம் தன்னுடையது போல் இருக்கும் ஆனால் விழித்ததும் எதுவும் தனது இல்லை என்று அனைத்தும் அழிந்த நிலை.
சுத்த சங்காரம் – உடல் அழிந்த பின் ஆத்மா தான் என்ற அகங்காரத்தினால் உடலெடுக்கவும் முடியாமல் இறைவனுடன் கலக்கவும் முடியாத நிலை. இதனை கேவலமான நிலை என்று பாடலில் கூறுகிறார்.
உய்த்த சங்காரம் – உடல், உயிர் அனைத்தும் அழிந்து இறைவனுடன் கலக்கும் நிலை.