பாடல் #1437

பாடல் #1437: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)

ஒன்று மிரண்டு மிலதுமா யொன்றாக
நின்று சமைய நிராகார நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒனறு மிரணடு மிலதுமா யொனறாக
நினறு சமைய நிராகார நீஙகியெ
நினறு பராபரை நெயததைப பாதததாற
செனறு சிவமாதல சிததாநத சிததியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒன்றும் இரண்டும் இலதும் ஆய் ஒன்று ஆக
நின்று சமைய நிராகார நீங்கியே
நின்று பராபரை நேயத்தை பாதத்தால்
சென்று சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.

பதப்பொருள்:

ஒன்றும் (நான் என்ற ஒன்றை நினைப்பதும் இல்லாமல்) இரண்டும் (நானும் இறைவனும் என்று இரண்டாக நினைப்பதும் இல்லாமல்) இலதும் (நானும் இறைவனும் வேறு வேறு என்று நினைப்பதும் இல்லாமல்) ஆய் (அனைத்தும்) ஒன்று (இறைவன் ஒருவன் மட்டுமே) ஆக (எனும் எண்ணத்தில்)
நின்று (நின்று) சமைய (உலக நியதிகளில் பல விதமாக) நிராகார (இறைவன் என்று உருவாக்கி வைத்து இருக்கும் உருவங்களை) நீங்கியே (நீக்கி விட்டு)
நின்று (உருவமே இல்லாத அன்பில் நின்று) பராபரை (பரம்பொருளாகிய) நேயத்தை (இறைவனின் பேரன்பின் வடிவத்தை) பாதத்தால் (இறைவனது திருவடியின் அருளினால்)
சென்று (இறைவனை சென்று அடைந்து) சிவம் (அன்பே சிவமாக) ஆதல் (ஆகி விடுவதும்) சித்தாந்த (சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற பேரறிவை) சித்தியே (பெறுவதுமே மார்க்க சைவத்தின் வழிமுறைகள் ஆகும்).

விளக்கம்:

நான் என்ற ஒன்றை நினைப்பதும் இல்லாமல் நானும் இறைவனும் என்று இரண்டாக நினைப்பதும் இல்லாமல் நானும் இறைவனும் வேறு வேறு என்று நினைப்பதும் இல்லாமல் அனைத்தும் இறைவன் ஒருவன் மட்டுமே எனும் எண்ணத்தில் நின்று உலக நியதிகளில் பல விதமாக இறைவன் என்று உருவாக்கி வைத்து இருக்கும் உருவங்களை எல்லாம் நீக்கி விட்டு உருவமே இல்லாத அன்பில் நின்று பரம்பொருளாகிய இறைவனின் பேரன்பின் வடிவத்தை இறைவனது திருவடியின் அருளினால் சென்று அடைந்து அன்பே சிவமாக ஆகி விடுவதும் சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற பேரறிவை பெறுவதுமே மார்க்க சைவத்தின் வழிமுறைகள் ஆகும்.