பாடல் #391: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரணனு மாய்உல காய்அமர்ந் தானே.
விளக்கம்:
அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாகக் காரணமானவனாகிய சதாசிவமூர்த்தி அனைத்திலும் அன்பாகக் கலந்து இருக்கின்றான். அண்ட சராசரங்கள் அனைத்திலும் உடலாக இருக்கும் பொருட்கள் அனைத்தையும் தாங்கிக் காப்பாற்றி நிற்கும் திருமாலாகவும் அவனே இருக்கின்றான். அந்த அண்ட சராசரங்கள் அனைத்திலும் உயிர்களை அன்போடு வேதங்கள் ஓதி உருவாக்கும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனாகவும் அவனே இருக்கின்றேன். அண்ட சராசரங்கள் அனைத்துமாகவும், அதிலிருக்கும் பொருட்களாகவும் அதில் வாழும் உயிர்களாகவும் இருந்து அன்பினால் கட்டி வைத்திருப்பவன் சதாசிவமூர்த்தியாகிய இறைவனே.