பாடல் #88: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண்டன் என்றயன் பொய்மொழிந் தானே.
விளக்கம்:
தமக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் திருமாலும் வாதிட்டுக் கொண்டிருந்தபோது சிவபெருமான் ஒரு மாபெரும் நெருப்புத் தூணாக நின்று இத்தூணின் அடியையோ அல்லது உச்சியையோ காண்பவரே பெரியவர் என்று அறிவித்தார். பிரம்மன் பறந்து உச்சியைக் கண்டுவிடலாம் என்று நினைத்து அன்னப் பறவையாக பறந்து சென்றார். திருமால் பூமியைக் குடைந்து அடியை கண்டுவிடலாம் என்று நினைத்து பன்றியாக குடைந்து சென்றார். இருவரும் தங்கள் எண்ணப்படி அடியையும் உச்சியையும் காணாமல் பூமியின் மேல் வந்து நின்ற அடியைக் காண முடியவில்லை என்று திருமால் ஒப்புக்கொண்டார். பிரம்மன் உச்சியைக் கண்டுவிட்டேன் என்று பொய் கூறினான்.
உள் விளக்கம்:
இந்தப் பாடலில் திருமூலர் ஒரு புராணக் கதையை சித்தரிப்பது போல இருந்தாலும் இறைவனின் திருவடிகளை கண்டு அவன் திருவடிகளின்கீழ் இருப்பதே பேரின்பம் என்பதை அனுபவத்தில் கண்டு அறிந்த திருமூலர் (பாடல் #82 இல் கூறியபடி) அந்தப் பேரின்பத்தை அனைவரும் அடையும் வழியாகவே திருமந்திரத்தை வழங்கினோம் என்பதையே இங்கு உணர்த்துகிறார்.