பாடல் #1434

பாடல் #1434: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)

மாறாத ஞான மதிபர மாயோகந்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகு ஞான சரிதை குறிப்பிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மாறாத ஞான மதிபர மாயொகந
தெறாத சிநதையைத தெறறிச சிவமாககிப
பெறான பாவனை பெணி நெறிநிறறல
கூறாகு ஞான சரிதை குறிபபிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மாறாத ஞான மதி பர மாயோகம்
தேறாத சிந்தையை தேற்றி சிவம் ஆக்கி
பேறு ஆன பாவனை பேணி நெறி நிற்றல்
கூறு ஆகும் ஞான சரிதை குறிப்பிலே.

பதப்பொருள்:

மாறாத (எந்தக் காலத்திலும் மாறாத உண்மையான) ஞான (ஞானத்தை தமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து) மதி (அந்த அறிவால்) பர (பரம் பொருளை அடையும்) மாயோகம் (மாபெரும் யோகத்தை செய்வதும்)
தேறாத (தெளிவாக இறையை உணர்ந்து கொள்ளாத) சிந்தையை (சிந்தனையை) தேற்றி (தெளிவு படுத்தி) சிவம் (சிவம் எனும் பேரன்பாக) ஆக்கி (ஆக்குவதும்)
பேறு (கிடைப்பதற்கு மிகவும் அரிய பேறு) ஆன (ஆக இருக்கும்) பாவனை (அருள் பாவனைகளை) பேணி (கடைபிடித்து) நெறி (அருள் வழியே) நிற்றல் (மாறாமல் நிற்பதும்)
கூறு (அங்கங்கள்) ஆகும் (ஆகும்) ஞான (மார்க்க சைவத்தின் ஞான வழியைக் கடைபிடிக்கும்) சரிதை (சரியை எனும் முறையை) குறிப்பிலே (குறிப்பாக வைத்து சாதகம் செய்யும் சைவர்களுக்கு).

விளக்கம்:

எந்தக் காலத்திலும் மாறாத உண்மையான ஞானத்தை தமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து அந்த அறிவால் பரம் பொருளை அடையும் மாபெரும் யோகத்தை செய்வதும் அதன் பயனால் தெளிவாக இறையை உணர்ந்து கொள்ளாத சிந்தனையை தெளிவு படுத்தி சிவம் எனும் பேரன்பாக ஆக்குவதும் அதன் பயனால் கிடைப்பதற்கு மிகவும் அரிய பேறாக இருக்கும் அருள் பாவனைகளை பெற்று அவற்றை கடைபிடித்து அருள் வழியே மாறாமல் நிற்பதும் ஆகிய இந்த மூன்றும் மார்க்க சைவத்தின் ஞான வழியைக் கடைபிடிக்கும் சைவர்கள் குறிப்பாக வைத்து சாதகம் செய்கின்ற சரியை எனும் முறைக்கு அங்கங்கள் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.