9-10-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
குருவாக்கு சில சமயங்களில் தவறுகின்றதே இது ஏன்?
முதலாவதாக குருவென ஏற்றுக் கொண்டால் அக்கேள்வியை கேட்க எவ்வித அதிகாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஏற்றபின் சந்தேகங்கள் கூடாது என்பதே விதி. ஏற்கும் முன் சந்தேகங்கள் தோன்றுவது சகஜம். இரண்டாவதாக குருவின் வாக்கு தெய்வ வாக்கு என செப்பக் கண்டால் இங்கு சாட்சாத் குருவானவரே தொட்டும் உரைக்க அவர் காரணமின்றி எவ்வாக்கும் உரைப்பதில்லை. இக்காலங்களில் வாக்கு தவறி விட்டதே என சிலர் துக்கம் காண்பது சகஜ நிலையே. பிற்காலத்தில் எதற்கு செப்பினர் ஏது செப்பினர் என தெளிவாகும். மற்ற ஒன்றும் யாம் இங்கு செப்ப விரும்புகின்றோம். குருவை நாடும் காலத்தில் வினாக்களை கேட்கும் காலத்தில் எப்பொழுதும் குரு உங்களுக்கு சாதகமாக விடை அளித்தல் வேண்டும் அருள் புரிதல் வேண்டும் என்பதே தவறாகின்றது. யாருக்கு என்ன தேவையோ அதனை குரு வழங்குவார். இதில் எக்குறையும் இல்லை. உதாரணமாக சிறுவன் ஒருவனுக்கு வயிற்றுப் போக்கு நிலவி வர அன்னை அவள் அவனுக்கு காரம் கொடுப்பதில்லை. இதைப்போல் காலம் சீர் இல்லையேல் குரு எதையும் அருள மாட்டார். இது வெறுப்பாகவோ விருப்பாகவோ அல்ல இதுவே நீதி என்றும் இங்கு எடுத்துரைப்போம். மேலும் குருவை நாட எத்தகைய வினாக்கள் கேட்க வேண்டும் என்கின்ற வினாவுக்கும் ஒன்றை செப்புவோம். நன்றாக இறைவன் அளித்த சுய புத்திகளை உபயோகித்த பின் விடை கிட்டாமல் நிற்கவே அந்நிலையில் குருவை நாடுதல் வேண்டும் என்கின்ற விதி உண்டு. ஏனெனில் இறைவனின் படைப்பில் சுயபுத்தி உள்ள படைப்பு மனிதப் படைப்பே. இவை பூரணமாக உபயோகித்த பின் வழி தெரியாது நிற்க குருவின் அருளை நாட உறுதியாக உங்களுக்கும் தெளிவு கிட்டும்.