பாடல் #1435: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)
வேதாந்தங் கண்டோர் பரமித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மில்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதாரண மன்ன சைவ ருபாயமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
வெதாநதங கணடொர பரமித தியாதரர
நாதாநதங கணடொர நடுககறற யொகிகள
வெதாநத மிலலாத சிததாநதங கணடுளொர
சாதாரண மனன சைவ ருபாயமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
வேத அந்தம் கண்டோர் பரம வித்தியாதரர்
நாத அந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள்
வேத அந்தம் இல்லாத சித்த அந்தம் கண்டு உளோர்
சாதரணம் அன்ன சைவர் உபாயமே.
பதப்பொருள்:
வேத (வேதத்திற்கு) அந்தம் (எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை) கண்டோர் (கண்டு அறிந்து கொண்டவர்கள்) பரம (மிகவும் உன்னதமான நிலையில்) வித்தியாதரர் (மெய் ஞானம் உலக ஞானம் ஆகிய அனைத்தையும் கற்று அறிந்தவர்கள் ஆவார்கள்)
நாத (நாதத்திற்கு) அந்தம் (எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை) கண்டோர் (கண்டு அறிந்து கொண்டவர்கள்) நடுக்கு (சித்தத்தில் நடுக்கம் சிறிதும்) அற்ற (இல்லாமல் எப்போதும் இறைவனையே சிந்தித்து கொண்டு இருக்கும்) யோகிகள் (யோகிகள் ஆவார்கள்)
வேத (வேதத்திற்கு) அந்தம் (எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை) இல்லாத (அறிந்து கொள்ளாத) சித்த (வெறும் உலக அறிவுக்கு) அந்தம் (எல்லையைக்) கண்டு (கண்டு) உளோர் (இருக்கின்ற மார்க்க சைவர்கள்)
சாதரணம் (சாதாரணம்) அன்ன (என்று சொல்லப்படும் பொதுவான) சைவர் (சைவர்களின்) உபாயமே (வழியையே கடை பிடிக்கின்றார்கள்).
விளக்கம்:
வேதத்திற்கு எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை கண்டு அறிந்து கொண்டவர்கள் மிகவும் உன்னதமான நிலையில் மெய் ஞானம் உலக ஞானம் ஆகிய அனைத்தையும் கற்று அறிந்தவர்கள் ஆவார்கள். நாதத்திற்கு எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை கண்டு அறிந்து கொண்டவர்கள் சித்தத்தில் நடுக்கம் சிறிதும் இல்லாமல் எப்போதும் இறைவனையே சிந்தித்து கொண்டு இருக்கும் யோகிகள் ஆவார்கள். இப்படி இல்லாமல் வேதத்திற்கு எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை அறிந்து கொள்ளாத வெறும் உலக அறிவுக்கு எல்லையைக் கண்டு இருக்கின்ற சைவர்கள் சாதாரணம் என்று சொல்லப்படும் பொதுவான சைவர்களின் வழியையே கடை பிடிக்கின்றவர்கள் ஆவார்கள்.
குறிப்பு: வேதத்திற்கும் நாதத்திற்கும் எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை அறிந்து கொள்ளாமல் வெறும் உலக கல்வியை மட்டும் அறிந்து கொண்டு சைவத்தை கடைபிடிப்பவர்கள் சாதாரண சைவர்கள் ஆவார்கள். வேதத்திற்கும் நாதத்திற்கும் எல்லையாக இருக்கின்ற பரம்பொருளை அறிந்து கொண்டு மார்க்க சைவத்தை முறைப்படி கடைபிடிப்பவர்கள் உண்மையான மார்க்க சைவர்கள் ஆவார்கள்.