27-11-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
இறைவன் எம்மை ஒதுக்கிவிட்டாரா?
இறைவன் எவரையும் ஒதுக்குவது இல்லை. நாம்தான் ஒதுங்கிச் செல்கின்றோம். இறைவன் எப்போதும் நமக்கு முன்னால் இருக்கின்றான். ஆனால் நாம் அதை உணர்வதில்லை என்பது நமது குறையாகின்றது எனபதே உண்மையான நிலை. இது இறைவனின் குறையல்ல என்பதை நன்கு உணர்தல் வேண்டும். நம்மிடம் இருக்கும் இறைவனை நாம் உணர வேண்டுமென்றால் அதற்கு உண்டான சில சாதனைகளில் ஈடுபடுதல் வேண்டும். பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடங்கள் சாதனைகள் செய்தபின் இறைவன் என்னை விட்டு நீங்கிவிட்டான் என்று சொல்வது வெறும் மடமையான (அறியாமை) சிந்தனை. இந்த நோய் பலருக்கும் உண்டு. சிறிது நேரம் சாதனைகள் செய்திட இறைவன் நமக்கு முன் தோன்றுதல் வேண்டும் காட்சியளித்தல் வேண்டும் யாம் அவரை உணர்தல் வேண்டும் என்பதெல்லாம் ஒருவித மன நோயே. சாதனை என்பது ஒரு நாள் இரண்டு நாள் செய்வது அல்ல எதிர்பார்ப்பின்றி பல ஆண்டுகள் செய்த பின்பே இறைவன் நம்மோடு இருப்பதை உணர இயலும். இதனை யாம் கூறுகின்றோம் என மன வருத்தம் வேண்டாம். இதுவே உண்மையான நிலை. இருப்பினும் இக்கலியுகத் தன்மைக்கு இதனை சிறிது எளிதாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் எப்பொழுதும் இறைவன் நம்மோடு இருக்கின்றான் என்கின்ற ஓர் மன பாவனை (எண்ணத்தை) வளர்த்தல் வேண்டும். இது ஒன்றே சிறப்பான வழி. எப்பொழுதும் இறைவன் நம்மோடு இருக்கின்றான் என பாவனை செய்தால் நாமும் நம் பழக்க வழக்கங்களிலும் மன பழக்கங்களிலும் சிறிது சிரத்தை (ஈடுபாடு) காட்டுவோம் என்பதும் உண்மையே. தாய் தந்தை நம்மோடு இருக்கின்றார்கள் என்றால் தகாத காரியங்கள் நாம் செய்ய மாட்டோம் அல்லவா? இத்தகைய நிலையை இறைவனுக்கு நாம் அளித்து நம் வீட்டில் எப்பொழுதும் அவர் இருக்கின்றார் நாம் வெளியில் செல்லும் போது நம்முடன் வருகின்றார் என சிந்திக்கத் துவங்கிவிட்டால் தவறுகள் குறையும் மன வலிமை உண்டாகும். நாம் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். நாம் எண்ணியது போல் நடக்கவில்லை என்றால் மன வருத்தம் எவருக்கும் இருத்தல் வேண்டாம். ஏனெனில் எண்ணியது அனைத்தும் நடந்துவிட்டால் இறைவன் இல்லை என்ற ஓர் சொல்லும் உண்டு. ஆகவே அனைத்தும் அவன் விருப்பப்படி நடக்கின்றது என்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்பதே எமது அறிவுரையாகின்றது.