பாடல் #684

பாடல் #684: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாங்
கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்
பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே.

விளக்கம்:

நமக்குள் அனைத்தையும் செயல்படுத்தும் சதாசிவ சக்தியின் மேல் மனதை ஒருமுகப்படுத்தி வைத்து அதிலேயே லயித்து அனைத்து தத்துவங்களாலும் பாதிக்கப்படாமல் யோகப் பயிற்சியில் ஒரு வருடம் இருந்தால் அந்தத் தத்துவங்களை வெல்லலாம். அவ்வாறு அனைத்து தத்துவங்களையும் வென்றவருக்கு ஈசத்துவம் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைத் தன் ஆளுகைக்குட்பட்டுச் செய்தல்) எனும் சித்தி கிடைக்கும்.

கருத்து: சதாசிவ சக்தியின் மேல் ஒரு வருடம் மனதை ஒருமுகப்படுத்தி இருந்தால் ஈசத்துவம் எனும் சித்தி கிடைக்கும்.

பாடல் #685

பாடல் #685: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே.

விளக்கம்:

புருவ மத்தியிலுள்ள ஆக்ஞா சக்கரத்தில் பேரொளியைக் கண்ட யோகி அங்கே காணப் பெறுகின்ற சந்திரனது குளிர்ந்த ஒளியாவான். அதன்பின் அந்த சந்திர மண்டலத்தின் பகுதிகளான நெற்றி தலையின் முற்பக்கம், பிற்பக்கம், வலப்பக்கம், இடப் பக்கம், பிரமரந்திரம் ஆகிய அனைத்தையும் ஒவ்வொன்றாக உணர்ந்தால் இறுதியில் அந்த ஆக்ஞா சக்கரத்திலுள்ள சந்திரனாகவே மாறிவிடுவான்.

கருத்து: சந்திர மண்டலத்தை உணர்ந்து பேரொளியைக் கண்டவன் சந்திரனாகவே மாறிவிடுவான்.

பாடல் #686

பாடல் #686: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தானே படைத்திட வல்லவ னாயிடுந்
தானே யளித்திட வல்லவ னாயிடுந்
தானே சங்காரத் தலைவனு மாயிடுந்
தானே யிவனெனுந் தன்மைய னாமே.

விளக்கம்:

ஈசத்துவம் பெற்றவர் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்கள் அனைத்தையும் தன் ஆளுகைக்கு உட்பட்டுச் செய்யக்கூடியவர் ஆவார். அவ்வாறு முத்தொழில்களைச் செய்வதால் சதாசிவத்தின் தன்மையைப் பெறுவார்.

கருத்து: ஈசத்துவம் சித்தியைப் பெற்றவர் சதாசிவத்தின் தன்மையைப் பெற்று முத்தொழில்களை செய்யக்கூடியவர் ஆவார்.

பாடல் #687

பாடல் #687: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தண்மைய தாகத் தழைத்த கலையினுள்
பண்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.

விளக்கம்:

புருவ மத்தியிலுள்ள குளிர்ச்சியான ஆக்ஞா சக்கரத்தின் பேரறிவின் மூலம் உடலெங்கும் பலவாறாக வியாபித்திருக்கின்ற ஐம்பூதங்களையும் கடினப்பட்டு கட்டுப்படுத்தி ஓராண்டு வைத்திருந்தால் அனைத்திற்கும் மேலான உண்மைப் பொருளாகிய சதாசிவத்தை உணரலாம்.

கருத்து: பேரறிவின் மூலம் உடலிலுள்ள ஐம்பூதங்களையும் கட்டுப்படுத்தி ஓராண்டு வைத்திருந்தால் உண்மைப் பொருளை உணரலாம்.

பாடல் #688

பாடல் #688: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெலாந்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.

விளக்கம்:

பாடல் #687 இல் உள்ளபடி உணர்ந்த உண்மைப் பொருளான சதாசிவம் எது என்று பார்த்தால் நல்ல வசித்துவம் எனும் சித்தியாகும். அவ்வாறு வசித்துவம் எனும் சித்தியை அடைந்தவர்கள் தன்னுடைய உயிர் எது என்று உணர்ந்தது போல எல்லா உயிர்களையும் உணர்ந்து தாமே சிவமாகி அந்த உயிர்களோடு கலந்து இருப்பார்கள்.

கருத்து: வசித்துவம் எனும் சித்தி பெற்றவர்கள் சிவ தன்மையை அடைந்து அனைத்து உயிர்களோடும் கலந்து இருப்பார்கள்.

பாடல் #689

பாடல் #689: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
பொன்மைய தாகப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே.

விளக்கம்:

வசித்துவம் எனும் சித்தியைப் பெற்று சிவமாக மாறியபின் சூரியனைப் போன்ற பிராகாசத்துடன் விளங்கும் யோகி அனைத்திற்கும் மேலான உண்மைப் பொருளான சதாசிவத்தை தரிசித்தபின் உலகப் பற்றை விட்டது போலவே உடலின் ஐம்புலன்களின் பற்றையும் விட்டுவிட நன்மை தரும் சதாசிவத்தின் சக்தியை தரிசிக்கலாம்.

கருத்து: வசித்துவம் எனும் சித்திபெற்ற யோகி ஐம்புலன்களின் மேலிருக்கும் பற்றை விட்டுவிட்டால் சதாசிவத்தின் சக்தியை தரிசிக்கலாம்.

பாடல் #690

பாடல் #690: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே.

விளக்கம்:

பாடல் #689 இல் உள்ளபடி சதாசிவத்தின் சக்தியைத் தரிசித்தபின் அச்சக்த்தியைத் தனக்குள்ளேயே உணர்ந்து அதிலேயே மனதை வைத்து ஒரு வருடம் யோகப் பயிற்சி செய்தால் ஏற்கனவே பெற்ற வசித்துவ சித்தியின் மூலம் எல்லா உலகங்களுக்கும் தன் விருப்பம் போல சென்று வருவது மட்டுமின்றி அவ்வுலகங்களில் இருக்கும் எல்லா உயிர்களோடும் கலந்து அந்த உயிர்களை தன்வசம் ஈர்க்கவும் முடியும்.

கருத்து: சதாசிவ சக்தியை ஒரு வருடம் தியானம் செய்தால் எல்லா உலகங்களிலுள்ள உயிர்களையும் தன்வசப்படுத்த முடியும்.

பாடல் #691

பாடல் #691: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிட மெய்திடு மானனாய்
நாமரு வும்ஒளி நாயக மானதே.

விளக்கம்:

பாடல் #690 இல் உள்ளபடி எல்லா உயிர்களையும் தன்வசப்படுத்தும் சக்தியைப் பெற்றபின் உயிர்களைத் தன் விருப்பத்திற்கேற்ப செயல்படுத்தி உலகத்தை மாற்றலாம். ஆனாலும் அனைத்தையும் தன்வசப்படுத்தும் பெருஞ்சக்தியான சதாசிவத்தை ஒளியாக தன் உள்ளத்தில் வைத்திருந்தால் அந்த ஒளியே நம்மை வசப்படுத்தும் சதாசிவமாகிவிடும்.

கருத்து: வசித்துவம் சித்தி பெற்றவர் உலகத்தை தன் எண்ணத்திற்கேற்ப மாற்றும் ஆற்றலைப் பெறுவார்.

பாடல் #692

பாடல் #692: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே.

விளக்கம்:

பாடல் #691 இல் உள்ளபடி சதாசிவமாகிய ஒளியை உணர்ந்தபின் ஆன்மாவின் பிறப்பிடமாகிய சதாசிவம் தமக்குள்ளேயே தழைத்து இருக்கும். உலகப் பற்றுகள் அனைத்தும் தம்மை விட்டு விலகுவதைக் உணர்ந்தபின் தமக்குள் இருக்கும் இருள் அனைத்தையும் விலக்கும் பேரொளியைக் காணலாம்.

கருத்து: உலகப் பற்றுகள் தம்மை விட்டு விலகுவதை உணர்ந்தபின் அனைத்து இருளையும் அகற்றும் பேரொளியைத் தரிசிக்கலாம்.

பாடல் #693

பாடல் #693: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

பேரொளி யாகிய பெரியஅவ் வேட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே.

விளக்கம்:

சகஸ்ரதளத்தின் மேலே இருக்கும் பெரிய தாமரை மலர் போன்ற பேரொளியைத் தரிசிக்கக் கூடிய சக்தியைப் பெற்றவன் தனது மூச்சுக்காற்று ஒரு ஒளியாக மாறி அது பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பதைக் காண முடியும்.

கருத்து: பேரொளியைத் தரிசிக்கும் சக்தியுடையவன் தனது மூச்சுக்காற்றை பிரபஞ்சம் முழுவதும் பரவும் ஒளியாகக் காண முடியும்.